சிட்டுக்குருவியும் செம்போத்தும் இன்னும் பல பெயர் தெரியா பறவைகளும் சுமந்து வந்து நம்மிடம் சேர்க்கும் கானகத்தின் பேரமைதி, அவற்றின் குரல்வழி பரவும் கேட்பவருள்ளும். யாருமற்ற வெளிகளிலும் இவ்வாறே அவை கானக அமைதியை கசியவிட்டு செல்கின்றன, துணைக்கு சில இறகுகளையும் சேர்த்தே... இறகின் வண்ணக்குவியல் என்றேனும் காற்றில் மிதந்து உங்கள் கரையில் ஒதுங்கலாம். கையில் எடுத்து காதருகில் வைத்துப்பாருங்கள் கானகத்தின் குரல்கள் கேட்கும். கன்னத்தை வருடிப்பாருங்கள், வாழ்வு சிலிர்க்கும். பிரமீளின் இந்தக்கவிதை படித்தால் இறகு கையில் இல்லாவிட்டாலும் சிலிர்க்கும்! சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிக்கொண்டிருக்கிறது.
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!