காதல் காதல் காதல். காதல் போயின் காதல்!
உறைபனிக்குளிரில் தேநீர்க்கோப்பையின் உள்ளங்கை சூடு.
மெலிதான வெக்கையில் முகம் தழுவும் இளங்காத்து.
குளத்து நீரில் பாதம் வருடும் மீனின் முத்தம்.
காற்றைப்பொத்தலிடும் மூச்சு கையில் உரச, சொற சொற நாக்கால் கை வருடும் கன்றின் நாக்கு ஒழுகல்.
சிறுவயது மழைநாளில் குளிரடக்கும் அம்மையின் சேலை வாசனை.
கோடை வெக்கையில் வானமிருண்டு திடீரென முகத்திலிறங்கும் முதல் ஆலங்கட்டி.
காபியில் நனைத்த பிசுக்கோத்தின் நுனி கரண்டி நாவிறங்கும் தீஞ்சுவை.
விசுக்கென வான் கலைத்து மறைந்த ஒற்றைக்குருவியின் காற்றிலாடும் உதிர்ந்த இறகு.
இருள் கவிந்த வயல் மரத்தில் மின்மினியின் ஒளி நடனம்.
சந்திக்கும் ஒற்றை நொடிக்காய் காத்திருந்த காலமெல்லாம் தேக்கிவைத்த அன்பில் பளபளக்கும் இருள் விழிகள்.
இருப்பு மறந்து உரு மறந்து அருவாய் அவ்வன்பில் நனைந்த ஆன்மாவின் உள்வெளிச்சம்.
செம்புலத்தில் பசுமை கட்டி தலையாட்டும் பயிர்நுனியின் விரல் தீண்டல்.
நள்ளிரவில் ஆழ்துயிலில் கரம் தேடி பற்றிக்கொள்ளும் பிஞ்சு விரல்கள்.
விடைபெறத்தவிக்கும் உயிர்க்கூட்டின் அரவணைப்பு பஞ்சுப்பொதி.
இன்று புதிதாய் வீட்டு மரத்தில் இளைப்பாறிய முன்கண்டிராத பறவைக்கூட்டம். அவை விட்டுச்சென்ற ஓசைகள் தொங்க புதிதாய் காற்றிலாடும் பழைய மரம்.
ஓட்டை சைக்கிளில் காற்றிரங்கிய சக்கரத்துடன் குண்டுத்தங்கையை வலிந்து மிதிக்கும் ஒல்லித்தம்பியின் உற்சாகம்.
அவசர உலகின் ஓட்டத்தில் பின்னிரவு வழிப்போக்கனின் பையிலிருந்து கசிந்தோடும் மனமுருக்கும் இசைக்கோவை.
நிலவற்ற வானின் கீழ் யாருமற்ற இருள்சாலையில் தள்ளாடி முதல் நடை துவங்கும் வெளுப்பு நாய்க்குட்டி.
மனநலம் குன்றிய சிறுவனை நம்பிக்கை பிடித்து அழைத்துச்செல்லும் பெண்ணின் சலனமற்ற முகம்.
வண்ணச்செழிப்புடன் கண்முன்னே நடமாடி மறைந்த பச்சை கருப்பு வண்ணப்பூச்சி.
நம் நாளில் வண்ணம் சேர்க்க எத்தனை எத்தனை நிகழ்வுகள். காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி சுயம் தொலைக்கும் நொடிகளை வாழ்வு நம்முள் விதைத்துக்கொண்டேதான் இருக்கிறது;
நிலம் எப்படியாயினும்.
மணிகாட்டியின் முற்களிலிருந்து சற்றே இறங்கி இளைப்பாற சோலை வளர்ப்போமா இவ்விதைகள் வழியே?
கருத்துகள்
கருத்துரையிடுக