தாகம் கொண்ட மீனொன்று கட்டாந்தரையில் கடப்பாறை நீச்சலடித்து பெட்டிக்கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் கேட்டதாம்.
"காசிருக்கா?"
இருக்குங்க.
"உனக்கு எப்படி...?"
தண்ணில வந்ததுங்க. எதுக்கும் உதவும்னு முழுங்கியிருந்தனுங்க.
"சரி சரி, குளிக்கவா குடிக்கவா?"
குடிக்கவே தண்ணியக்காணோம் இதுல குளிக்கிறதெங்க?
"காணமுன்னா?"
ஒண்ணுந்தெரியாத மாதிரி கேக்கறீகளே நியாயமா? ஒரு கோடை முழுக்க உசுர கையில புடிச்சிகிட்டு பருவம் வந்தாச்சே மழைத்தண்ணி வருமின்னு காத்திருந்தா... கண்ட கருமமெல்லாம் வருது தண்ணிய மட்டும் காணும். வாய்க்காலெல்லாம் எங்கேன்னு விசாரிச்சா வாய்க்காலா? இல்லவே இல்லயே, இங்கன அசோகரு காலத்துலேந்து டி.டி.சி.பி அப்ரூவ்ட் லேயவுட்டுதான இருக்குன்னு ஆதாரத்தோட நிக்காக பலபேரு.
வேற யாருகிட்ட கேக்கலாமுண்டு அங்க ஓடி இங்க ஓடி நா வறண்டு தண்ணி குடிக்கலாமுன்னு இங்கன வந்தா பகடி பேசுறீகளே நியாயமா? ஒங்க கடை நிக்கிற இடத்துக்கு அடில கூட எங்களோட தண்ணிதானய்யா ஓடிகிட்டிருந்தது?...
மீனெல்லாம் நியாயம் பேசுற அளவுக்கு நாமளோட நிலம மோசமாயிடிச்சேங்கிற கடுப்புல அந்த கடக்காரான் அந்த மீன... அந்த மீன... விடுங்க பாஸ், நமக்கு ஆயிரம் சோலி காத்து கெடக்கு, மீனாவது மசிராவது...
பின்குறிப்பு: முதல் வரி தஞ்சை பிரகாஷின் புத்தகத்தலைப்பு என்று நினைவு. நான் அப்புத்தகம் படிக்கவில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக