மரக்கட்டிலில் உறங்கும் மனிதன்
------------------------------------------------------
எங்கோ பல மரத்தில் பழம் பறித்து உண்ணும் பறவைகள் இன்னொரு மரத்திலமர்ந்து களைப்பாறும் வேலையிலும், பசியாற்றிய மரங்களுக்கு செய்நன்றியாய், செரித்தது போக மிச்சத்தை மதிப்பு கூட்டி எச்சமாக்கி காற்றிடம் தரும்.
காற்று அதை கவனமாய் இடம் தேடி எங்கோ தரையிறக்கும்.
ஏதோ பறவை ஏதோ எச்சமென்றாலும் உள்ளிருப்பது நம் உறவினரே என அருகிலிருக்கும் மரங்கள் மகிழ்வாய் இலை உதிர்க்க, எச்சத்தினுள் உயிர்ப்புடனிருக்கும் விதை ஒன்றுக்கு (பலவாகவும் இருக்கலாம்) அரண் தரும், காக்கும்.
மரங்களின் வாழ்வியலில் நெகிழ்ந்து வான் நீர் சொரியும், கதிரலைகள் கதகதப்பாக்கும்.
'என்ன ஒரு அமைப்பு இது!' என வியந்து விதைக்குள் கண்ணுறங்கும் இறை மெல்ல கண் விழித்து, தன்னை சூழ்ந்திருக்கும் நல்விழைவுகளை கண்டு அவற்றோடு இணையும் ஆவலில் விரைவாய் விதைக்கூடு விட்டு வெளியேறி காற்றில் இலை வீச ஏதுவாக சூல் கொண்ட மண் நெகிழ்ந்துகொடுக்கும்...
இவை எதுவும் அறியாத சிறு பறவையொன்று பின்னொரு நாளில் விதை வளர்த்த அம்மரக்கிளையில் அமரும், தன் கூட்டில் பசியோடு காத்திருக்கும் குஞ்சுகளுக்காய் பழம் பறிக்கும்.
இவை எதுவும் உணராத மனிதனொருவன் உறங்கிக்கொண்டிருக்கும் இம்மரக்கட்டில்கூட மரமொன்றின் எச்சம்தான், இந்த எச்சம் முளைப்பதில்லை. ஏனெனில் அங்கு முளைப்பதற்கு எதுவுமில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக