இந்தியா.
இந்தியா?
இல்லை, தமிழ்!
இல்லை, தெலுங்கு!
இல்லை, துளு!
இல்லை, பிகாரி!
இல்லை, ஒரியான்வி!
இந்தியா இந்துக்களின் நிலப்பரப்பு.
அன்றும், இன்றும், என்றும்.
இந்து என்பது மதமல்ல. வாழ்வியல்.
வட-தென், கிழ-மேல் முனைகளிலும் இடைப்பட்ட பகுதிகளிலும் நிலப்பரப்பு, உணவு, உடை எவ்வாறு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்ட வாழ்வியல்.
பண்புகள், நன்மை தீமைகள் யாவற்றிலும் அடிப்படை ஒற்றுமை கொண்ட வாழ்வியல்.
ஐம்பூதங்களையும், அனைத்துயிர்களையும் வியந்து போற்றி வணங்கி வாழ்ந்த ஏராளமான தொல்குடியினரால் பாதுகாக்கப்பட்ட பெரும்பரப்பு.
எனது வாழ்வு எனது நிலத்தில். உனது வாழ்வு உனது நிலத்தில். வந்தால் விருந்தினனாய் வா. நல்லது பகிர், நல்லது எடுத்துச்செல். இவை செய்யும்வரையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பேருணர்வு நிறைந்த நிலம்.
வேறு நிலங்களிலிருந்து வந்தவர் எவரும் இங்கேயே இருந்துபோனதில்லை பண்டைய வாழ்வில்.
ரோமப்பேரரசு, பேரரசானபோதும், ரத்தம் சிந்தி சிதைந்தபோதும், பௌத்தம், கிருத்துவம், இஸ்லாம் என பல புதிய பெரிய வாழ்வியல் முறைகள் தோன்றி, தமக்குள் முட்டி மோதி, துரத்தி வெட்டி, ஓடி ஒளிந்து என்று வரலாறு தேய்ந்தபோதும் நம் வாழ்வியல் சலனமற்று வளர்ந்து வந்தது.
கடல் கடந்து நாடுகள் வென்ற நம் மக்களும் நம் வாழ்வியலை கத்தி முனையில் அக்கரையில், எக்கரையிலும், திணித்ததாய் வரலாறில்லை.
Integration, Homogenization எனப்படும் ஒருங்கிணைத்தல், ஒன்றேபோல் ஆக்குதல் என்பனவெல்லாம் நம் வாழ்வியல் அறிந்திராதவை, படைக்கும், காக்கும், அழிக்கும் கடவுள்கள் அவதரிக்கும்வரை.
அதற்கு முன்பு நமக்கு வியப்பூட்டிய அனைத்தையும் போற்றிய வாழ்வியல், தடம் மாறத்தொடங்கியது இங்குதான். கடவுளர்களை வகுத்தோம், கடமைகளை பகிர்ந்தளித்தோம். கடவுளர்களுக்கும் நாம் உயர்வு தாழ்வு வரையறுத்தோம். அவர்களை வணங்கும் மக்களையும் நிறம் பிரித்தோம். அடையாளம் அவசியம் என்றோம்.
இந்திய நிலப்பரப்பு முழுமைக்கும் பரவியிருந்த மனிதக்கூட்டம். தம் தம் சுய அடையாளங்கள் இழந்து புதிதாய் வரையறுக்கப்பட்ட அடையாளங்களுக்குள் தம்மை புகுத்திக்கொண்டதே முதலாம் உலகமயமாக்கல் (ஏனைய மதங்கள் அனைத்தும் மற்ற நிலப்பரப்புக்களில் இதையேதான் செய்தன; அதாவது, நம் அணுகுமுறையை நகலெடுத்தன (they copied our approach), செம்மைப்படுத்தின, முன்னிறுத்தின, மற்ற மதங்களை படைபலம் கொண்டு தம் மதத்துக்கு மாற்றின. மாற மறுத்தவர்களை அழித்தன).
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற நமது முதுமொழியின் பொருள் குருதிகொண்டு மாற்றியமைக்கப்பட்டது இவ்விதம்.
"யாவரும் கேளிர், அவர்கள் மனிதர்களாய் இருந்தால் மட்டும்" என இரண்டாவது உலகமயமாக்கல் மத்திய ஆசிய நிலப்பரப்பில் தொடங்கி உலகம் முழுவதும் பரவியது மிக விரைவாய்.
"நமக்கு மட்டும் உணவிருந்தால் போதும். நம்மால் உண்ண இயலாததை அழித்து, நமக்கு வேண்டியதை மட்டும் வளர்ப்போம், நாம் அழித்தது வேறு எதுவாய் / எதன் உணவாய் / உறைவிடமாய் இருந்தால் நமக்கென்ன?" என்பது இரண்டாம் உலகமயமாக்கலின் நிலைப்பாடு.
"எல்லோரும் இதையே உடல்திறனை வைத்து மட்டும் செய்துகொண்டிருந்தால் எப்படி? உணவுக்கான நிலப்பரப்பு நம் உணவுத்தேவையை விட மெல்லவே ஆயத்தமாகிறதே. பொறிகள் செய்வோம், உணவு பெருக்குவோம்" என மூன்றாம் உலகமயமாக்கல் நோக்கி நகர்ந்தோம்.
நுகர்வு உணர்வும், வாய்ப்பும் பெருகி பெருநுகர்வாகி, "நுகர்வு மட்டுமே நாம் செய்வோம், உணவு உற்பத்தியை, நுகர்வுப்பொருட்களை முழுக்க முழுக்க எந்திரங்கள் செய்யும்" என நான்காம் உலகமயமாக்கம் இப்போது நம் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறது.
"உணவு, நுகர்வு பற்றிய கவலை இன்றி வாழமுடிகிறதே!. வாழும் நாளை நீட்டித்தால் நுகர்வை இன்னும் இன்னும் அனுபவிக்கலாமே!" என நாமே முன்னர் கடவுளரிடம் தந்த ஆக்கும், காக்கும், அழிக்கும் தொழில்களையும் அறிவியலிடம் கைமாற்றிவிடும் நிகழ்வு, ஐந்தாம் உலகமயமாக்கல், ஏற்கனவே தொடங்கியாகிவிட்டது.
"முடிவற்ற வாழ்வு பெறுவோம். நம் நுகர்வு வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நம் பூமி அழிவின் விளிம்பில் சுழல்கிறதே! துரிதமாய் வேறு பூமிகளுக்கு நகர்வோம்" என்கிற முதலாவது புவி பெயர்தல் (புலம் பெயர்தல் புவிக்குள் நடப்பது. இது வேறு பரிமாணம்!) நோக்கி நிறுத்திகள் இன்றி (without brakes) மனிதவேகத்தில்* சென்றுகொண்டிருக்கிறோம்.
இந்தியா?
நம் உலகெனும் சிறுபுள்ளியின் பல துகள்களில் ஒன்று; அவ்வளவே.
(* அசுரவேகத்தை நாம் தாண்டி ஐம்பது வருடங்கள் ஆகிப்போனது இப்போது...)
கருத்துகள்
கருத்துரையிடுக