எழுத்துக்களில் கூட இடையினத்திற்கு இடம் தந்த ஒரு செழுமையான வாழ்வியல் முறை நம்முடையது. அது இப்போது இடையினத்தை நடத்தும் விதம்...
பெரும்பாலான வீடுகளில் பதின்பருவ ஆண்குழந்தைகள் தங்களுக்கு மீசை அரும்பவில்லை என்னும் கவலை முதல் பாலியல் பற்றிய அரைகுறை புரிதலுடனும் ஏராளமான கற்பனைகளுடனும் சில அச்சங்களுடனும் தடுமாறுவது இயல்பு. அப்போது சுற்றமும் உற்றாரும் அவர்களை நடத்தும் விதம் வாழ்நாளையே புரட்டிப்போடக்கூடிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
'மீசையே மொளைக்கலை, பொம்பள முகம் மாதிரி இருக்கு' என்பதில் தொடங்கி, '9, ஓசை...' என பல்கிப்பெருகும்போது அவர்களை அரவணைத்து நடத்திச்செல்லவேண்டிய பெற்றோருக்கு நேரம் இருப்பதில்லை.
பெண் குழந்தைகளுக்கோ, உடல் வளர்ச்சி போதவில்லையே, முகம் அழகாயில்லையே, உயரமாயில்லையே, தலைமுடி சிக்கல் என பலப்பல சிக்கல்கள். தங்களைப்பார்த்து வழியும் விடலைகளும் இந்த சிக்கலுக்குள் அடக்கம்.
சக வயது நண்பர்களிடம் ஆலோசனை பெறலாம் என்றால் அவர்களே அதிக குழப்பங்களை விதைப்பதுதான் நடக்கும். இவர்களது குழப்பங்களே இவர்களை பாலியல் சீண்டல்களிலும் சிக்கவைக்கிறது.
சமுதாயத்தின் மையத்தில் தனிமைப்பட்டு நிற்பது எவ்வளவு கொடுமை? வேறு வழியின்றி, தப்பிக்க விளிம்புநிலை தேடத்தொடங்கி ஒரு கட்டத்தில் சமுதாய விளிம்பிலிருந்து கீழே கீழே விழுந்து சிதைந்தவர்கள் ஏராளம்.
இடையினம் என்பதும் இயற்கையின் நியதிதான் எனப்புரியாத ஒரு பெருங்கூட்டம் இன்றுவரை இது ஒரு மனநோய் என்று மறுத்துவந்தாலும் இதே கூட்டத்தின் இன்றைய வாரிசுகள் உலகமயமான நுகர்வு பெருவாழ்வில், Hey I am Gay, Hey I am Lesbian, Hey I am bisexual, Hey I am bicurios என சமுதாய விளிம்புகளை விரிவாக்கிக்கொண்டிருக்கின்றனர். அறிவியலும் ஆய்வுகளும், 'ஆண், பெண், அது' என்பது பழங்கதை; பாலின அடையாளமே தேவையில்லை: என்ற நிலைக்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. மரபு சார்ந்த நம்பிக்கைகள் ஒருபுறம் நம் ஒரு காலைச்சுற்ற, அசுர வளர்ச்சி காணும் shrinking world தொடுக்கும் பன்முனை தாக்குதல்கள் நம் மறு காலைச்சுற்ற... இடையில் கிழிபடுவது நமது வாழ்வியல் கோட்பாடுகள்தான்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையான தகப்பனிடம் சிறு மகன் வைக்கும் வேண்டுகோள், 'நீ எப்படி வேணும்னா இருந்து தொலை. ஆனா எங்களோட இரேன்' - நம் எதிர்காலத்தலைமுறையிடம் நாமும் வேண்டும் நிலை தொலைவிலில்லை.
ஆண்-பெண் உறவே புவியில் வாழ்வு தொடர உதவும் என்பது பெரும்பாலான உயிர்களுள் இயற்கை பொதித்து வைத்திருக்கும் விதை. இது மாறிப்போனால் அவர்களை இயற்கையே ஒதுக்கிவிடும். நமது உதாசீனமோ அவமதிப்புகளோ தேவையில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக