ஆறாவது பூதம். மிகப்பெரும் ஆளுமைகளுக்கு அவர்களது பெயர் புகழை விட அவர்களது செயலின் தாக்கம் பெரிதாக இருக்கும். அவர் உலகுக்கே மகாத்மாவாக இருந்தால் என்ன? ஒரு தேசத்தின் தந்தையாக இருந்தால் என்ன?? பல கோடி சிறார்களுக்கு பாட்டனாய் இருந்தால் என்ன? பேரரசுக்கு ஒற்றை எதிரியாய் இருந்தால் என்ன? தாய்நாட்டை கூறுபோட பேரரசுக்கு கையாளாக இருந்தால் என்ன? இவை எதுவுமே ஒரு பொருட்டல்ல. நேற்றோ இன்றோ நாளையோ வேறு யார் வேண்டுமானாலும் மகாத்மா எனவோ, தேசத்தந்தை எனவோ, தேசத்தை கூறுபோட்டு விற்றவர் எனவோ அழைக்கப்படக்கூடும். இந்த அடைமொழிகள் அனைத்தும் காற்றில் ஆடி அறுந்துபோகும் ஒட்டடை அளவுகூட கால ஓட்டத்தில் நிலைக்கப்போவதில்லை. அப்படியானால் இன்றும் அவரிடம் நம்மை எது அல்லது எவை ஈர்க்கின்றன? அணுவை அணு அணுவாக அறிந்த, சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு தந்த ஐன்ஸ்டைன் என்ற பேராளுமை அறிவியலாளரால்கூட இதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. அவரால் சொல்ல முடிந்தது இது மட்டுமே: வரும் காலங்களில் வரப்போகும் எவராலும் "இப்படி ஒன்று ரத்தமும் சதையுமாய் இந்த பூமிப்பரப்பின்மீது நடந்தது என நம்பவே முடியாது!" என...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!