வேலாயுதம் இன்று இல்லை.
வேலாயுதம் மிக நல்லவர்.
ஈ எறும்புக்குக்கூட துன்பம் இழைக்காதவர்.
ஈன்றது அனைத்தையும் நாடி வந்தவர்க்கு வாரி வழங்கியவர்.
என்ன இடர் வந்தபோதும் தன் 'நிலை' மாறாதவர்.
பொறுமைசாலி.
பேரிடர் சூழ்ந்த போதெல்லாம்
தனியனாய் நின்றபோதும் அச்சமற்று நின்றவர்.
வாழ்வாங்கு வாழ்ந்தவர்.
யார் கண் பட்டதோ...
இவரை வெறுப்பது எவர்க்கும் இயலாது என்று உறுதியாய் எண்ணியிருந்தேன்...
வந்தனர் விரோதிகள்.
இரவோடு இரவாய், இருளோடு இருளாய்.
உறங்கிக்கொண்டிருந்தவரை
கண்ட துண்டமாய் வெட்டுமளவுக்கு
சத்தியமாய் அவர் எந்த பாதகமும் செய்திருக்க வாய்ப்பு இல்லை.
இருந்தும் கயிறு கொண்டு கட்டி...
வெட்டினரே!
வெட்டிய சுவடின்றி
தடயமின்றி அள்ளிச்சென்றனரே...
வெறிச்சோடிய அவரது வாழ்விடத்தை
கடக்கும்போதெல்லாம் உள்ளே குமிழிடும் நல்நினைவுகள், பீறிடும் சோகம்...
ஏனிப்படி ஆச்சு?
படிக்கையிலேயே சோகம் கவ்விக்கொள்ள, நெஞ்சு பதைக்க தவிக்கிறீர்களே, வேலாயுதம் ஒரு மரமாக இருந்தால் உங்கள் தவிப்பு நீடித்திருக்குமா இந்த எழுத்தை வாசிக்கும் இந்த நொடி வரை?
கருத்துகள்
கருத்துரையிடுக