வழுக்கைத்தலைகளில் முடி வளர அமேசான் காடுகளிலிருந்து அரியவகை மூலிகை எண்ணெய்களை கொண்டுவந்து கூவிக்கூவி விற்கிறார்கள் பேராசைப்பெருவணிக நிறுவனங்கள், ஊடகங்கள் வழியே உலகெங்கும்.
இவர்களுக்காக அரும்பாடுபட்டு அமேசான் காடுகளில் பயிர் வளர்த்த இயற்கை இன்று அங்கு தன் மயிரிழந்து வழுக்கையாகி நிற்பதுகூட இவர்கள் கண்களுக்கு தெரியவில்லை.
இழந்த மயிரை திரும்ப வளர்க்க இந்தக்காடுகள் கூட அந்த மூலிகை எண்ணெய்களை வாங்கித்தேய்த்தாகவேண்டும்போல.
தேங்காய் எண்ணெய் என்றால் என்ன என்றே தெரியாது ஒரு சிக்குப்பிடித்த சமூகமே கண்ட கண்ட வேதிப்பொருட்களால் ஆன, தலைமயிரில் ஒட்டாத எண்ணெய், கையில் பிசுக்கேற்றாத எண்ணெய், குளிர்காலத்தில் உறையாத எண்ணெய், எண்ணெய் வாசனையற்ற எண்ணெய் என எண்ணெயே இல்லாத எண்ணைகளை தேங்காய் எண்ணெய் என்ற போர்வையில் வெளிச்சம்போட்டுக்காட்டும் பெருவணிகத்தை நம்பி வாங்கி தலையில் தேய்த்து, இருந்ததும் உருக்குலைந்துபோய், ஈறும் பேனும் விளையாடும் தலைமயிரை மேலும் வேதிப்பொருட்களாலான ஷாம்ப்பூ போட்டு கண்டிஷனிங் செய்து தலை குளித்து கண்ணாடியில் பார்த்தால் மயிரே போச்சி, இட்ஸ் கான், காயிந்தே என பல மொழிகளில் புலம்பி இந்த முறை ஆப்பிரிக்க காடுகளில் விளைந்த மூலிகை எண்ணெய்களை தேடி ஓடும். அவர்களை கண்டு இந்த உலகில் எஞ்சிய காடுகளும் அஞ்சிப்பதுங்கும். காடுகளைத்தேடி காணாது கோபமான சூரியனின் குத்துக்கதிர்கள் குத்தித்துளைக்க, தாங்கமுடியாமல் ஏ.சி அறையில் பதுங்கும் இந்த சமூகம், சூரிய ஒளி கிட்டாமல் வைட்டமின் டி டிஃபிஷியன்சி என வைட்டமின் (ஊக்கமேற்றிய) உப்புக்களை சூரியன் மறைந்த மாலை பின்னிரவுகளில் கடைகளில் வாங்கி உண்ணும்.
இவையெல்லாவற்றையும் பார்த்து வெம்பி வெதும்பி வாயில் துண்டு பொத்தி அழும் தென்னெய் விவசாயிக்கு ஒரு காய் விற்றால் கிடைக்கும் பணம் ஆறிலிருந்து பனிரெண்டு ரூபாய். 1970-2012 ஆறு ரூபாய். 2012-2017 ஒன்பது ரூபாய். 2018 கஜா புயலுக்குப்பின் பன்னிரெண்டு ரூபாய்.
செலவு கழித்து பார்த்தால் காய்க்கு தேறுவது எதுவுமில்லையே! நட்டத்தில் அல்லவா தென்னை வளர்க்கிறோம்! என்ற ரியலைஷேசனில் எஞ்சிய கொஞ்சநஞ்ச மயிரும் கொட்டிப்போய் தலை வழுக்கையான இந்த விவசாயியையும் மூலிகை எண்ணெயை தேடி ஓட வைத்ததில் இல்லை பேராசைப்பெருவணிகத்தின் வெற்றி ரகசியம். இந்தப்பதிவை படித்தபின் 'இதுவும் கடந்துபோகும்' என நம்மை அடுத்த நுகர்வை நோக்கி நகரவைக்கும் ஆன்மபலம் இழந்த நம் அறச்சமூக அக்கறையில் தொங்கி நிற்கிறது அதன் வெற்றி.
பீம புஷ்டி லேகியம்கூட வெளிநாட்டில் இருந்து வாங்கி உண்ணும் நமக்கு இதெல்லாம் சகஜமப்பா என்று நகைத்து நகராமல் பண்டிகை தினங்களிலாவது சுத்தமான தேங்காய் எண்ணெயில் தலையை ஊறவைத்து குளித்தால் கற்பகத்தருவென காலம்தோறும் போற்றப்படும் தென்னையே வாழ்த்தும்! அதை சார்ந்த கிராமப்பொருளாதாரமும் வாழும், வளரும்!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக