முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொல்லாடிய தமிழெங்கே?!


நெல்லாடிய நிலமெங்கே?
சொல்லாடிய தமிழெங்கே?

'டப்பா டப்பா வீரப்பா எப்போடாப்பா கண்ணாலம்?'

"மாசி பொறக்கட்டும், மல்லியப்பூ பூக்கட்டும்"

மண்ணும் மொழியும் மனிதருக்கு தரும் மேன்மையை வேறு எதுவும் ஈடு செய்யாது.

நெல்லாடிய நிலங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள், அங்காடிகள், ஆலைகள் என 'வளர்ச்சி' தாளத்துக்கு ஆடத்தொடங்கி இன்று ஓட்டமே வாழ்க்கையாய், ஆட்டமே இயல்பாய் எதியோப்பிய சோளத்திலிருந்து தயாராகும் சர்க்கரைக்கரைசலை அந்நிய உணவு வழி உள்ளே தள்ளி, வெளியேற்றுவதற்கு மருத்துவ உதவி தேடும் நம் அவசர தினங்களை இருக்கும் அளவுக்கு அலசியாச்சு. எனவே அதை தவிர்த்து 'சொல்லாடிய தமிழுக்கு' வருவோம்.

எழுபது எண்பதுகள் வரை தமிழ் சமுதாயம் மொழி பழகியது பள்ளிகளுக்கு வெளியேதான். இலக்கணம் மட்டுமே பள்ளிகளின் கடமையாக இருந்தது.

பேசு தமிழ் இயல்பான வாழ்வான சூழலில் "விளையாடு தமிழ்" என்று ஒன்று இருந்தது, மொழி வளர்த்தது...

சிறு குழந்தைகள் பேசத்தொடங்குமுன்னரே தாலாட்டுப்பாடல் வழி தொடங்கிய இந்தத்தமிழ், வளர் குழந்தைகளின் விளையாட்டில் இன்றியமையாததாக உருவேறியது.

எத்தனை விளையாட்டுக்கள், அத்தனையிலும் எத்தனை 'சொல் விளையாட்டுக்கள்'?!

பூவாம் பூவாம் பட்டணமாம், புதுச்சேரி பட்டணமாம்...

ஒருப்பட்டம் திருப்பட்டம் ஓரிய மங்கலம்...

ஒத்தையா, ரெட்டையா, பம்பையா, பரட்டையா...

ஒரு கொடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம்...

சிவாஜி வாயிலே ஜிலேபி...

ரெண்டு செட்டு சோள தோசைல ஒரு செட்டு சோள தோச சொத்த சோள தோச...

முள்ளு மொனையில மூணு கொளம் வெட்டுனேன்...

அத்த வீடு எங்கருக்கு ஆத்துக்கு அந்தப்பக்கம்...

தோத்தாங்குளி தோல்புடுங்கி...

வல்லினமும் மெல்லினமும் நாக்கு மடிந்து வழிந்தோட, லகரமும் ளகரமும், ரகரமும் றகரமும் குழப்பமின்றி குதித்தோட... எத்தனை எத்தனை தமிழ் விளையாட்டுக்கள்?!

ஓலப்பாயில ஒண்ணுக்கிருந்த மாதிரி என்ன சட சட ன்னு பேச்சு... வாய் ஓயாத பேச்சு...

எங்கே போச்சு எல்லாம்?!

மேலை நாடுகள் தாய்மொழி கல்வியை தம் தம் ஆரம்ப பள்ளிகளில் கட்டாயமாக்கியது ஏன்? என்று சிந்திக்கக்கூட விடாமல் நம் போட்டி வாழ்வியலின், ஓட்ட வாழ்வியலின் இடையறாத உந்துதலில் அந்நிய மொழியை முதல் மொழியாய் தேடி சேர்க்கிறோம்.

குழந்தைகளுக்கு தாய்மொழி அந்த வயதில் கிட்டவில்லை எனில் பிணைப்பறுந்து போகும், மொழியோடு மட்டுமல்ல, மொழி பிணைத்த மண்ணோடும் மண் பிணைத்த மனித உறவுகளோடும்.

இதை விட பெரிய அவலம் இன்று நம் தமிழ் அன்னைகளே தமிழை மறந்துபோனது...

இது தமிழுக்கு மட்டுமே நேர்ந்துகொண்டிருக்கும் சாபக்கேடல்ல, அனைத்து செவ்வியல் மொழிகளுக்கும் நேர்ந்துகொண்டிருக்கும் பெருந்துயரம்...

பாபெல் கோபுரம் - அந்நாளில் பலப்பல மொழிகள் பேசும் மனிதக்கூட்டம் மேலுலகம் வெல்ல வான் நோக்கி ஒரு பெருங்கோபுரம் ஒன்றிணைந்து கட்டவும் கோபம் கொண்ட கடவுள் ஒருவர் அவர்களது முயற்சி நிறைவேறும் முன்னரே 'இந்தா பிடி சாபம்! இனி நீங்கள் பேசும் ஒவ்வொரு மொழியும் பேசுபவருக்கு மட்டுமே விளங்கும், வேறு யாருக்கும் விளங்காது' என முழங்கினாராம்.

ஒற்றுமையாய் பணி செய்த கூட்டம் அன்றே அந்த நொடியே மொழி வேற்றுமையால் பிரிந்து உலகெங்கும் சிதறிப்போயினராம். கோபுரமும் அறைகுறையாய் நின்றுபோயிற்றாம்.

இன்று அதே கடவுள் உலகெங்குமுள்ள மனிதர்களை ஆங்கிலம் கற்கச்சொல்லி ஏன் சபித்தாரோ எப்போது சபித்தாரோ யார் அறிவார்?!

நம் இல்லங்களில் எத்தனை குழந்தைகளால், சிறார்களால், பதின் வயதினரால், இருபதினரால் இந்த பதிவை இதுவரை படிக்க இயலும் என்று எண்ணுகிறீர்கள்?!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்