கும்மோணத்தில் ஐயங்காரத்தெருவில் ஜாகை. வீட்டிலிருந்து பொடி நடையாய் கடலங்குடித்தெருவுக்கு நடந்தால் சில நிமிடங்களில் R.C. Morning Star பள்ளி. ஒரு எதிர்கால இயற்கை விவசாயி பளிங்கியும் பம்பரமும் இன்னபிற வாழ்க்கைக்கு அவசியமான கலைகளையும் படிப்போடு சேர்த்து கற்ற களம் :-)
ஐயங்காரத்தெருவில் எல்லா வீடும் நாலு கட்டு வீடு. முதலில் ஒரு சிறிய வரவேற்பறை போல, அதை தாண்டினால் நேரே முத்தம் நோக்கி (ஆழ்வார்பேட்ட ஆண்டவரே, இந்த முத்தம் உங்க முத்தம் இல்லன்னு இவங்களுக்கு நான் எப்படி புரியவைப்பேன்?!) ரேழி, ரேழிக்கு வலதுபுறம் ஒரு பெரிய ஹால், ஹாலின் முதுகாக ஒரு அடுப்படி. இடது பக்க முத்தம் தாண்டி பின்கட்டில் பெரிதாய் ஒரு அறை, அதன் அடுப்படியும் முன்கட்டு அடுப்படியும் 'ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து' போல அமைப்பில். அறை தாண்டி கொல்லைப்புறம் (நாலாம் கட்டு. அப்டியே ரிவர்சில போனா வரவேற்பறை முதலாம் கட்டு). நீஈஈளமான கொல்லைப்புறத்தின் முடிவில் பாம்பே டாய்லட். அதன் முதுகில் மதில் சுவர் நிற்கும். சுவர் தாண்டி பின்னால் திறந்தவெளி (வாய்க்கால் இருந்ததா?...நினைவிலில்லை).
முதல் மூன்று கட்டில் வீட்டு உரிமையாளர் குடும்பம் குடியிருக்க, பின் கட்டில் வாடகைக்கு, எங்கள் வீடு. அதற்கு மட்டும் மாடி உண்டு. உள்ளிருந்தே படிக்கட்டு மேலே போகும்.
வீட்டு உரிமையாளர் தம்பதி அற்புதமான மனிதர்கள் என அன்றே என் சிறு மூளையில் பதிந்திருந்த்து. கணவர் மிலிடரி ரிடயர்டு, மனைவி house wife. ஒரு பெண் ஒரு ஆண் என இரு குழந்தைகள். பெண் என் அண்ணாவைவிட பெரியவள், பையன் என் வயது.
இந்த வீட்டில் இரண்டு இடங்கள் என் மனதில் அழியா சித்திரங்களாய்....
முதலிடம் முத்தத்துக்கே!
மழைசாரல் தெறிக்க தரையெங்கும் சலசலப்போடு குமிழ் உடைக்கும் சில்லென்ற நீரோட்டம், அதில் மிதக்கும் எங்களது காகித கப்பல்கள்!
இரண்டாமிடம் பாம்பே டாய்லட்! கதவை திறந்து நுழைந்தால் தரைமட்டத்திலிருந்து ஒரு அடி உயரத்தில் ஒரு பலகை மேடை போல இருக்கும். மையத்தில் ஒரு முக்காலடி ஓட்டை. அதுவே எங்கள் டாய்லட்.
ரீசைக்ளிங் ஏஜண்டுகளாக பன்றிகள்! ஆறேழு வயதில் பன்றியின் உறுமல்கள் கேட்டுக்கொண்டே "கழிந்த" நாட்களின் திரில்...மறக்க முடியாத திகில் அனுபவம் :-)
குழந்தைகள் மற்றும் சிறார்கள் வெகுளிகளாகவும் பெரியவர்கள் குழந்தைகளை தெய்வங்களாகவும் கொண்டாடிய காலம் அது.
வாடகைக்கு குடியிருப்பவர்களின் குழந்தைகளுக்கு வீட்டுக்கார அம்மாக்கள் அத்தைகள் என்றும் அப்பாக்கள் மாமாக்கள் என்றும் மகிழ்வோடு உறவு கொண்டாடிய தலைமுறைகளின் இறுதி தலைக்கட்டுகள் நாங்களாகவே இருப்போம்!
உறவுகளும் சகஜமாய் இங்குமங்கும் கிட்சன் விட்டு கிட்சன் தாவும் அளவுக்கு இன்மையாய்...oh my god! So much has been lost in the name of progress...:-(
எங்களது பெரிய குடும்பத்தில் பல குழந்தைகள், கும்மோணத்தில் பிறந்தபின் ஆசுபத்திரியிலிருந்து சொந்த வீடு போவதற்கு முன் pit stop போல எங்கள் வீடு. ஏனெனில் என் அம்மாதான் அநேக உறவுக்கார குழந்தைகளுக்கு தலைமை தாதி, அவர்களின் அம்மாக்களுக்கு midwife plus இன்னும் பல roleகள் செய்வார். தொப்புள்கொடிக்கு இன்னொரு உறை இருந்தால் அது இவர்தான் (அதனால்தான் கும்மோணம் favourite delivery spot ஆனது எங்கள் குடும்பத்தில்). அவரது ட்ரெய்னிங் அப்படி ((அம்மாவும் பெண்ணும் ஒரே நேரத்தில் பிரசவத்திற்கு அட்மிட் ஆவதும், ஒருவருக்கொருவர் தாதிகளாகவதும்....இதெல்லாம் பொதுவாழ்க்கைல சகஜம்ப்பா அந்த குடும்ப கட்டுப்பாடில்லாத தலைமுறைகளில் :-) இது தெரியாத மக்கமார்கள் இதே கதைய Bro Daddy ங்கிற பேரில் லாலேட்டனோட ப்ரித்விராஜ் சேர்ந்து நடிச்சி இயக்கினதை பெரிதாய் சிலாகித்து பார்த்த மக்களுக்கு என் தலைமுறை சார்பாக நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்...மக்களே அதெல்லாம் டூப்பு, எங்க தாத்தாங்கதான் ஒரிஜினல்ஸ் ha!)).
அய்யங்காரத்தெருவில் row houses, அனைத்தும் நாலு கட்டு வீடுகள். நிறைய வீடுகளின் வாசலில் திண்ணை இருக்கும். மரத்தாலான உருண்டையான தூண்கள் கூரையை தாங்கியிருக்கும். வீடுதோறும் குஞ்சு குளுவான்கள் முதல் இறைபேறுக்காக காத்திருக்கும் மூத்தோன்கள் வரை சில்லறை போல இறைந்து கிடக்கும் :-)
இப்படியான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அய்யங்காரத்தெருவில் இருந்து அப்படியே ரைட்டில் நடந்து லெப்டில் திரும்பி நடந்து மற்றொரு ரைட்டில் நுழைந்தால்...
நுழைந்தால்?
R. C. Morning Star என்கிற பள்ளிக்கூடம்.
அங்கதான் அடுத்த பார்ட்ல சந்திக்கப்போறோம் நட்பே :-)
பயணம் - தொடரும்.
ஸ்டாப் 01 ஐ மீண்டும் வாசிக்க விரும்பினால்

கருத்துகள்
கருத்துரையிடுக