வசந்தாம்மாவின் வீடு அவரைப்போலவே தண்மையானது.
கேரளத்திலிருந்து வேலைக்கு வந்த இடத்தில் தமிழ்க்காதல் கரம் பற்றி தமிழக சிற்றூர் ஒன்றில் வீட்டைச்சுற்றிலும் கேரளத்தையும் வீட்டுக்குள் அளவற்ற அன்பையும் கொண்டு அவர் இருந்தார் இறுதி வரையில்.
என் பதின்ம வயதில் நான் விளையாடிய இல்லம், மூன்று குழந்தைகள் கொண்டு நிரப்பப்பட்ட அவர் வீடு என்னையும் அன்போடு உள்ளிழுத்து அணைத்தது. எனக்கு முன்னே பிறந்த என் ரத்த உறவுகளை தூக்கி வளர்த்தவர் என்னிடமும் காட்டியது மாறா அன்பு...
பறவைகள் நிறைந்த அவ்வீட்டில் நான் உண்ட முதல் முட்டை, 1983 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதியாட்ட ரேடியோ வர்ணணையை அவர்களில் ஒருவனாக நான் கேட்டு இந்திய வெற்றியை நள்ளிரவில் கொண்டாடியது, அவர் கணவரின் அளப்பறிய அன்பு, நான் வளர்ந்தபின்னும் ஒவ்வொரு முறையும் சந்தித்த நொடியில் எனக்குள் இருக்கும் சிறுவனை வெளியிழுக்கும் அவர் உதிர்க்கும் 'வாய்யா' எனும் ஒற்றை வார்த்தை, தேனீர் தருமுன் ஆற்றி ஒரு மிடறு அருந்திப்பார்த்து எனக்களிக்கும் வாஞ்சை என்று எண்ணிக்களிக்க நினைவுத்துகள்கள் ஏராளம்.
கணவரைச் சீண்டுவதும் கணவர் மெல்லிய புன்முறுவலோடு பதிலின்றி அவற்றைக்கடப்பதும், இன்றளவும் என்னால் கற்க இயலாத வாழ்வியல் பாடம்.
மக்களில் இருவர் கண்டங்கடந்த பெருமருத்துவர், மூன்மறாவரும் பெரு நிறுவன உயரதிகாரி. வாழ்வு அவர்களை இட்டுச்சென்ற தூரங்களை அவ்வப்போது கடந்து, கண்டு, மீண்டு என வாழ்ந்தவருக்கு வயோதிக வடுக்களாய் உடல் உபாதைகள். துன்பங்கள் அனைத்தையும் அமைதியாய் தாங்கி அந்திமம் வரை மன உறுதி குறையாத உன்னத ஆத்மா, கூடு விட்டு வீடடைந்த செய்தி கேட்டு விரைந்தேன் இறுதி சந்திப்புக்காக.
தம் மக்களும் மக்களின் மக்களும் சூழ சில நாட்கள் மருத்துவமனையில் போராடிக்களைத்து வீடு திரும்பி பிரிந்தவரை வழியனுப்புகையில் 'அம்மா அம்மா அம்மா அம்மா' என்ற ஒற்றை வார்த்தையுடன் நெஞ்சு பொறுக்காத வலியோடு மூத்த மருத்துவ மூத்த மகள் தாயிழந்த பூனைக்குட்டிபோல சுற்றிவந்த காட்சி என்னோடே தங்கிவிட்டது...
50 வருட குடும்ப நண்பரை இழந்த என் பெற்றோர் இழந்தது அவர்கள் வாழ்வின் ஒரு பெரும்பகுதியையும்தான் என்பதையும் உணர்ந்த நிமிடம் அது...
'வாழ்ந்து' மறைந்தவர்தான் என்றாலும் மரமடுக்கி கிடத்தி பூசி மெழுகிட்டு தீ தின்னக்கொடுத்தபோது கவ்விய சோகம் இன்னும் அகலவில்லை...
அவரில்லாத வீட்டில் அத்தனை மரங்கள், அவர் வைத்த மரங்கள், இன்றும் அவரைத்தேடிக்கொண்டிருக்குமென்றே தோன்றுகிறது. இல்லை இல்லை அவர் 'அவர்களானார்' என்ற எண்ணமும் வராமலில்லை...
என் இளம்பருவத்தை நிகழ்காலத்தோடு பிணைத்திருந்த நினைவுக்கண்ணிகளில் வலுவான ஒன்று விடைபெற்றுவிட்டது, உடைந்த சுவடே இன்றி.
அத்தை, I miss you.
கருத்துகள்
கருத்துரையிடுக