பிட்டுக்கு மண் சுமக்க மறந்தவனையே பிரம்பால் அடித்த பூமி, இன்று பிட்யுமென் சாலைகளில் (தார் ரோடு) ஆற்று மணலை பெரு சக்கர வாகனங்களில் அள்ளி விரைவது இயல்புதானே!
இந்திய நிலப்பரப்பில் பரந்து விரிந்து பரவி ஓட்டமாய் ஓடியும் கடலில் சென்று கலக்காத மிகப்பெரும் நதியாகவும் நம் தார் சாலைகளை நாம் கற்பிதம் செய்து பார்க்கலாமே...
ஆற்று மணல் என்பது மலைகளின், மலைப்படுகைகளின் துகள்களால் ஆனது.
நம் வீடு இந்த மணல் அன்றி உருப்பெறாது. சாலைகள் எங்கும் பெருசக்கர வாகனங்கள் கடத்தி வந்து தரும் மலைத்துகள்களில்தான் நாம் (வீட்டு) கோட்டைகள் கட்டி வாழ்கிறோம்.
இது தவறில்லை. ஏனெனில் நாம் மலைகளை வெடி வைத்து பிளந்து மணல் உற்பத்தி செய்வதில்லை :-)
மழை நீரின் ஓட்டத்தில் மலைகளின் மேடு பள்ளங்கள், மணல் தங்குவதாலோ அல்லது அரித்துச்செல்லப்படுவதாலோ உருவாகும் இயற்கை நிகழ்வுகள்.
'மை ப்ளேஸ் இன் த ப்ளைன்ஸ் ஈஸ் போரிங், பொல்யூட்டட், ஓவர்க்ரௌடெட். ஐ வான்ட் டு லிவ் / ஸ்டே இன் அ ரிசார்ட் டைப் ஹவுஸ் இன் அ ப்யூட்டிஃபுல் கொயட் ஹில் இன் த மிடில் ஆஃப் வைல்ட் நேச்சர்' என நாம் நம் சிறு ஆசையை வெளிப்படுத்த, அது 'அனைத்து வித வசதிகளோடு கூடிய உல்லாச தங்கும் விடுதிக'ளாக நொடியில் உருவெடுக்கும்.
நீச்சல் குளம், இன்டர்நெட், கான்ஃபரன்ஸ் வசதிகள், ஏர் கன்டிஷன்ட் குடில்கள், மல்டி குசைன், நைட் சஃபாரி இன் த வைல்ட், பான்ஃபையர் இன் த நைட் அன்டர் ஸ்டார்லிட் ஸ்கை, வண்ண விளக்குகளுடன் களி நடனம்' என இந்தப்பகுதிகள் மலை மலையாக மேடு பள்ளங்கள் நிரவப்பட்டு, கல் கட்டிடங்கள் முளைத்து, இரவில் ஒளி உமிழும் ராட்சத விளக்குகளோடு மாறிப்போக, தூக்கம் தொலைத்த கானக உயிரினங்கள் அடையாளமிழந்த தம் மலைக்காடுகளில் வேறு 'வழி' அறியாது / 'வழியின்றி' சாலையில் அடிபட்டோ மின் வேலிகளில் முட்டிக்கொண்டோ துக்கித்து வலிக்க வலிக்க துடிக்க துடிக்க மரணிக்கின்றன. வண்ணத்துப்பூச்சி, ஓணானில் தொடங்கி யானைகள் வரை சவப்பட்டியலின் நீளம்...முடிவற்றதாய். இந்த சவப்பட்டியலின் மீது விரையும் வாகனங்களுக்கு உணர்வுகள் கிடையாது :-(
"மேடு பள்ளத்தை மனிதன் முடிவு செய்தால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பேனா?" என தடுக்கப்பட்ட நீர் வழிகள் சினந்து பொங்க, ஓரிரவிலேயே பல ரிசார்ட்டுகள், அவை தரும் வணிகத்தை நம்பி அங்கு முளைத்த குடியிருப்புகள் என காணாமல் போவதும், அதன் பின் 'ரீடெய்னர் வால்' களின் துணையோடு அவை மீண்டும் முளைப்பதும், கடும் கோபம் கொண்ட நீரானது இந்த தடுப்புச்சுவர் தாண்டியும் வந்து பாடம் புகட்டுவதும் பதிலுக்கு பதிலாய் சுவர்களை நாம் இன்னும் உயர்த்துவதும் என ஒரு முடிவற்ற யுத்தம் துவங்கவே நாம் அமைதியாக மலைகளில் தங்க/வசிக்க ஆசைப்பட்டோமா?!
மலைகளில் நீர் அரித்து... கீழிழுக்கும் மணலை ஆற்றுப்படுகை வரை வரவிட்டு, அதன் பின் அரக்க வலிமை கொண்ட பெரு இயந்திரங்களை வைத்து ஆறு பிளந்து மணல் அள்ளி நாடு முழுவதும் அனுப்புவது 'சென்ட்ரலைஸ்ட் ப்ரொடக்சன்' எனப்படுவது. மலைப்பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில், கிழக்கு தொ.தலை மாவட்டங்களில் நீங்கள் வீடு கட்ட தேவையான மணல் கூட, கிழக்கு கோடியில் தாழ் நிலப்பரப்பில் உள்ள காவிரிப்படுகையிலிருந்தோ பாலாற்றுப்படுகையிலிருந்தோதான் மீண்டும் மலையேறி வரவேண்டுமா? என்ற மையக்கேள்வியோடு, மணல் தங்கும் இடங்களில் மணலோடு சேர்ந்து தங்கும் (கானக மலைகளின் வேர்கசிந்த) நீரும் தங்கும், நிலத்தடி மட்டத்தை உயர்த்தும், வாழ்வாதாரம் பெருக்கும், நம் கட்டுமானத்தேவைகளுக்கு அங்கங்கிருந்தே மணலும் தரும் என்கிற அரிய மாற்றுக்கருத்தை சேலம் அருகில் ஒரு மலைப்பகுதியில் வடிவம் தந்து நிரூபித்து இருக்கிறார் பியுஸ் மனுஷ்.
மலையிலிருந்து வழிந்து வரும் நீர் தடங்களில் அங்கங்கே பாறைக்கற்களை போட்டு, அடைக்காமல் தடுத்து, இடுக்குகள் வழியே நீர் தடையின்றி ஓட, மணல் மட்டும் அங்கேயே தங்கும். அந்த மணல், அள்ள அள்ள குறையாது!
இப்படி கீழ் நோக்கி வழியும் நீரை குளங்களில் நிரப்பி, நிரம்பியபின் அது கீழ்நோக்கிய பயணம் தொடர, குளத்து நீரை மேட்டுப்பகுதிக்கு மின்தூக்கி மோட்டார் மூலம் அனுப்பி பயிர் வளர்க்க பயன்படுத்த, விவசாயம் போக எஞ்சிய நீர் புவியின் ஈர்ப்பு விசையால் மீண்டும் குளம் தேடி சேர, மீண்டும் மின் தூக்கி வழியே மேலே அனுப்பப்பட்டு என முடிவற்ற மறு சுழற்சியில் பயிர்கள் செழிக்கும், உயிர்கள் தழைக்கும், நீரும் இருக்கும்!
இதன் மத்தியில் பூமிக்கு பாரமின்றி மூங்கிலில் வீடுகள்!
சொர்க்க பூமி இங்கே சாத்தியம் என இயற்கையை புரிந்துகொண்டு இணைந்து வேலை செய்கையில் எதுவும் எளிதாய் வசப்படும், டெக்னாலஜியும் இதில் இணைந்து வேலை செய்யும்!!!
ஒரே ஒரு கூடை மண் சுமந்து ஈசன் அடைத்த வைகை நதிக்கரை பிளவும் இதைத்தான் நமக்கு சொல்கிறதோ ;-)
மேற்குத்தொடர்ச்சி மலையில் காட்டுப்பரப்பில் "வனமிழந்ந வெளி" யில் மலைபோல நிற்கும் மார்பளவு சிவன், நகைக்கின்றார்!
பின் குறிப்பு:
யூ ட்யூபில் "ஜக்கியை சாடும் பியுஸ்" என்ற பரபரப்பான தலைப்பில் வெளியாகி இருக்கும் ஒரு ஏழு நிமிட குறும்படம் (இப்படி தலைப்பு வைத்தால்தான் பார்க்கிறார்களாம்!), இந்த வாரம் இயற்கை குறித்த உங்கள் புரிதலை உயர்த்தவும், 'மாத்தி யோசி"க்கவைக்கவும் உதவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக