மிகப்பெரும் ஆளுமைகளுக்கு அவர்களது பெயர் புகழை விட அவர்களது செயலின் தாக்கம் பெரிதாக இருக்கும்.
அவர் உலகுக்கே மகாத்மாவாக இருந்தால் என்ன? ஒரு தேசத்தின் தந்தையாக இருந்தால் என்ன?? பல கோடி சிறார்களுக்கு பாட்டனாய் இருந்தால் என்ன? பேரரசுக்கு ஒற்றை எதிரியாய் இருந்தால் என்ன? தாய்நாட்டை கூறுபோட பேரரசுக்கு கையாளாக இருந்தால் என்ன?
இவை எதுவுமே ஒரு பொருட்டல்ல.
நேற்றோ இன்றோ நாளையோ வேறு யார் வேண்டுமானாலும் மகாத்மா எனவோ, தேசத்தந்தை எனவோ, தேசத்தை கூறுபோட்டு விற்றவர் எனவோ அழைக்கப்படக்கூடும். இந்த அடைமொழிகள் அனைத்தும் காற்றில் ஆடி அறுந்துபோகும் ஒட்டடை அளவுகூட கால ஓட்டத்தில் நிலைக்கப்போவதில்லை.
அப்படியானால் இன்றும் அவரிடம் நம்மை எது அல்லது எவை ஈர்க்கின்றன?
அணுவை அணு அணுவாக அறிந்த, சார்பியல் கோட்பாட்டை உலகுக்கு தந்த ஐன்ஸ்டைன் என்ற பேராளுமை அறிவியலாளரால்கூட இதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. அவரால் சொல்ல முடிந்தது இது மட்டுமே:
வரும் காலங்களில் வரப்போகும் எவராலும் "இப்படி ஒன்று ரத்தமும் சதையுமாய் இந்த பூமிப்பரப்பின்மீது நடந்தது என நம்பவே முடியாது!"
என்னைப்போன்ற கோடானுகோடி மனிதர்களுக்கு, இவரது தலையின் பின்னர் ஒளிவட்டம் தெரிவதில்லை, இவரது கோமணம் பற்றிய எளிமைக்காதல் இல்லை, அவரது உயரிய கோட்பாடுகள் மீது மையலில்லை, தேசியவாதமில்லை.
எங்களுக்கு இவர் ஒரு உன்னத வாழ்வியல். மதங்கள் தொடமுடியாத உயரத்தில், அகிம்சை, ஒத்துழையாமை, சுய சார்பு, பல்லுயிர்களோடு ஒத்திசைந்த சார்பு நீட்சி, அரசியல் நிலைப்பாடற்ற, கிராமப்புற வாழ்வின் வேர் வளர்த்த உழைப்பு என இவற்றை வழியாக கொண்டு நேர்மறை இலக்குகளை நோக்கிய தளராத நடை, வேறென்ன வேண்டும் பெருவாழ்வு வாழ?
மத நெறிகளால் முடியாத, அரச கட்டளைகளால் இயலாத, இவரால் மட்டுமே முடிந்த அற்புதம் என்ன தெரியுமா? இந்த வாழ்வியலை, ஒவ்வொரு வாழும் நொடியிலும் நம் இருப்பை நெய்துகொண்டே இருக்கும் நம் சிந்தனைத்தறிகளில் ஊடும் பாவுமாய் (Warp and Weft) ஆகி நிரப்பியது.
ஐம்பூதங்களால் ஆன இவ்வுலகில் ஆறாவது பூதமாய் இவரை என் சிந்தனை கற்பிதம் செய்கிறது. ஏனெனில் ஊடும் பாவும் அவர் தந்ததாயிற்றே!
கருத்துகள்
கருத்துரையிடுக