மிகப்பல வருடங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ஒரு குறுகிய இடைவெளியில் மூன்று அற்புதமான படங்கள்!
மொத ராத்திரி,
டோரதி,
பத்தா
ஒன்றின் சாயல் இன்னொன்றில் இல்லாமல், ஒவ்வொன்றும் ஒரு விதம்.
தரையிறங்கியவுடன் திருமணம் என்பதை அறியாமல் தாயகம் திரும்பும் மருது, அந்த திருமணம் நடக்கும் முன்னும் நடந்த பின்னும் தன் காதலனுடன் தப்பியோடத்தவிக்கும் முத்து, அவளை காதலனுடன் சேர்த்து வைக்க முதலிரவு அன்று யாருக்கும் தெரியாமல் அழைத்துப்போகும் அவளது புதுக்கணவன், ஊரெல்லை சாமி, சாமியுடன் அன்புச்சண்டை செய்யும் பூசாரி, இவர்களது குடும்பத்தினரின் யதார்த்த வாழ்வியல் என விரிகிறது மொத ராத்திரி. மொத ராத்திரி எப்படி விடிகிறது என்பதை இரவு முழுசும் கல்யாண வீட்டு முகவரியை தேடி அலையும் முதலிரவுக்கட்டிலுடனும் அதை விடிந்தபின்பு டெலிவரி தரும் கடை உரிமையாளருடனும் நாமும் உணர்வுக்கலவையில் அலைந்து 'காண்கிறோம்'.
அடுத்து டோரதி.
'ஆண்புள்ள, அழக்கூடாது!'
"பொட்டச்சி மாதிரி அதென்ன அழுகை?!"
என்கிற சொல்லாடல்கள் சகஜமாய் கொட்டிக்கிடக்கும் காலவெளியில், நிலப்பரப்பில் சிக்குண்ட இரு சிறுவர்கள், வளர்கையில் அவர்களில் ஒருவன் மெல்ல மெல்ல வன்முறைக்கு மாறுகிறான், இன்னொருவனோ, தன் உடல்கூண்டுக்குள்ளேயே சிக்குண்டு, பெண்ணாக வெளியேற வழியின்றி தவிக்கிறான். அவனது தவிப்புக்கு ஒரு வடிகாலாக இந்த தளத்தில் இவர்களுக்கு அறிமுகமாகிறாள் டோரதி. அவளது இருப்பும் பின்பு இறப்பும் அவனை என்ன செய்கிறது? அவனது நண்பன் அதை எப்படி எதிர் கொள்கிறான் என்பதை
ரத்தமும் சதையுமாய் 1990களின் மதுரையில்...
ஆணாதிக்க சமூக கட்டமைப்புக்குள் ஒரு பால் மாறாட்டப்போராட்டத்தை ஒரு வாழ்வியல் பயணமாக மாற்றி, நம் சமூகப்பார்வையையும் மாற்றுகிற டோரதி மற்றும் இளையராஜாவி்ன் இசை!
பிறகு பத்தா!
தாழ்ப்பாள் போடப்பட்ட ஒரு கக்கூஸ் கதவு, ஒரு புறம் ஒரு பயங்கர ரவுடி, மறுபுறம் ஒரு பயந்தாங்கொள்ளி சிறுவன். இதை வைத்துக்கொண்டு ஒரு வாழ்வியல் பாடம் தருகிறது பத்தா!
எனக்கு நினைவு தெரிந்து இதற்கு முன் பார்வையாளர்கள் எல்லோரும் இந்த அளவு ஆர்ப்பரித்து சி்ரித்து படம் பார்த்தது, படம் முடிந்தபிறகும் சிரித்துக்கொண்டே மன நிறைவுடன் வெளியேறியது பாலு மகேந்திராவின் சதி லீலாவதி படத்திற்குதான்! சதி லாலாவதியில் கூட கடைசி ஐந்து நிமிடங்கள் வரும் கார் பைக் Chase, கமலின் பைக் கோமாளித்தனங்கள் தலையை சொரியவைத்தது, பத்தா திரைப்படத்தில் அந்த மாதிரி சாகசங்கள் எதுவும் இன்றி இன்னும் மனதுக்கு நெருக்கமாக மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்தது.
உத்தம வில்லன் திரைப்படத்தில் இயக்குநர் பாலச்சந்தரும் நடிகர் மனோரஞ்சனும் பேசிக்கொள்வது போல, 'எல்லாரும் தியேட்டர விட்டு சிரிச்சிகிட்டே பிற மாதிரி ஒரு படமா? பண்லாண்டா, நிச்சயமா!' என செய்திருக்கிறார் பாலாஜி தரணிதரன். (எனது ஒரே ஒரு வருத்தம், 1980களில் நடக்கும் இந்தப்படத்திற்கு ஏன் இளையராஜாவின் இசை இல்லை என்பதுதான்.)
இவை மூன்றையும் கடந்த சில வாரங்களில் திரையரங்குக்கு சென்று பார்த்தவர்கள் தமிழ் சினிமாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
பாரதிராஜா + பாக்கியராஜ் என்கிற இரு பெரும் ஆளுமைகள் அடுத்தடுத்து நம்மை விட்டுப்பிரிந்தபின் அவர்கள் விட்டுச்சென்ற விழுதுகள் தமிழ் சினிமாவை தாங்கிப்பிடிக்கும், தூக்கி நிறுத்தும் என்கிற நம்பிக்கையை விதைக்கின்றன இந்தப்படங்கள்.
மலையாள திரைப்படங்கள் மட்டும் எப்படி தொடர்ச்சியாக 'வேற லெவலில்' என ஏங்கிக்கொண்டிருந்த பலருக்கு இந்த மூன்று தமிழ் படங்களும் ஒரு வலுவான நம்பிக்கையை தந்திருக்கின்றன.
இந்த மூன்று படங்களும் வெற்றிகரமாக செய்தது, 'ஆம்பள!' என நாம் நினைத்து திரிந்துகொண்டிருக்கும் அந்த அரதப்பழசான டெம்ப்ளேட்டை தூரமாய் கடாசிவிட்டு வேறு புதிய பரிமாணங்களை நமக்கு அறிமுகப்படுத்தியது! இப்போது வாழும், இனி வாழப்போகும் சமூகங்களின் கனிவான கவனத்திற்கு :-)
இந்த மூன்றுக்கும் இடையில் அக்கட பூமி சேட்டன்களும் சேச்சிகளும் தங்கள் குல வழக்கப்படி தந்திருக்கும் 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' டையும் பார்த்தேன், 'சபாஷ், சரியான போட்டி, தரமான போட்டி!!'
BKU - அதாங்க, மலையாளப்படம், ஒரு எளிமையான காதல் கதை - வயது இடைவெளி அதிகமான ஆணும் வயது குறைவான பெண்ணும் காதல் வயப்படும் 'பழைய்ய்ய' கதை என்று நினைத்துதான் பார்க்கத்தொடங்கினேன். படம் முடிகையில் 'எல்லோரையும், எல்லாவற்றையும் காதலிக்கவைக்கும் ஆற்றல் கொண்ட படம்டோய் இது!' என வியந்தேன்.
May more and more such movies are made to enthral us and make our lives a tad better in their own ways...
ராஜா கருப்பசாமி, மருது, முத்து, பூசாரி மாமா(! - இந்த ஆண்டின் சிறந்த துணை நடிகர் விருதுகள் உங்களுக்குதான் சேட்டன்!) கார்த்திக் சுப்புராஜ், டோரதி, கார்த்தி, சுப்பு, பத்தா, சபரி, பாலாஜி தரணிதரன் என நம் சினிமா மீண்டும் பறப்பதற்கு அமர்க்களமான ஓடுதளம் அமைத்திருக்கிறீர்கள்.
ரிஷிகாந்த், சனந்த், விஜய் சேதுபதி - எப்டீங்க இப்படில்லாம் நடிக்கிறீங்க!!!!
டேய் சபரி என்கிற சாய் ப்ரித்விராஜ், வீட்ல அம்மாட்ட சொல்லி திருஷ்டி சுத்திப்போட சொல்லுடா!
இளையராஜா! - இவரது இசையைப்பற்றி பல நூறு வருடங்களுக்குப்பிறகும் வாசிக்கப்படப்போகும் ஒரு Folk Story ஒன்றை மக்களுக்காக நான் எழுதுகிறேன் இப்படி:
'ஒரு ஊர்ல ஒரு ராஜா... இல்லல்ல, நம்ம பூமியில... ஒரே ஒரு ராஜா!!'
85 வயதில் இவர் டோரதிக்கு தந்திருக்கும் இசையை ஒரு முறையாவது கேட்பதற்காகவாவது டோரதி பாருங்கள்!
பேரன்புடன்,
பாபுஜி




எப்போதும் போல் நல்ல சினிமா பார்த்த ஆனந்தத்துடன் நீ ங்கள்! நல்ல தேர்வு என் பொழுதைக் கழிக்க என்ற மன நிறைவுடன் நான்!! நன்றி!!!
பதிலளிநீக்கு