சின்ன வயதில் டவுசர் பைகளில் குலுங்கும் பளிங்கிகளை இறுகப்பிடித்து பைய வீட்டுக்குள் நுழைந்து அம்மா அப்பாவிடம் அடி வாங்காமல் தப்பித்தவர்கள் இப்பதிவை படிக்கவேண்டாம் :-)
ப வடிவில் காம்பவுண்டிலிருத்து வெளியே கோடு கிழித்து நடுவில் ஒரு குழி.
நாலடி தள்ளி நின்று பளிங்கி (மார்பில்ஸ்/ கோலிகுண்டு) களை வீசவேண்டும். குழிக்குள் விழுந்தது வீசுபவனுக்கு சொந்தம். மிச்சமிருக்கும் பளிங்கிகளில் எதிராளி கைகாட்டும் ஒற்றையை, அது எத்தனையோடு ஒட்டியிருந்தாலும் துள்ளியமாய் குண்டு வீசி அடித்தால், மொத்தமும் அடித்தவனை சேரும்.
குறி தப்பினால் எதிராளியின் முறை.
இப்படி பளிங்கு சொத்து சேர்த்து, இழந்து. சேர்த்து என பள்ளி நாட்களின் மாலைகளில் தீயாய் வேலை செய்த ஒரு தலைமுறை.
ஐந்தில் வளைந்தது ஐம்பதிலும் வளையும்!
ஒரு போட்டி: சாலையில் ஒரு சிறு கல்லை பொறுக்கி எடுத்து, அருகில் ஏதாவது ஒரு இலக்கின்மீது எறிந்துபாருங்கள். லாக்கு விளையாடியவர்களால் மட்டுமே குறி தப்பாது அடிக்க முடியும்; பயிற்சி இல்லாமலே!
இன்றைய சிறுவர் / சிறுமியரிடம் ஒரு சிறு கல்லை கொடுத்து, இந்தப்போட்டியை சொல்லி, முயற்சி செய்யச்சொல்லுங்கள். கல் எறிந்ததும் கண்காணாத தூரத்திற்கு தலைதெறிக்க ஓடிவிடுங்கள்!!!
(அவர்களுக்கு இலக்கே கிடையாது :-)
பின்குறிப்பு:
இன்றைய தேதியில் சில ஆயிரங்கள் செலவு வைக்காத குழு விளையாட்டுக்கள், சிறு பிள்ளைகளுக்காக, எதுவுமே கிடையாது! இன்று இதே விளையாட்டை வெளி நாடு ஒன்றில் காலுக்கு ரீபோக் ஷூ, கைகளுக்கு க்ளவுஸ் என Golf ரேஞ்ச்சுக்கு அப்க்ரேட் ஆனால் மட்டுமே நாம் நம்ம ஊருக்கு டவுன்லோட் செய்வோம்போல :-)
கருத்துகள்
கருத்துரையிடுக