நதிகளை மீட்கவும் காக்கவும் இணைக்கவும் மெய்நிகர் உலகிலும் மெய்யுலகிலும் தோள்தட்டும் நட்புகளுக்கு இப்பதிவு..
ஏதாவது செய்யவேண்டும் என எண்ணும் உரத்த சிந்தனையாளர்களில் அநேகருக்கு "எப்படி" என்பதில் உள்ள வாழ்வியல் சிக்கல் புரியாமலே இருக்கிறது...
நதி செல்லும் வழியெங்கும் நதிக்கரையின் (இருபுறமும்) 1 கி மீ பரப்பிற்கு மரங்கள் நடுவது ஒரு திட்டம், அந்நதிகளுக்கு நீர்கொண்டுவரும் வழித்தடங்களையே காணவில்லை...சில இடங்களில் நதிகளே களவாடப்பட்டுவிட்டன.
ஒரு குழு drone களை பயன்படுத்தி மனிதர்கள் அணுக முடியா இடங்களில் மர விதைகளை தூவச்செய்து வருடத்திற்கு ஒரு கோடி மரம் நடப்போகிறது.
இன்னொரு புறம் 130 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு நாடே மரவெறி பிடித்து வெட்டித்தள்ளி கல்மரங்கள் நட்டுக்கொண்டிருக்கிறது. பல்லுயிர்கள் பெருகி வாழ்ந்த கிராமத்து நிலங்களில் 'மங்கள்யாண்' நகர்கள் அனுதினமும் முளைத்தவண்ணமுள்ளன.
அரசுகளோ அணைகள் மீது மாளாக்காதல் கொண்டு இமயத்தில் இயற்கையோடு மோதிக்கொண்டிருக்கின்றன. இயற்கை வெல்லும்பொதெல்லாம், ஒரிசாவில் வெள்ளம், பீகாரில் வெள்ளம் என அலறுகிறோம். கோசி எனும் நதி நம் தொல்லை தாங்கமுடியாது அவ்வப்போது தன் வழித்தடத்தையே மாற்றிக்கொள்கிறது...
நதிகளும் காடுகளும் நாம் கைகாட்டும் இடங்களில் மட்டுமே இருக்கவேண்டும், ஒடுங்கவேண்டும் என்ற எண்ணமே தவறு. அதனினும் தவறு விலங்கினங்களுக்கு பாதை 'ஒதுக்குவது'...
காடும் நதியும் பிறர் செய்ய வாரா!
மழை நீர் பனியாய் மலைமுகடுகளில் தங்கி கதிரால் உருகிப்பெருகியோடும் நதியாக மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி. இது நீரின் இயல்பு, கடலிலோ ஏரியிலோ முடியும்வரை இதில் மாற்றமில்லை. கடலிலிருந்தும் ஏரியிலிருந்தும் கதிரவன் வான் நோக்கி எறிய, காற்று குளிர்விக்க, மேகமாய்த்திரளும் நீர்த்திவலைகளை பசிய மரங்கள் தூண்டிலிட்டு மழையாய் மீண்டும் மண் சேர்க்கும் முடிவிலாச்சுழற்சியை வேடிக்கை பார்க்க மட்டுமே அனுமதியளிக்கப்பட்ட நாம், மனிதக்கூட்டம், என்ன செய்தோம்?
காக்கை குருவி கொன்று குவித்தோம், நீள் கடலும் மலையும் சுரண்டித்தின்றோம். 'நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை, நோக்க நோக்க களியாட்டம்' என ஜெயபேரிகை கொட்டினோம். நதிகளின் வழித்தடங்களை நெம்பித்தள்ளி கட்டிடங்கள் கட்டிவிட்டோம். நீர்வழிகளை அணைகள் கட்டி அடைத்துவிட்டோம். மீறி கசியும் நீரையும் நஞ்சாக்கினோம். ஆறுகள் பற்றியெரியும் அவலத்தை கண்டும் மறந்தோம். மண்ணுக்கும் மண்புழுக்களுக்கும் நஞ்சிட்டோம். உயிர்ச்சங்கிலியின் உன்னத பிணைப்புகளான யானை முதல் தேனீ வரை (keystone species) உடைத்துவிட்டோம்.
நதிகளை இணைத்தோம், பிரித்தோம், அழித்தோம். இயற்கை உருவாக்கிய மேடு பள்ளங்களை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்து புதியதோர் உலகு செய்தோம், சிட்டுக்குருவிகளும் ஊசித்தும்பிகளும் இன்றி.
பறவைகளும் விலங்குகளும் உருவாக்கிச்சென்ற காடுகளை அழித்து அவற்றிற்கே வழி 'வகுத்தோம்'. காடுகளுக்கும் மாற்றுக்குடியிருப்பு தருவதாய்ச்சொல்லி நம்மையே ஏய்த்தோம்.
பூமிப்பந்தில் நிற்கும் நம் கால்களின் கீழ் ஆயிரமாயிரம் நீர்நிலைகள் மறைந்து கிடக்கிறது (aquifer எனப்படும் நிலத்தடி நீர் சேமிப்பு நிலைகள்). இவற்றை நாம் நடும் மரங்கள் மட்டுமே வேர் வழியே அணுக முடியும். இம்மரங்கள் வளர நாம் ஊற்றும் தண்ணீர் இவற்றின் வேர் வளர்க்கும். வேர்கள் வழி மழை நீர் நிலத்தடி நீர்நிலைகளின் உள்சேர்ந்து தங்கும். இம்மழை நீர் மின்தூக்கி வழியே நம் வீட்டின் தாகம் தீர்க்கும். நாம் வளர்க்கும் மரங்கள் போதும் நம்மை வளர்க்க, அணைகள் தேவையில்லை ...It is a circle of life after all.
(ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் கட்டிய கல்லணை ஒரு 'நீர்வழிமாற்றி'யே அன்றி அணையல்ல. அது அணையானது 18ம் நாற்றாண்டில்தான்).
நதிகளை மீட்க எவரோ முயலட்டும், நதிகளை காக்க யாரோ முயலட்டும், நதிகளை இணைக்க மற்றோர் முயலட்டும். நம்மால் முடிந்தது ஒரு மரமேனும் நட்டு வளர்ப்பது; ஒற்றை மரம் பறவைகளை ஈர்க்கும், விலங்குகளை வரவேற்கும், ஒரு காட்டை உருவாக்கும், அனைத்தும் பல்கிப்பெருகும்...ஒரு புரட்சி நிகழும். நதிகள் வாழ்த்தும்!
நதிகளும் பிறக்கும், வளரும், மறையும் என்பதற்கு 'சரஸ்வதி'யே சாட்சி. அணை விரும்புவோர் நினைவில் கொள்க!

கருத்துகள்
கருத்துரையிடுக