நான் இளைப்பாறியிருந்த குடில் அருகில் அவளை பார்த்தேன்.
தன்னைச்சுற்றி பரபரப்பாய் இயங்கும் உலகத்தை மோனப்பார்வை பார்த்தபடி நின்றிருந்தாள்.
அவ்வப்போது வீசும் காற்றோடு கரங்களை அசைத்தபடி, பெய்யும் மழைத்துளிகளில் நனைந்தபடி.
"அட, என்னைப்போல் ஒருத்தி!" என கண்டதுமே மையலானேன்.
மரியாதைக்குறிய இடைவெளியில் நின்றுகொண்டு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன்.
'நீதானா அது?' என்பதாக ஒற்றைப்பார்வை; பறவைகள் என்னைப்பற்றி அவளிடம் ஏதேனும் சொல்லியிருக்கலாம்...
பல வருடமாய் அங்கு உற்றமும் சுற்றமும் சூழ வாழ்ந்தவளாம். எறும்புக்குக்கூட தீங்கிழைக்காத கூட்டமாம்.
ஏனென்றே தெரியாமல், முன்னறிவிப்பின்றி, கூட்டம் 'கூட்டமாய்' கொல்லப்பட, எஞ்சியவள் இன்று வரை ஒற்றையாய்...
சில நாள் நட்புடன் உரையாடியபின்னரே அவளை படம் எடுக்க அனுமதி கேட்டேன்.
'என் அழகை படமெடுக்க ஆவலா அல்லது நான் வாழ்ந்து காக்கும் என் சுற்றத்தின் (சு)வடு(க்)களை படமெடுக்க விருப்பமா?' என்றாள்.
"உன் விருப்பமே என் விருப்பம்" என்றேன்.
இதுவே சுவடுகள் படமான கதை.
படமெடுத்து கனத்த இதயத்தோடு அவளை நோக்கினேன்.
"என் சுற்றம் அழித்து தம் சுற்றம் பெருக்கும் குலத்தில் வந்தவன் நீ. என்னுள்ளிருக்கும் காட்டை எதற்காக பதிவு செய்ய வேண்டினாய்?" என்றாள்.
அவளுக்கு நான் என்ன சொல்லி புரியவைப்பது எனக்குள் வளரும் வேர்கள் பற்றி?
வன்முறைக்கு எஞ்சிய மரங்கள் ஒவ்வொன்றும் தமக்குள் சுமக்கும் காட்டின் நினைவுகளை நானும் சுமந்து விடைபெற்றேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக