"தின்ன மீன் தராதே; பிடிக்க கற்றுத்தா."
இந்த வரிகளை தம் வாழ்நாளில் கேட்டிராதவர் மிக மிக குறைவு.
கற்பிப்பதற்கும் கற்பதற்கும் மொழி பல இருந்தும் கற்பது முழுமையற்றுத்தானே உள்ளது...
கற்றல் என்பது என்ன? தருதல் என்பது என்ன?
'நாம் வளர' எனச்சொல்லி, யார் வாழ்வையோ நாம் வளர்க்கவேண்டி நமக்கு வளர கற்றுத்தருவது மேற்கத்திய நவீன சரக்கு. அது அல்ல நம் சரக்கு!
நாம் அனைவரும் படிக்க மறந்த மிகப்பெரிய கல்விக்கூடம் நம்மைச்சூழும் நம் காலடி உலகு.
பாடத்திட்டம் , அட்டவணை, பாடம் என்று வரையறுக்கப்பட்ட எதுவுமில்லை, தேர்வுமில்லை. இங்கு ஆசிரியர்களே இல்லை; ஆனால் கற்பதற்கு என்னவோ ஏராளம்!
இத்தனை அற்புதமான பள்ளியில் கற்காததையா நாம் கல் அறைகளில் அமர்ந்து கற்கப்போகிறோம்?
வெயில் என்றால் என்ன என்று நிழற்கூரையின்கீழ் அமர்ந்து எத்தனைதான் கேட்டாலும் வெயில் தோலில் படாமல் உணர முடியுமா? ஓருயிர் உணர்ந்த வெயிலை இன்னொரு உயிர்தான் உணர முடியுமா?!
பசு வயிற்றிலிருந்து வெளித்தள்ளப்பட்டவுடன் இறங்கி நடப்பது கன்றுக்கு சாத்தியமானது எப்படி? அதன் வயிறு முதல் நாளிலும் நிரம்பியதெப்படி? எந்த நம்பிக்கையில் உறங்கி விழித்தது, வளர்ந்தது, தழைத்தது?
மீனுக்கு நீந்தக்கற்பித்தது யார்? எப்படி?
உள்பொதிந்த அறிவை பொதித்தது யார் என்ற ஆதி வினாவிற்கு விடையளிக்க இயலாத கல்வியானது குத்துமதிப்பாய் ஊகங்களின் அடிக்கல்லில்தானே நம் வாழ்வை எழுப்பும்?
தகப்பன் பெயர் தெரியாதவன் என்றால் சினம் கொள்ள வைக்கும் அறிவைத்தந்த கல்விக்கு தெரியுமா நம் ஆதி தகப்பனின் தாயின் பெயர்?
பாசாங்குகளை மட்டுமே கற்பதை ஒதுக்கிவைத்து மரத்தினிடம் கையேந்துவோம். அது இல்லையென்று சொல்லுவதில்லை. வாரி வழங்குவதை நிறுத்துவதும் இல்லை.
பார்ப்பது வேறு உணர்வது வேறு என்ற புரிதலோடு மரத்தை உணரத்தொடங்குவோம்.
நிலம் விழுந்து (எழ இயலாத) ஒற்றை விதை கூட தன்னை சூழும் புவியாற்றலின் உதவியோடு ஓடுடைத்து உயிர் வளர்த்து, முதல் தளிர் காய்ந்து விழுந்தபோதே தன்னடி நிலத்திற்கு உணவளிக்கத்தொடங்கி, உணவுண்ட நுண்ணுயிரின் எச்சத்தை தனக்கான உணவாய் வேர்வழி மேல் தூக்கி நுனிவரை நனைத்து, சிறுகச்சிறுக சூரியக்கதிர் சேர்த்து பூவாய் காயாய் கனியாய் கனியுள் ருசியாய், விதையாய் சேமித்து, துளிர்ப்பதொரு காலம், வளர்வதொரு காலம், உதிர்வதொரு காலம் என யாரும் சொல்லித்தராமலே விதையுதிர்த்து வித்திட்டு சந்ததி பெருக்க, ஒன்று பலவாகி பல்கிப்பெருகி காடாகி உயிரனைத்திற்கும் மகிழ்வோடு உணவு சமைத்து, உண்டவரின் தடம் வழியே காடு பெருக்கி... இப்போதுகூட நம் ஊர் எல்லையில் காத்து நிற்கிறது, ஏராளமாய் சூரியத்துகள்கள் சுமந்தவண்ணம்; 'என்றாவது ஒரு நாள் மீண்டு வரும், முந்நாளில் பிரிந்த கூட்டம்' என, நமக்காக.
தான் சமைத்த உணவை தான் உண்ணாமல் அனைத்துயிர்க்கும் கொடுக்கும் பெருங்கொடை, கருணைக்கொடை... இதன் மடியமர்ந்து 'உணர்ந்து' கற்கவேண்டியதை வேறெங்கோ தேடி ஏன் இந்த வீண் அலைச்சல்?
"
கல்லாலின் புடையமர்ந்து
நான்மறையாரங்கமுதல் கற்றகேள்வி
வல்லார்கள் நால்வருக்கும்
வாக்கிறந்த பூரணமாய்
மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய்
இல்லாமல் இருந்ததனை
இருந்தபடி இருந்துகாட்டி
சொல்லாமல் சொன்னதனை
நினையாமல் நினைந்துபவ
தொடக்கமெலாமுழுதுணர் முனிவர்தேற
மூவகைப்பாசமாய ஆன்மாக்கள்
பதிநிழல் அடங்குமுன்னர்
தங்கைபொருவம் விரல்களால் தெரித்துயாரும் நிழல்வதிபவர்
துணைத்தாள் போற்றிபோற்றி!
"
என வேண்டுவது மரத்திடமா (தட்சிணா)மூர்த்தியிடமா என்ற புரிதலோடு இந்தப்பதிவை மீண்டும் வாசித்துதான் பாருங்களேன்!
பேரன்புடன்,
பாபுஜி
பின் குறிப்பு: 'அப்படீன்னா பள்ளிக்கூடமே தேவையில்லையா?!'
தேவையில்லைன்னு நான் எங்கே சொன்னேன்? நமக்கான தேவைகளை நிரப்பும் பள்ளிக்கூடங்கள் அவசியம் தேவைன்னுதான் சொல்றேன். அவை நம்மையும் இயற்கையையும் இணைக்கும் தொடுபுள்ளிகளாக (touch points) இருந்தால் எவ்ளோ நல்லாயிருக்கும்?!!


கருத்துகள்
கருத்துரையிடுக