நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி.
அரும்பாடுபட்டு உயிர் ஒன்று மெய் சுமந்து, உயிர் சுமந்து பத்து மாதம் காத்து 'பெற்றதை' சில்லு சில்லாய் உடைந்துபோகும் அளவு கூத்தாடி போட்டுடைப்பதுதான் வாழ்வா?
இந்தப்பாடல் சொல்லும் கருத்து இதுதானா?
எனக்கென்னவோ இதைப்பாடியவர் உலகை வெறுத்து ஆடியது போல் தோன்றவில்லை.
கூடலும், உயிர் கூடலும், கருவுறுவதும், உருவம் பெறுவதும், பெற்றது உலகை உணர்வதும் எந்த உயிரும் வேண்டிப்பெறுவதில்லை, எண்ணிச்சுமப்பதில்லை; பறவைக்கும் அதுவே, நமக்கும் அதுவே. இதில் நாலாறு மாதம் என்ன குயவனை வேண்டி?
இந்த உடல் என்பது பானையென்றால் அதில் இட்டு நிரப்பியது கூத்தாடி உடைந்ததா அல்லது பானை கூத்தாடி உடைந்ததால் (இறை) இட்டு நிரப்பியது சிதறிப்போனதா?
தோண்டியை நிரப்புவது பற்றி பாடலில் எதுவுமில்லை...
கடுவெளி என்பது வெட்டவெளி, open space.
இந்த வெட்ட வெளியை, சூனியத்தை தியானித்து சித்தி பெற்றவர் என்பதால் கடுவெளி சித்தரனாவர், நாமறிந்த இறையாவையும் இயக்கும் பேரிறையிடம்( வெட்டவெளி) இறைஞ்சிப்பெற்ற ஞானம்...
அதை தன்னுள் தளும்பத்தளும்ப நிரப்பி, களி கொண்டு ஆடி, உடையும் வரையில் ஆடி, உடைந்து வெட்டவெளியில் கலப்பதையே (மண்ணிலிருந்து 'தோண்டி' குயவன் செய்த தோண்டி, சுக்கலாகிப்போனால் மண்ணோடு மீண்டும் ஐக்கியமாவது போல) பாடியிருக்கலாம்.... அதன் பொருள் இப்படியும் இருக்கலாம். இதில் நமக்கான வாழ்வியலும் நிரம்பியிருக்கலாம்...


கருத்துகள்
கருத்துரையிடுக