முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செங்குருதி மரம்


செங்குருதி மரம் (Dogwood Tree)
 --------------------------+--------------------------

பெருங்காடொன்றில் மகிழ்வாய் பூச்சூடி நின்றிருந்தேன் பலகாலம்.

கோடரியோடு மனிதனொருவன் ஒரு நாள் வரும்வரை.

'நிழல் வேண்டுமா?' என்றேன்.

'நீதான் வேண்டும்' என்றான்...

ஓட முடியுமா என்ன, என்னால்?

'ஏன் நான்?' என்றேன்.

'ஒரு நாள் சரியப்போகும் நீ, அதன்பின் எதுவாகப்போகிறாய் என்பது உனக்குத்தெரியாது. ஆனால் இருக்கும்போதே எதுவாகப்போகிறாய் என நீ தெரிந்துகொள்ள இறை சித்தம். தயாரா?' என்றான்.

என்னுள்ளே இறையூற்று ஒன்று திறந்தது. சம்மதித்தேன்.

'காலம் உள்ள வரை நீ இருப்பாய், சாகா வரம் பெற்றாய்'  என வாழ்த்திக்கொண்டே என் வேர்களை வெட்டி என்னை வீழ்த்தினான்.

வலி பொறுத்து கவனித்தேன். என்னை வண்டியிலேற்றி கானக எல்லையில் சேர்த்தான். இறையூற்று என்னை சாகாமல் காக்க, வரம் பெற்ற மகிழ்வோடு ஒத்துழைத்தேன், இழைத்த இழைப்புக்கெல்லாம்.

எப்பொழுது கண்ணயர்ந்தேன் எனத்தெரியவில்லை. யாரோ என்னை நகர்த்திய உணர்வில் கண் விழித்தேன்...

காது கிழியும் இரைச்சல், நடு வீதியில் நான், யாரோ சுமக்க ஊரார் சிலர் ஓலமிட்டு அழ, பலரோ துள்ளிக்குதித்து என்னைச்சுற்றி எள்ளி நகையாட... என்ன நடக்கிறது என சுத்தமாய் புரியவில்லை. பறவைகளின், விலங்குகளின் நட்புக்குரல் மட்டுமே கேட்டிருந்த எனக்கு 'ஏதோ தவறாச்சு' என்று மட்டும் புரிந்தது, மனம் கனத்தது.

கனம் தாங்க இயலாமல் எனைச்சுமந்தவன் தள்ளாடி விழ, மேலும் குழப்பம், கூக்குரல். எதிர்வழி வந்த ஒருவனை சிலர் நிறுத்தி, விழுந்தவன் சுமையை முட்டுக்கொடுக்கவைத்தனர். பயணம் தொடர்ந்தது...

கூக்குரல் ஓலம் உச்சம்தொட, ஓரிடத்தில் நிறுத்தப்பட்டேன், உயர்த்தப்பட்டேன், மீண்டும் நடப்பட்டேன், வேரற்ற போதிலும்.

தள்ளாடி எனை சுமந்தவனும் உயர்த்தப்பட்டான், என்னோடு சேர்க்கப்பட்டான், உயரத்திலிருந்து விழாமல் இருக்க கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் 'காக்கப்பட்டான்'.

கூர் ஆணிகளிட்ட துளைகள் வழியே என்னுள் இறங்கியது சொட்டுச்சொட்டாய் அவன் குருதி. 

'பாவம் அவர்கள். தன் செயலின் தீவிரம் தெரியாதவர்கள்' என ஆணிகளூடே அவன் முனகலும் இறங்கியது என்னுள். 

'என்ன பிறவி இவன்????!!!!!' என வியந்து நின்றேன், நிற்கிறேன்...

அன்று முதல், இன்று வரை, என் வழி வந்தோர் சுமந்து நிற்பர் செங்குருதியில் தோய்ந்த தூய மலர்களை...





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...