விழுவது ஒன்று மழையாக இருக்கலாம், விதையாய் இருக்கலாம், இலையாய், கிளையாய், செடியாய், மரமாய் இருக்கலாம்.
இவை தவிர வேறொன்றும் விழுந்ததில்லை பூமியில், தாவரங்கள் மட்டுமே இருந்த வரையில்.
நீரில் உருவான ஒற்றை உயிர் கை கால் முளைத்து கரையேறியதும் இவை அதற்கும் உணவு ஈதிருக்கலாம்.
உணவுண்டு கொழுத்த அவ்வுயிர் பல்கிப்பெருகும்போதும் ஈதல் தொடர்ந்திருக்கலாம். ஈதலின் "மூலம் ஏதென" அறியும் ஆவலில் வால் வளர்த்த ஒன்று மரமேறியிருக்கலாம்.
மரம் காட்டிய தூரமே எல்லையென வாழ்ந்திருக்கலாம். தூரத்து மரங்கள்மேல் மையலாகி தாவி பயணம் தொடங்கியிருக்கலாம். இவை கண்ட காட்சி, வாழ்ந்த வாழ்வு ஏதோ ஒரு புள்ளியில் சலிக்கவும் வானேற முயன்று தாவி தரையில் வீழ்ந்திருக்கலாம். முகத்தில் மண் துடைத்து நிமிர்கையில் இடையறாத தாவர ஈகை தொட்ட பூமியின் பரப்பெல்லாம் நிறம் மாறி வளம் ஓங்கி கோடானு கோடி உயிர் நிரப்பியதை கண்டு களித்து கூத்தாடி, 'நம் பிறவிப்பயனை கண்டாச்சு' என மகிழ்ந்து மகிழ்வின் உச்சத்தில் வால் உதறி மனிதராகியிருக்கலாம். மனம் சிந்தனை வாக்கு என பிரித்தறியும் திறமை ஏதோ ஒரு புள்ளியில் கிட்ட,
'மரங்களால் ஆனது நம்மால் ஆகாதா?' என்ற கேள்வி எங்கோ முளைத்து வேள்வியாகி, வேள்வியின் உச்சம் அறிவின் உச்சம் என மருகி 'மரமற்ற உலகும் செய்வோம் யாம், இயலாவிட்டால் உலகற்ற வாழ்வு செய்வோம்' என ஏதாவது செய்யும் ஆவல் உந்த, கண்ணில் பட்ட, படாது ஒளிந்த அனைத்தையும் தேடிப்பிடித்து அலசி ஆராய்ந்து பிரித்து மேய்ந்து மீண்டும் பழைய வடிவுக்கு கொண்டுவர போராடி தோல்வியுற்று கவலையில் வால் திரும்ப வளர்த்து பல காலமாயிருக்கலாம். கொம்பும் இன்ன பிறவும் கூட வந்திருக்ககலாம். இடையறாத தேடுதலில் தேய்ந்து தேய்ந்து ஒற்றை செல்லினமாக மீண்டுமாகி, நில விளிம்பில் ஊர்ந்து கடலடைந்த பின்னும் விழுவது ஒன்று மழையாக இருக்கலாம், விதையாய் இருக்கலாம், இலையாய், கிளையாய், செடியாய், மரமாய் இருக்கலாம்.
இவை தவிர வேறொன்றும் விழுந்ததில்லை பூமியில், தாவரங்கள் மட்டுமே இருந்த வரையில்.
நம் உலகின் முடிவற்ற வரலாறு இப்படியாகவும் இருக்கலாம். எழுதிக்கொண்டே இருப்பவை மரங்களாகவும் இருக்கலாம்...
Superb
பதிலளிநீக்குThe story of evolution explained succinctly, upto the End!
பதிலளிநீக்குAnd the role human mind plays towards this End :-)
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி
நீக்கு