ஆல காலமாய் கால காலமாய்
நின்றெரியும் பெருவேள்வித்தீ.
தீ வளர்க்கும் சுள்ளிகள் நாம்...
'கிளரொளி' இளமை மட்டுமல்ல
தொன்றுதொட்டுத்தொடரும்
வாழ்வுச்சங்கிலியும் அவ்விதமே
என்ற நித்திய நியதி மறந்து
'சாம்பலாகிக்காற்றில் நீரில்
கரைந்தாலும் ஒட்டோம் உறவோம்'
என நிலையறியாமல் துள்ளும்
சுள்ளிகளில் எழும் சுடரில்
எந்தச்சுடர் முதற்சுடர்?
எந்தச்சுடர் பெருஞ்சுடர்?
எவர் வேள்வியில் சுள்ளிகள் நாம்?
ஏனிந்த வேள்வி?
எங்கு தொடங்கிற்று?
எங்கு முடியும்?
என்ன கிட்டும்?
யாருக்கு?
தெரிந்தென்ன ஆகப்போகிறது
காலமற்ற வெளியில்
சுடராடும் சுள்ளிகளுக்கு?
சுடராடும் சுள்ளிகளுக்கு?

கருத்துகள்
கருத்துரையிடுக