முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழைப்பிதழ் / You are invited!


நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என என் இரு தமக்கையரோடு உன்னத வாழ்க்கை. எங்கள் ராஜியத்தில் 'குறையொன்றுமில்லை' என மக்கள் புகழ் எம் தந்தையின் ஆட்சி. பதின்ம வயதில் நாங்கள் மூவர். நான் கடைக்குட்டி. எனக்குள் காதல் எட்டிப்பார்த்த பருவம்.

எல்லாமே மாறிப்போச்சி ஒரு நாளில்.

நிகரற்ற வீரனொருவன் வருகிறான் என விழாக்கோலம் எங்கெங்கும்.

வந்தவன் வீரன்தான், மாவீரனாயும் இருக்கலாம். மணம் பேச வந்ததாய் சேதி. அவனுக்கல்ல, அவனது தகப்பனின் இன்னொரு மகனுக்காம்.

எங்கு எது தப்பாச்சு என அறியுமுன்னே போர் முழக்கம். விரைந்து எங்கள் நாட்டைவிட்டு வெளியே இழுத்துச்செல்லப்பட்ட தேரில் நாங்கள் மூவரும் அடைபட்டிருந்தோம். சிறைப்பட்டிருந்தோம்.

சினத்தில் சிவந்து, தேர் ஓட்டிய மாவீரனை கேள்விகளால் துளைத்தேன்.

'ஏன் மூவர்?'

"அவனுக்கு உங்களில் யார் வேண்டும் என நான் அறியேன். மூவரையும் மணந்தாலும் சரியே என்பதால்..." என்றது வீரம்.

'நான் மனதால் முன்னரே மணமானவள். என்னை என் காதலனிடமிருந்து பிரிக்காதே, விட்டுவிடு' என இறைஞ்சினேன். கங்கை மைந்தனின் காதில் ஏறவில்லையே.

பின்னால் புழுதிப்படலம். தன் சிறு படை கொண்டு என்னவன் எனை மீட்க...

மாவீரன் வென்றான். என் காதலன் நிலம் நோக்கி பின் சென்றான்.

வேற்றூரில் அந்த அரசன், என் தமக்கைகள் இருவரையும் மணந்தான். எனை விடுத்தான்.

'என்னூரில், என் இணையிடம் இப்போதாவது எனை திருப்பிவிடு' என இறைஞ்சினேன் மாவீரனிடம், மறுபடியும்.

'வேறென்ன செய்வது' என அவனும் இசைந்தான்.

'போரில் தோற்ற ஒன்றை திரும்பப்பெறுவது சத்ரியனுக்கு அழகல்ல' என தோற்றவன், என் காதலன், எனை ஏற்க மறுத்தான். 

அபலையாய் நான்...

'மாவீரா, மானமுடன் நான் வாழ நீயேனும் மாலையிடு. நீ துவக்கி வைத்த தவறை நீயே சரி செய்' என வேறு வழியின்றி கதறினேன்.

"தந்தைக்கு நான் தந்த வாக்கு... நான் ப்ரம்மச்சாரி. நிலைமாற மாட்டேன். போகிறேன்" போய்விட்டான், எனை தனியே நடுச்சந்தியில் விட்டு.

கையறு நிலையிலும் தெய்வம் உதவும் என இறைதவம் துவங்கினேன். கடுந்தவம். இறை நெகிழ்ந்து அருள் தந்தது. 

"வேண்டுவது என்ன?" என இறை விளிக்க,

'பீஷ்மன் சாவு, என் கையால்' என்றேன்.

'நடக்கும், அடுத்த பிறவியில்' என இறை வாழ்த்தி மறைய, அடுத்த பிறவிக்கு காத்திருக்க விருப்பமின்றி நொடியில் மாய்த்தேன் எனதுயிரை.

மீண்டும் உயிர்த்தேன், ஆணென எண்ணி பார்ப்பவர்க்கு ஆணாகவும், பெண்ணென எண்ணி பார்ப்பவர்க்கு பெண்ணாகவும் தோன்றும் விசித்திர மானுடமாய். 

விடாது வில்வித்தை பயின்றேன். தவம் புரிந்தேன், வில்லொன்று இறை தந்தது.

பெரும்போர் துவங்கியது. களம் இறங்கினேன்.

உங்களைப்பொருத்தவரை இந்தப்போர் ஐவரின் மனைவியை நூற்றுவர் தலைவன் மானபங்கப்படுத்தியதால் விளைந்தது. 

ஆனால் உண்மை என்ன தெரியுமா?
இந்தப்போரை இறை தொடக்கிவைத்தது, பிறவிகளின் ஊடாக மானபங்கப்பட்டு அலையும் என் வேண்டுதலை நிறைவேற்ற மட்டுமே!!


சிகண்டி எனது பெயர். பீஷ்மன் என் இலக்கு. அவன் சாவு என் கையில். சொல்லி அனுப்புகிறேன், கொண்டாட வந்து சேருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...