இறை இருக்கும் இடம் எது?
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்ற மாதிரி நழுவல்கள் இன்றி, சமரசமின்றி நேர்மையாய் அலசுவோமா?
அந்தரத்தில் ஊஞ்சலாடும் நட்சத்திரக்கூட்டங்களுள் ஒன்றான நம் புவியில் மட்டும் இறை இருக்கிறது என்று கொண்டால் மற்ற நட்சத்திரங்களை காப்பது யார்? அந்த இறை எங்கு உறையும்? இந்த கூற்றை தொடர்ந்து சிந்தித்தால் இறை நம் புவிக்குள் மட்டுமே அடங்கியிருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகும்.
அள்ளித்தெளித்த பல கோடி வைரங்களாய் உலகங்கள் பரவிக்கிடக்கும் பால் வெளிகளில், அவற்றை தழுவிப்போர்த்தியிருக்கும் காரிருளில் இன்னாருக்கு இன்ன இடம், இந்த இடம் மட்டுமே என்ற ஆதார விதிகளை வகுத்த இறை, இவை எல்லாவற்றையும் காக்கும் இறை, இதை விட்டு வெளியிலிருந்து, விலகி இருந்து காக்க வாய்ப்பில்லை.
அப்படியானால் இறை எங்குதான் இருக்கிறது?
எங்குதான் இருக்கிறது இறை?
விடை அறிய, நாம் இன்னொரு வினாவுக்கு விடை தேடவேண்டியிருக்கிறது.
"அறிவியலும் ஆன்மீகமும் இணையும் புள்ளி எது"?
ஆன்மீகம் நம் உள்ளில் இருந்து வெளிப்பட்டு நம் உணர்வுகளின் வழி, சிந்தனையின் வழி அண்டவெளியெங்கும் பரவியோடி, இறை தேடி களைத்துப்போய் நம் உணர்வில் அடங்குவது.
அறிவியல், அண்டவெளியின் எல்லையை தேடி முடிவிலா பெரும்பயணம் தொடங்கி, பயண காலத்தில் பொழுதைப்போக்க, அணுவைப்பிளக்கும் செயல்களையும் நம் உயிர்ப்பிரதிச்சுருள்களை (DNA) நறுக்கித்தைக்கும் வேலையையும் இன்ன பிற ஆய்வுகளையும் செய்து களைத்துப்போய் நம் சிந்தனையில் அடங்குவது.
இவை இரண்டும் (ஆன்மீகமும் அறிவியலும், உணர்வும் சிந்தனையும்) இணையும் புள்ளியாக குவாண்டம் இயற்பியல் முன்வைக்கப்படுகிறது.
'உளதாய் இலதாய்' என ஆன்மீகம் சொன்னதும் 'அலையாய் துகளாய்' என அறிவியல் சொன்னதும் இணையும் புள்ளி 'குவாண்டா' எனப்படும் துகளினும் நுண்ணிய சிறு துகள். இந்த சிறு துகள் அலை வடிவில், துகள் வடிவில் மாறி மாறி மாறி.... ஏனென்று கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்!
நம் உலகில் நிற்பதுவே நடப்பதுவே இருப்பதுவே பறப்பதுவே என நாம் காணும் அனைத்தும், நாமும் குவாண்டா துகள்களால் ஆனவர்கள்!
'ஏன் இப்படி ஆச்சி? இதை விட சிறிய துகள் உண்டா?' என்ற வினாக்களுக்கு விடை தெரியாத அறிவியல், விடையாக இறை இங்கு இருப்பதாக நம்பி நடக்கிறது.
இந்தக்கேள்விகள் எதுவுமே அவசியமற்றவை, எல்லாம் மாயை என ஆன்மீகம் தெளிவாய் அமர்ந்திருக்கிறது.
இந்த இரு நிலைப்பாடுகளையும் அறிதல் நம் தேடுதலை எளிதாக்குகிறது.
இறை இல்லை என எவரும் அறைகூவ இயலாது என்பதும் தெளிவாகிறது!
இந்த தெளிவோடு மேலும் அலசுவோம்.
இந்த அண்டவெளியில் மிக நீண்ட நெடிய சாகசங்கள் நிறைந்த சங்கடங்கள் நிறைந்த பயணம், உணர்வும் எண்ணமும் முரண்கொண்டு நகர்த்தும் பயணம், வேறு கோளங்களில் உயிரினங்களை இருப்பை அறிய மேற்கொள்ளப்படும் பயணங்களோ, அண்டத்தின் எல்லை காண நடத்தப்படும் பயணங்களோ அல்ல. அது இரு உயிரினங்களின் இடையே உள்ள இடைவெளியில் நிகழ்த்தப்படும் பயணம், அணுதினமும் ஒவ்வொரு நொடியும் நிகழும் பயணம், ஒரு உயிர் இன்னொரு உயிரை அறிய, உணர விழையும் பயணம், ஒன்றை ஒன்று நோக்கி நகரும் பயணம். அறிவியல் தோற்பது இங்குதான். அறிவியல் பயணங்களில் இலக்கு என்பது நிலையான அல்லது விலகிச்செல்லும் ஒன்று. தனக்கு ஆதாயம் வேண்டியே இங்கு பயணங்கள் நிகழ்கின்றன.
ஆன்மீகம் தோற்பதும் இங்குதான். இறை அறிய 'தன்னைத்தோண்டி ஞானம் தேடு' என தனக்குள்ளே மூழ்கச்சொல்லி, தனக்குள்ளே மட்டுமே மூழ்கச்சொல்லி.
இரு உயிர்களுக்கு இடையில் உள்ள அளவிடமுயாத இடைவெளியில்தான் இறை அசைந்துகொண்டிருக்கிறது, உயிர்ப்புடன் இருக்கின்றது. உலகங்களை இயக்குகிறது!
இடைவெளி குறையை குறைய இறையிடம் நம்மை நெருக்கமாய் உணர்த்தி நகர்த்தும் இப்பயணத்தில் இறையை நாம் பல வடிவங்களில், உணர்வுகளில் தரிசிக்கலாம்..
தரிசனம் கிட்டும் அந்த தருணங்களில் நம் எண்ணங்கள் அடியோடு நின்றுபோயிருக்கும், உணர்வுகள் மட்டுமே நம்முள் நிறைந்திருக்கும்!
மனிதர்களின் வழி விளக்கினால் புரிதல் எளிதாகும்.
இரு மனிதர்கள் ஒருவரை நோக்கி ஒருவர் பயணம் செய்யச்செய்ய இறையின் இடைவெளி குறைந்து, ஒரு புள்ளியில் இருவரும் ஒன்றாக உணரும்போது இருவரும் இறையாக மாறிப்போகும் அற்புதம் நிகழும்.
ஒன்றான இரண்டு (மனிதர்கள்) இன்னுமொரு மனிதரை உணர பயணம் செய்தால் மூன்று ஒன்றாகும், நான்கு ஒன்றாகும், கோடானு கோடியும் ஒன்றாகும். அங்கு இறை உள் உறையும்.
அகம் ப்ரம்மாஸ்மி என்பதும் அதுவே, தத்வமசி என்பதும் அதுவே. அலையும் அதுவே, துகளும் அதுவே.
சற்றே கண்களை மூடி உணர்வுகளை கேட்போம், கடைசியாய் எப்பொழுது இறையின் இருப்பை உணர்ந்தோமென்று...
பயணிப்போம், அலையாய், துகளாய்....
கருத்துகள்
கருத்துரையிடுக