சாலைகளே இல்லாத வசிப்பிடங்களை, தண்ணீர்க்குழாய்கள் இல்லாத, கழிப்பறைகளே இல்லா வீடுகளை, உறங்கும்வரை செயற்கை ஒளி உமிழா இருள்பொழுதை நம்மால் கற்பனையில்கூட வாழமுடியுமா? ஆலைக்காடுகள், உணவுக்காடுகள், வணிகக்காடுகள், தடுப்புக்காடுகள், காகிதக்காடுகள், எண்ணெய்ப்பனங்காடுகள், பணங்(காய்ச்சி)காடுகள், அரண்காடுகள்... புத்தியுள்ள மனிதரெல்லாம் தமக்கு தோன்றிய பெயர்களில் எல்லாம் காடுகள் "வளர்க்க" உலகம் முழுதும் முயல்கிறார்கள். தொடக்க பத்தியில் எதுவெல்லாம் இல்லாது கற்பனையில்கூட வாழமுடியாது என்று எண்ணுகின்றனரோ அவற்றை எல்லாம் முதலில் அங்கு செய்து முடித்தபின்னரே அவர்கள் காடுகளென கற்பிதம் செய்த நிலப்பரப்பில் இந்த கட்டமைப்புக்குள் பதுங்கி ஓய்வில் திளைக்கிறார்கள், வணிகம் வளர்க்கிறார்கள். புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிபெறுவதில்லை... ஏனெனில் காடுகளை "உருவாக்க" மனிதர்களால் முடியவே முடியாது. காடுகள் ஆதி தொட்டே பறவைகள் வழி, விலங்குகள் வழி, நீர்வழிகளுக்கு அருகில் உண்டாகுபவை. காற்றின் வழி, எச்சம் வழி வளர்பவை, (பறவைகள் / விலங்குகளின்) உணவுப்பழக்கம் வழி நேர்த்தி செய்யப்படுபவை. ...
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!