வண்ணத்தியின் இறகுகளிலிருந்து உதிர்ந்த வண்ணங்களால் உருமாறிப்போச்சு நம் கருப்பு வெளுப்பு உலகம். தொட்டால் உதிரும் வண்ணங்களோடு ஒரு இறை தத்தித்தாவி அமர்ந்து பறந்து காற்றேறி நம் பார்வையிலிருந்து கரைந்தபின்னும் அந்த வண்ணங்கள் மிதக்கும் கண்களோடு வேறு இறை தேடும் வாழ்வு கிட்டிய குழந்தைகளும் இறையே! ஒரு வயல். ஒரு சிறு பிள்ளை. பல பச்சை இலைகள். ஊசித்தும்பி, தட்டான், வண்ணத்தி என சில நட்புகள். கண்மூடி கற்பனை செய்துபாருங்கள் இந்த 'வெளியில் என்னென்ன அற்புதங்கள் நிகழலாம் என. பதுங்கிப்பதுங்கி ஊசித்தட்டான் கொண்டைக்கண்களில் சிக்காமல் அதன் பின்தொடர்ந்து வால் பிடிக்க முயலும் சிறுமி, அவளிடம் சிக்காமல் போக்கு காட்டும் தட்டான், அவள் கவனம் கலைக்கும் வண்ணத்தியின் பூ நடனம், பொன்குவியல் ஒளிக்கீற்று முகம் வருட, காலடித்தோலை மெத்தென வருடும் பனி ஈரப்புல்வெளி... இறை சூழ இறை ஒன்று நடனம் ஆடும் வெளியாக அது ஒரு நொடியில் மாறிப்போகும் விந்தையை நேரில் உணர்ந்த ஒரு சிறுவன் இன்னும் என்னுள் உயிர்ப்புடன் இருக்கிறான். அங்கு வணிகமில்லை, பெருவிருப்பமில்லை, பெருங்கோபமில்லை, போட்டியில்லை, பொறாமையி...