ஏதோ ஒரு பொழுதில்
எதிர்பாரா நொடியில்
நினைவு இழைகள்
அறுந்து... போகலாம்.
அந்தப்பொழுது இப்பொழுதல்ல.
இவ்விரு பொழுதுகளின்
இடைவெளியில் ஊடாடுது
வாழ்வெனும் பெருநதி.
கடந்த பொழுதின்
நெளிவுசுளிவு வழி
வழிந்தோடுது இன்றைய
நம் பொழுது.
இன்றைய திவலை
அன்றைய திவலையல்ல.
இன்றைய நுரை
அன்றைய நுரையல்ல.
இன்றைய கரை
அன்றைய கரையல்ல.
கரைதழுவி நதியோட
நதிதழுவி வாழ்வோட
ஓட்டத்தின் பெருமூச்சு
உந்தித்தள்ளும் பொழுதுகளை.
கடந்த பொழுதை
மீண்டும் தீண்ட
நதியோட்டம் இடம்கொடா.
காலப்புதுவெள்ளம் கழுவிச்செல்லும்
பழைய நதியின்
எஞ்சிய பொழுதை.
நழுவியோடும் வாழ்வு
எவ்விதம் எனினும்
நதி வழி
நாம் விதைத்த
கரை மரங்கள்
நிற்கும் மௌனமாய்
காலத்தின் சாட்சியாய்
வாழ்வின் நீட்சியாய்.
நீருண்ட மகிழ்வில்
உதிரும் இலைவழி
நதியிறங்கும் நன்றிக்கடன்.
அண்டமும் பிண்டமும்
ஒன்றான போதும்
மரம் தருவதே
நமக்கான பிண்டம்.
நதிநீ்ரின் சுழி
சுழியின் கண்
கண்ணின் கருவிழி
எனது இக்கவிதை.
நதி நமதானாலும்
உன் கவிதையாகாது
என் கவிதை.
கருத்துகள்
கருத்துரையிடுக