முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதிகெட்டான் சோலை

சாலைகளே இல்லாத வசிப்பிடங்களை, தண்ணீர்க்குழாய்கள் இல்லாத, கழிப்பறைகளே இல்லா வீடுகளை, உறங்கும்வரை செயற்கை ஒளி உமிழா இருள்பொழுதை நம்மால் கற்பனையில்கூட வாழமுடியுமா?

ஆலைக்காடுகள், உணவுக்காடுகள், வணிகக்காடுகள், தடுப்புக்காடுகள், காகிதக்காடுகள், எண்ணெய்ப்பனங்காடுகள், பணங்(காய்ச்சி)காடுகள், அரண்காடுகள்...

புத்தியுள்ள மனிதரெல்லாம் தமக்கு தோன்றிய பெயர்களில் எல்லாம் காடுகள் "வளர்க்க" உலகம் முழுதும் முயல்கிறார்கள். தொடக்க பத்தியில் எதுவெல்லாம் இல்லாது கற்பனையில்கூட வாழமுடியாது என்று எண்ணுகின்றனரோ அவற்றை எல்லாம் முதலில் அங்கு செய்து முடித்தபின்னரே அவர்கள் காடுகளென கற்பிதம் செய்த நிலப்பரப்பில் இந்த கட்டமைப்புக்குள் பதுங்கி ஓய்வில் திளைக்கிறார்கள், வணிகம் வளர்க்கிறார்கள்.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றிபெறுவதில்லை...

ஏனெனில் காடுகளை "உருவாக்க" மனிதர்களால் முடியவே முடியாது. 

காடுகள் ஆதி தொட்டே பறவைகள் வழி, விலங்குகள் வழி, நீர்வழிகளுக்கு அருகில் உண்டாகுபவை. காற்றின் வழி, எச்சம் வழி வளர்பவை, (பறவைகள் / விலங்குகளின்) உணவுப்பழக்கம் வழி நேர்த்தி செய்யப்படுபவை.

காடுகளில் பல்லாயிரம் விலங்குகள் நிறைந்திருந்தாலும் அவை மனிதர்கள் போல ஒற்றையடித்தடத்தை கூட உருவாக்குவதில்லை. தடமே இல்லையென்றானபின் பைப்பாவது, கக்கூசாவது!

நானும் பல ஆண்டுகள் முன்னால் 'காட்டுப்பூச்சி'யால் கடிக்கப்பட்டு வனம் வளர்க்க ஆசைப்பட்டேன்.

வடிவமைப்பில் தேர்ச்சிகொண்ட ஒருவரின் அறிமுகம் கிடைத்ததும் மகிழ்வோடு எனது முள்வேலியிட்ட தென்னை தோப்பிற்கு அழைத்துச்சென்றேன்.

அவரது முதல் கேள்வி, 'இங்கு என்ன செய்ய விரும்புகிறீர்கள்?'

ஆர்வம் கண்களில் மின்ன, "காடு வளர்க்கப்போகிறேன்!" என்றேன்.

'அப்படியா? வாயிற்கதவை இழுத்து மூடி ஒரு பெரிய பூட்டு மாட்டிவிட்டால் போதும். அதன்பிறகு நமக்கு இங்கு வேலை இல்லை! காடு தானே வரும், வளரும், செழிக்கும்' என்றார்.

பிறகுதான் 'தேவைக்கான வளர்ப்பு' என்ற புரிதலோடு மரம், செடி, கொடிகள் நட்டு, விலங்கினங்கள் மற்றும் பறவையினங்களை வரவேற்று, வளர்த்துக்கொண்டிருக்கிறேன். 

பேங்க் வட்டியாவது வருமா? மாசா மாசம் வருமா? வருவாய் வளருமா? போன்றவையே என்னை மதிப்பவர்களின், என் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்களின் சிந்தனையாக இருப்பது நம் தொழில்நுட்ப வாழ்வியல் கற்றுத்தந்த சிக்கல்.

அறிவுசார் தொழில் நுட்பம் ஒரு போதும் விதைகள் செய்யாது, முடியாது.

மரபுசார் தொழில்நுட்பத்தை சரியாகப்புரிந்துகொள்ள முனையாமலே, 'இது கள்ளாட்டம், நான் தருகிறேன் நல்லாட்டம்' என நாம் துணிந்தது, வணிகம் தந்த "ஆற்றலினால்" மட்டுமே.

வணிகம் பொறிகள் செய்தது, பறக்கவைத்தது. இன்று ஆளற்ற, தாவரங்களற்ற நிலப்பரப்புகளில் விதை குண்டுகளை (ஆளற்ற) பறக்கும் பொறிகள் கொண்டு 'துளைத்து' கானகங்கள் வளர்க்க விழைகிறது.

இது போன்ற நல்லுணர்வு முயற்சிகள் சரியான அடிப்படை புரிதலின்றி செய்யப்படுபவை. அடிப்படை சிக்கல்கள் பல:

 'கானகங்களில் விதைகள் எவராலும் ஊன்றப்படுவதில்லை'.

'கானகங்களில் விழும் விதைகள் மண் தொடாமலே முளைப்பதுதான் அதிகம்'.

'எந்த விதை எப்போது கண் விழிக்கும் என்பதை கானகம் மட்டுமே அறியும்'.

'பல விதைகள் விலங்கு / பறவையின் வயிறு வழி வந்தால் மட்டுமே முளைக்கும். பொறிகள் கொண்டு சுடப்படும் விதை குண்டுகளில், மனிதர்களால் நட்டு வளர்க்கப்படக்கூடிய மரவிதைகளை மட்டுமே பயன்படுத்தப்படு்ம். இது இயற்கையின் இயக்கத்திற்கு முரணானது. (டைனசோரை மீளுருவாக்கி இன்றைய ஆப்பிரிக்க நிலப்பரப்பில் வானூர்தி வழி இறக்கி விட்டால், சில மாதங்களிலேயே அருகிலுள்ள உணவு விடுதிகளில் / தொலைவிலுள்ள உங்கள் இல்லத்தில் புட்டியில் அடைபட்டு கிடக்கும், ஆப்பிரிக்க கழுதைகளுக்கு இன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் பேரவலம் போலவே' (ஏனெனில் டைனசோரையே புட்டிகளில் அடைக்கும் ஆற்றலையும் அதை நுகரும் ஆவலையும் இதே தொழில்நுட்பம் நம் மூளைக்குள் புதைத்து பல காலம் ஆச்சி!))

கானகம் என்பது ஒரு நிலப்பரப்பில் அடங்கி நிற்கக்கூடிய ஒன்றல்ல... அதையும் தாண்டி பேரியக்கமானது!



எனது நண்பர் திரு. பாரதிதாசன், கோவையில் அருளகம் என்கிற தன்னார்வு நிறுவனம் நடத்துகிறார். பாறு கழுகுகள் என அழைக்கப்படும், அழிவின் விளிம்புக்கு நாம் தள்ளிய, வல்லூறு இனத்தை நம்மிடமிருந்து காக்க போராடிக்கொண்டிருக்கிறார். 'பாறு கழுகுகளும் பழங்குடியினரும்' என்று அவர் எழுதியுள்ள அற்புதமான நூலிலிருந்து ஒரு இழையை இங்கு பகிர்கிறேன்.

டோடோ என்கிற பறவையினம், மொரீஷியஸ் தீவுகளில் மட்டுமே பல்கிப்பெருகிய இனம். 

வணிக நீர் வழிகளை கண்டறிய புதிய உலகில் ஆற்றல் மிக்க அரசுகள் அனுப்பிய சில கப்பல்கள் இங்கு இளைப்பாற கரையேற, கூட்டம் கூட்டமாய் டோடோ பறவைகள் மகிழ்வோடு அவர்களை உரசி வழவேற்று, வளர்ப்புப்பிராணிகள் போல சுற்றி வந்தனவாம்.

வருவலா? வேக்காடா? என வந்தவர்கள் கூடிப்பேசி இப்பறவைகளை ருசித்து உண்டு, 'எலேய் மக்கா! இதுபோல மாமிசம் வேறெங்கும் கண்டதில்லை!' என ஆனந்தக்கூத்தாடி... கடைசி டோடோ வரை ஏப்பம் விட்டு மகிழ்ந்தார்களாம்.

டோடோ பறவைகள் போலவே மொரீஷியசில் மட்டுமே வளர்ந்து நின்ற கல்வாரியா மரங்கள் (சிலுவை மரம் அல்ல) டோடோக்களின் அழிவை சீரணிக்க முடியாமல் சில பத்தாண்டுகள் துக்கம் காத்து, மரித்துப்போனதாம்.

கல்வாரியா மரங்களை காணோமே என ஒரு குழு தலைசொறிந்து தேடி, தேடி... கண்டறிந்த காரணம் உலகையே வியக்கச்செய்ததாம்; 'டோடோ பறவைகள் உண்டு உமிழ்ந்தால் மட்டுமே யாம் முளைப்போம்!' என இம்மரங்களின் விதைகள் உறுதிபூண்டிருந்தது தெரியவந்ததாம்!

இது நடத்து ஆச்சி ஐநூறு வருடம். 

வரலாற்றிலிருந்து பாடம் கற்று இன்னும் அனுபவசாலிகளாக மாறிப்போன நாம் இன்று நம் பேராசை பெருநுகர்வினால் தினம் தினம் அழிவின் விளிம்பு நோக்கி ஏராளமான உயிரினங்களை தள்ளிக்கொண்டிருக்கிறோம். நம்மிடமிருந்து ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் (நாம்தான் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றோமே!) இவை வதைபட்டு சாலைகளில், இரயில் தடங்களில், மின் வேலிகளில், நீர் நிலைகளில் மாய்ந்துபோவதை 'இதுவும் கடந்துபோகும்' என கடந்துபோகிறோம். இவை மாண்ட துக்கத்தில் நம் கண்ணுக்குத்தெரியாமல் கல்வாரியா மரங்கள் போல பலப்பல உயிரினங்கள் அழிந்துபோவதை அறியாமலே வாழ்கிறோம்.

வண்ணத்துப்பூச்சிகள் அறியுமா நமது அதிவேக கார்களை?

வானேகும் பறவைகள் அறியுமா நமது அலுமினிய பறவைகளை?

ஆழ்கடலில் உலா வரும் உயிரினங்கள் அறியுமா இயந்திரப்படகுகளின் ராட்சத இழுவை மடிகளை? (Trawler nets)?

பசித்த வயிற்றுக்கு சிற்றுணவு தேடும் வயல்வெளி உயிரினங்கள் அறியுமா நாம் அவ்வுணவில் இட்ட நஞ்சை?

மண்புழுக்கள் அறியுமா நம் ட்ராக்டர்களின் விசைக்கலப்பைகளை?

இறந்த விலங்குகளை / பறவைகளை உண்டு வாழும் உயிரினங்கள் அறியுமா 
இறந்த உடல்களில் ஊறிக்கிடக்கும் நவீன மருத்துவ நச்சுக்களை?

பண்டிகை தினங்களில் காக்கைக்கு அன்னமிட்டபின்னரே உணவுண்ட நாம் அறிவோமா ஏன் இப்போதெல்லாம் நம் வானில் காகங்கள் பறப்பதில்லை என?

முடிவற்ற சங்கிலிக்கண்ணிகளால் பிணைக்கப்பட்டு ஒத்திசையும் மாபெரும் வாழ்வியலில் ஒரு கண்ணியான நாம், நம் மனம் போன போக்கில் உடைத்தெறியும் கண்ணிகளால் விரைவில் அழியப்போவதென்னவோ நாம்தான்!

சோலை என்பது நம் மகிழ்வுக்காக நாம் உருவாக்கும் ஒரு கட்டமைப்பு. மதி (சிந்தனை) கொண்டு வடிவமைத்து, மதி கொண்டு என்ன மாற்றம் செய்தாலும் சோலை, வனமாகாது.

மதி கெட்டால் மட்டுமே சோலை, கானகமாகலாம்! ஏனெனில் கானகம் என்பது 'உணரப்படவேண்டிய' ஒன்றே தவிர 'அறியப்படவேண்டிய' ஒன்றே அல்ல!

சற்றே உங்கள் அலுவல்களை நிறுத்தி. நீங்கள் பதுங்கி இருக்கும் இடங்களில் இருந்து வெளியே வந்து, மதி நீக்கி உணர்வு மட்டும் கொண்டு சுற்றும் முற்றும் பாருங்கள், கானகங்கள் நம்மை விட்டு ஒருபோதும் விலகுவதில்லை என்கிற புரிதலை உங்கள் காலடியில் தலையாட்டும் ஏதோவொரு தாவரம் உணர்த்தும் :-)



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்