எழுத்துக்களில் கூட இடையினத்திற்கு இடம் தந்த ஒரு செழுமையான வாழ்வியல் முறை நம்முடையது. அது இப்போது இடையினத்தை நடத்தும் விதம்... பெரும்பாலான வீடுகளில் பதின்பருவ ஆண்குழந்தைகள் தங்களுக்கு மீசை அரும்பவில்லை என்னும் கவலை முதல் பாலியல் பற்றிய அரைகுறை புரிதலுடனும் ஏராளமான கற்பனைகளுடனும் சில அச்சங்களுடனும் தடுமாறுவது இயல்பு. அப்போது சுற்றமும் உற்றாரும் அவர்களை நடத்தும் விதம் வாழ்நாளையே புரட்டிப்போடக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். 'மீசையே மொளைக்கலை, பொம்பள முகம் மாதிரி இருக்கு' என்பதில் தொடங்கி, '9, ஓசை...' என பல்கிப்பெருகும்போது அவர்களை அரவணைத்து நடத்திச்செல்லவேண்டிய பெற்றோருக்கு நேரம் இருப்பதில்லை. பெண் குழந்தைகளுக்கோ, உடல் வளர்ச்சி போதவில்லையே, முகம் அழகாயில்லையே, உயரமாயில்லையே, தலைமுடி சிக்கல் என பலப்பல சிக்கல்கள். தங்களைப்பார்த்து வழியும் விடலைகளும் இந்த சிக்கலுக்குள் அடக்கம். சக வயது நண்பர்களிடம் ஆலோசனை பெறலாம் என்றால் அவர்களே அதிக குழப்பங்களை விதைப்பதுதான் நடக்கும். இவர்களது குழப்பங்களே இவர்களை பாலியல் சீண்டல்களிலும் சிக்கவைக்கிறது. சமுதாயத்த...