கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழுதும் பல்லாயிரக்கணக்கான மனிதர்கள் தம் பெருநகர் பெருநுகர்வு வாழ்வில் (consumerist life in big cities) அலுப்பு தட்டி இயற்கையை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறார்கள், மாடித்தோட்டம் முதல் ஏரோபோனிக்ஸ் வரை (மண்ணின்றி, நீரின்றி பயிர் வளர்த்தல்!).
பெருவிருப்பத்துடன் பயிர்களை வளர்க்கும் இவர்கள் அனைவரும் முழு முனைப்போடு தம் முயற்சியில் மூழ்கிப்போய், இந்த முயற்சிகளை மேன்மைப்படுத்த உதவும், வளப்படுத்த உதவும் ஒரு இன்றியமையாத கண்ணியை மறந்தே போய்விட்டனர்.
பல்லுயிர்ச்சூழலை நெறிப்படுத்தி வளப்படுத்தும் அந்த 'தொலைந்துபோன கண்ணி' என்ன?
இதை அறிமுகப்படுத்த ஒரு கதை சொல்லட்டுமா?
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது இந்திய மண்ணின் தொல்குடிகளுள் ஒன்றான தமிழரின் பழமொழி.
அன்றிலிருந்து இன்றுவரை ஒரு சிற்றூர் என்பது இருநூறு / முன்னூறு வீடுகள், ஐந்தாறு தெருக்கள், ஊர் மையத்தில் ஒன்றிரண்டு கோவில்கள், நான்கைந்து நீர்நிலைகள், ஊரைச்சுற்றி விளைநிலங்கள், பாசன / வடிகால் வாய்க்கால்கள் என்பதாகவே இருக்கிறது.
ஒவ்வொரு கோவிலுக்கும் சொந்தமாக 'இறை காடுகள்' இருந்தன (Sacred Groves). இறை வழிபாட்டிற்கு பயன்படும் இலைகள், பூக்கள், கனிகள் தரும் நாட்டு மரங்களால் நிரம்பிய காடுகள். செண்பக மரங்கள் நிரம்பிய திருப்பதி, பராய் மரங்கள் நிரம்பிய திருப்பராய்த்துறை என நம் நிலப்பரப்பு முழுதும் இவை வணங்கப்பட்டன. இறை சொத்து குல நாசம் என்ற அச்சம் இக்காடுகளின் அரணாய் நின்றது.
பூக்களில் சொரியும் தேன், ஊருக்கு வெளியே காடுகளில் வாழும் வண்டினங்களை இழுக்க, தேனீக்கள் குடியேறி ஊரில் பயிர் வளர்த்தன மகரந்த சேர்க்கை மூலம். வேளாண் சமூகமும் செழித்து வளர்ந்தது.
மரங்கள் மருந்தாகவும் பயன்பட்டன.
கால்நடைகளுக்கும் இக்காடுகள் வறண்ட காலங்களில் நிழலும் உணவும் அளித்தன.
ஒரு ஊரிலிருந்நு தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரு குடும்பம் வேற்றூர் செல்ல நேர்கையில் அவர்கள் கேட்கும் முதல் வினா 'அந்த ஊரில் கோவில் உண்டா?' என்பதாகவே இருந்தது. இந்த 'கோவில் காடுகள்' ஊரையும் கானகத்தையும் இணைக்கும் இன்றியமையாத கண்ணிகளாகின.
இன்று...
தேனீக்களை உயிர்க்கொல்லிகள் கொண்டு அழித்தோம்.
விளை நிலங்களை விழுங்கி ஏப்பம் விட்டு ஆலைகள் அமைத்தோம்.
கோவில் காடுகளை சிதைத்து சமூகம் 'வளர்த்தோம்' (urbanization).
சிற்றூர்களை உலகமயமாக்கலில் கரைத்தோம்.
இவற்றின் விளைவாய் வேளாண்மை நலிந்து நோயுற்று வேதனை தாளாது மரணப்படுக்கையில் முனகிக்கொண்டிருக்கிறது.
பேராசை பெருநுகர்வு வணிகத்தின் கண்ணிகளாய் வாழ்ந்த கற்றோர் பலர் இந்த வேதனைக்குரலின் வலியுணர்ந்து, 'போதுமடா மக்கா, நம் வேர்களுக்கு திரும்புவோம், வளமாக்குவோம், மீட்டெடுப்போம்' என மறுமலர்ச்சி நாயகர்களாய் மாறி சிற்றூர்கள் திரும்பியாச்சி, விளைநிலங்கள் வாங்கியாச்சி.
இவற்றில் வாழத்துவங்கிய நம் அணுகுமுறை சரியான அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ளதா என்று உரசிப்பார்க்கும் உரைகல்லாய் சில கருத்துக்களை உங்கள் சிந்தனைக்கு முன் வைக்கிறேன்...
காடுகளோடு பிணைப்பில் இல்லாத வேளாண்முறையும் வாழ்வியலும் நம் முயற்சியை கரை சேர்க்காது!
"காடுகளை நாம்தான் ஊரை விட்டே துரத்தி பல ஆண்டுகள் ஆயிற்றே! அவற்றோடு எப்படி மீண்டும் பிணைப்பது?" என்கிறீர்களா?!
உண்மைதான்.
நமது சாலைகள் எதற்கு இருக்கின்றன?
நாம் நடமாடவும் வாகனங்களில் விரையவும் உதவும் நம் சாலைகள், நம் காடுகளை நம் வீடுகளுக்கு அழைத்து வரவும் உதவும்!
மரங்கள் தரும் மூச்சுக்காற்றை சுவாசிப்பவர்கள் மட்டும் செய்யவேண்டிய நன்றிக்கடன் இது.
நாட்டு மரம், ஒற்றை மரமாவது உங்கள் சாலையில் நடுங்கள். நாட்டு மனிதர், ஒற்றை மனிதரையாவது ஒரு நாட்டு மரம் அவரது சாலையில் நடத்தூண்டுங்கள். இயற்கை உங்களது நன்றிக்கடனை ஏற்று பற்பல வழிகளில் வாழ்த்தும்.
#bringbackforest
நம் சாலைகள் நமதே! மரங்கள், புதர்ச்செடிகள், பூச்செடிகள் என முடிந்ததை நடுவோம், நம் நகருக்கு வெளியே ஒதுங்கி நிற்கும் நம் காடுகளுக்கு இவை வழியே பாலங்கள் கட்டுவோம்.
நகர வளர்ச்சி (அரசு) அலுவலர்கள் மூலம் நம் சாலைகளில் மரங்கள் நடக்கூடிய இடங்களை வரையறுக்கச்செய்வோம்.
நம் நட்புகளை 'நடவு கொண்டாட்டத்துக்கு' அழைப்போம் (street planting parties). விருந்தினர் ஒவ்வொருவரும் ஒரு நாட்டு மரக்கன்று கொண்டுவரவேண்டும் என பணிப்போம்.
நடுவோம்.
நீர் ஊற்றுவோம்.
நட்புக்கள் சூழ செல்ஃபி எடுப்போம்.
Onetreerevolution என்கிற முகநால் குழுவில் பகிர்வோம். இது இக்குழுவில் பலரை ஊக்கப்படுத்தும்.
தொடர்ந்து நீர் ஊற்றுவோம்.
நீர் ஊற்றுவோம்.
நம் சாலையுடன் ஒரு செல்ஃபி எடுத்து இதே குழுவில் பகிர்வோம்.
உங்கள் செயலால் உந்தப்பட்டு, உலகில் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் ஒரு சில மரங்களையாவது நட்டிருப்பார்!
நீங்கள் தயாரா?
Get, Set, Plant!
நாம் மேலும் சிந்திக்க சில துளிகள் இதோ:
1. பூங்காக்கள் ஒருபோதும் காடுகள் ஆகாது. அவை வெறும் பூங்காக்கள் மட்டுமே.
2. மரங்கள் நடுவதை எளிமையாய், வலிமையாய் பரப்ப மதங்களால் மட்டுமே முடியும். வன்முறை தவிர்த்து நேயம் தழைத்திடச்செய்ய மதங்களுக்கு இதைவிட வலிமையான ஆயுதம் எதுவும் கிடைக்கப்போவதில்லை!
மரங்கள் நடுவதை ஊக்குவிக்கும் மதங்கள் எதுவும் நடைமுறையில் இருக்கின்றனவா?
இல்லையெனில் நாமே ஒன்று தொடங்கலாமே?! இது குறித்து உங்கள் எண்ணங்களை பகிருங்களேன்.
என்னுடைய சிந்தனை:
மினிஸ்ட்ரி ஆஃப் ட்ரீஸ் (Ministry of Trees) என ஒன்றை தொடங்கலாம். நடலாம். பரப்பலாம் :-)
(கிருஸ்தவ மதத்தில் மினிஸ்ட்ரி ஆஃப் காட் என பல இடங்களில் வழிபாட்டுமுறைகள் உள்ளன. கல்வாரி சிலுவையில் உயிர்நீத்த இறை நினைவாக இவற்றை தொடங்கிய மனிதர்களுக்கு, இறை அறையுண்ட சிலுவை செய்ய கொலையுண்ட மரத்தின் நினைவாக வழிபாட்டிடங்கள், Ministries, அமைக்கவேண்டுமென ஏனோ தோன்றவில்லை.... இங்கு நான் இந்த மினிஸ்ட்ரி ஆஃப் ட்ரீஸ் என்ற பெயரை இந்த உட்கருத்துக்காக முன்மொழிகிறேனே தவிர ஒரு குறிப்பிட்ட மதத்தை உயர்த்தவோ தாழ்த்தவோ அல்ல. ஏனெனில், மரங்கள் ஒருபோதும் மதம் பழகுவதில்லை!)
கருத்துகள்
கருத்துரையிடுக