அம்பாசமுத்திரம் - திருநெல்வேலியில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஒரு அழகிய பேரூர். அருவிகள், மலைகள், தாமிரபரணி ஆறு என்று இயற்கையோடு இயைந்த ஊர்.
அங்கு விவசாயம் செய்து நன்கு வாழ்ந்துவந்த ஒரு குடும்பத்திலிருந்து ஒருவன் இன்று பிழைப்புக்காக ஒரு பெரு நகரில் காரோட்டிக்கொண்டிருக்கிறான், தினமும் காலையில் 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை.
குழந்தைகள் மேல்தட்டு பள்ளியில் படிக்க, விவசாயத்தை நம்பியுள்ள பெற்றோருக்கு பணமனுப்ப, வசதிகளை பெருக்கிக்கொள்ள என்று அவனுக்கு ஆயிரம் காரணங்கள். 20 நிமிட பயண உரையாடலில் தன் வரலாற்றையே சொல்லிவிடும் ஆவலுடன் (கேட்பவர் குறைவு) தன் புலம் பெயர்தலை என்னிடம் பதிவு செய்தான். தான் இருக்கும் பெரு நகர வீட்டில் தொட்டிகளில் செடிகள் வளர்ப்பதாகவும் அவற்றோடு ஒரு நாளில் சில நிமிடங்களாவது பகிர்ந்துகொண்டால்தான் அன்றைய தினம் நன்றாக இருப்பதாகவும் அவன் சொன்னபோது அவன் கண்களில் தெரிந்தது தொட்டிகளில் அவனது அம்பாசமுத்திர வயல்.
இறங்கும்போது கேட்டேன், 'எத்தனை காலம் இப்படி?'
'போய்டுவேன் சார், பசங்க பெரிசாயிட்டாங்கன்னா எனக்கு இங்கென்ன வேலை? அருவி இருக்கு, ஆறு இருக்கு, மலை இருக்கு, வயல் இருக்கு, போதும் சார்'
The Alchemist இல் புதையல் தேடி வெகு தேசங்கள் அலைந்து இறுதியில் அது தன் சொந்த ஊரில் தான் எப்போதும் உறங்கும் இடத்திலேயே இருப்பதை அறியும் சந்தியாகோவுக்கும் இவனுக்கும் உள்ள வித்தியாசம்...இவனுக்கு புதையல் இருக்குமிடம் தெரிந்தே இருக்கிறது!

கருத்துகள்
கருத்துரையிடுக