கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததா?
காற்றின் கதை
###########
காற்றின் கரங்கள்
வருடிச்சென்றாலும்
சாய்த்துச்சென்றாலும்
மரங்கள் கோபம் கொள்வதில்லை.
எங்கோ தொடங்கிய காற்றின் பொறியை
ஊதி அணைப்பதும் மரங்கள்தானே? !
'இது என்ன புதுக்கதை?!' என்கிறீர்களா?
இது மிக மிக பழைய கதை. அதிகம் சொல்லப்படாத கதை.
காற்று, வீசுவதில்லை. சூரிய வெப்ப மாறுபாடுகளால் ஈர்க்கப்படுகிறது :-)
சூரியனின் சூடுபட்டு தரை சூடாகி, அந்த சூடு தரைமேலுள்ள ஈரக்காற்றில்* ஏற, சூடாகிப்போன காற்று எடை குறைந்து மேலெழும்ப, அங்கு உண்டாகும் வெற்றிடத்தை அருகிலுள்ள ஈரக்காற்று நிரப்ப, இப்படித்தான் காற்று நகர்கிறது, வடக்கு தெற்காய் (நிலநடுக்கோட்டுப்பகுதிதான் அதிகமான சூடு படும் பகுதி. வட துருவமும் தென் துருவமும் பனிசூழ்ந்து குளிர் குளிர் குளிர் பகுதிகள்). இதனோடு பூமியின் சுழற்சியும் சேர்ந்துகொள்ள (வடமேற்கு திசையில் சாய்ந்த அச்சில் சுத்துதே சுத்துதே பூமி) நமக்கு வடகிழக்கு அல்லது தென்மேற்கு காற்று கிடைக்கிறது!
(* கடல் நீர் சூரிய அடுப்பில் சூடாகி மேலெழும்பி நிலத்தில் நுழைந்து போர்வையாய் மாறுகிறது.)
கவியரசர் கண்ணதாசன் காலத்தில் கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடியசைந்ததா? என்ற ஆராய்ச்சியை மட்டுமே அறிந்திருந்த நாம், அம்மாவின் மூச்சுக்காற்று நிரம்பிய ஏர் பில்லோ சென்டிமென்டை தாண்டி இன்று எல் நினோ, லா நினா, மாடன் ஜூலியன் ஆசிலேஷன் என்றெல்லாம் அறிவு வளர்த்திருக்கிறோம். ஆனால் 'பில்டிங்கு ஸ்ட்ராங்கு...ஃபவுண்டேஸன் வீக்கு' என்பதாகவே இன்றுவரை இருக்கிறோம்.
எப்படி என பார்ப்போமா?
நிலப்பரப்பு முழுதும் இயற்கை அரண்களாய் மலைகளோ, மரங்களோ இருந்தவரையில் வெப்பக்காற்று குளிர்வதற்கு தொலைதூரம் செல்வது தேவையில்லாதிருந்தது. 'எங்கே கொதித்ததோ அங்கேயே குளிர்ந்தது' என குளிர்விக்க மலைகளும் மரங்களுமே போதுமானது, அன்றும், இன்றும், என்றும்.
Iran |
படகோனியா |
Patagonia |
Galapagos |
"கடப்பாக்கல்லு ஸ்லாபு அடுப்படிக்கு, ராஜஸ்தான் மார்பிள் வீட்டுத்தரைக்கு, இத்தாலியன் மார்பிள் பாத்ரூமுக்கு, பர்மா தேக்குல கட்டிலு, கனடியன் டிம்பர்ல டேரேஸ் ரூஃபு, மலேசியன் ரப்பர் வுட்டில ஃபர்னிச்சர்லே, எல்லாமே இம்ப்போர்ட்டுலே" என நாம் இம்போர்ட் செய்வதெல்லாம் அந்தந்த ஊர்களிலும், நாடுகளிலும் அழிக்கப்பட்ட மலைகளையும் மரங்களையும்தானே?!
மலைகள், மரங்கள் அழிந்து வெற்றிடம் உருவாவதால்தான் பசிபிக் பெருங்கடலில் எல் நினோ உருவானால் சூடான காத்து சூடு குறையாமலே ஃப்ரீயா வாக்கிங் வந்து நம் வீட்டுக்கதவை தட்ட, நமக்கு இங்கு வேர்த்துக்கொட்டுகிறது, நம் விவசாயிகள் வயிற்றில் புளியை கரைக்கிறது, டேங்க்கர் லாரிகளை நம் சாலைகளில் பறக்கவைக்கிறது...
பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் வெட்டிச்சிதைக்கப்பட்ட மலைகளையும் மரங்களையும் பெரும்புகை கக்கும் வாகனங்கள் சுமந்து வந்து பெருவணிக 'சாலைகள்' வழியே நம் வீடுகளில் அடக்கம் செய்து... நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றை நச்சாக்கி நம் வாழ்நாளையும் குறைக்கிறது. இப்படி வீட்டையே சுடுகாடாக்கி இறந்தவர் மத்தியில் வாழ்பவர் எப்படி நீண்ட நாள் வாழமுடியும்?!
எங்கு ஓடுவது இங்கிருந்து? |
மலைகளையும் மரங்களையும் வெட்டி வீழ்த்துவதை நிறுத்தி, மரங்களை அதிகமாய் வளர்த்து, தேவைகள் குறைந்து வாழ்ந்தால் மட்டுமே இந்தக்காற்றின் கதையை அடுத்த தலைமுறைகளுக்கு சொல்ல நாம் உயிரோடிருப்போம், அவர்களும் உயிரோடிருப்பார்கள்...
கருத்துகள்
கருத்துரையிடுக