துறு துறு குழந்தைகளை ஷாப்பிங் அழைத்துச்சென்ற இடங்களில் சமாளிப்பது எப்படி என இந்த துறையில் விற்பன்னரான திருத்துறைப்பூண்டி லேட். சீனிவாசன் தாத்தாவிடம் கேட்டபோது அவர் சொன்னது:
(அவருக்கு ஆறு குழந்தைகள்; அவரது அண்ணனுக்கு 12! அண்ணனை விடுத்து இவரிடம் கேட்டதன் காரணம் படிக்கையில் விளங்கும் :-)
'நீ டவுசர் போட ஆரம்பிச்ச டைம் அது. நியாபகம் இருக்கா? கும்மோணம் மாமாங்கத்தில என் கைய பிடிச்சிட்டு குதிச்சி குதிச்சி வருவ...
கூட்டமான கூட்டம், எக்கச்சக்கமான கடைங்க... நீ என்ன பண்ணின, ஒரு கூலிங் க்ளாசு கடையில ப்ரேக் போட்டு நின்ன. சும்மாதான் நிக்கிறியோன்னு கொஞ்சம் அசந்தனா, அந்த நேரம் பாத்து ஒரு கண்ணாடிய பாத்து கைய நீட்டி, தாத்தா அது வேணும் தாத்தா... வாங்கித்தாங்க தாத்தா...ன்னு கேட்ட.
சின்னப்புள்ள, ஆசையா கேக்குற... சரின்னுட்டு கடைக்காரன பாத்து, என்ன வெலப்பான்னு கேட்டேன். அவன் என்னடான்னா இருபத்தஞ்சு ரூபாங்கறான் கடங்காரன் (இன்றைய மதிப்பில் இரண்டாயிரம்)!
நான் ஒண்ணுமே சொல்லாம ஹா ஹா ஹா ன்னு சிரிச்சிட்டு, 'அங்கே இன்னொரு கடைல டெல்லி அப்பளம் விக்கிறாங்க! வாழை இலை சைசுக்கு! போலாம் வா'ன்னு கண்ணை சிமிட்டக்கூட கேப் உடாம, ஒங்கைய பிடிச்சி, 'மிளகாய்த்தூள் வாசனய வச்சே கடைய கண்டு பிடிச்சிடலாம், ஒன்னால முடியுமா?'ன்னேன். நீயும் துள்ளிக்குதிச்சி எனக்கு முன்னாடி ஓட ஆரம்பிச்சே!' ன்னார்.
அந்தக்கண்ணாடி, தங்க ப்ரேமில் ப்ரவுன் கலரில், இன்னும் என் மனக்கண்ணில் மறையாமல் நிற்கிறது! ஆனால் அது கிடைக்கவில்லையே என்ற ஏக்கமோ வருத்தமோ துளியும் அன்றே இல்லை!
அப்பளமாவது கிடைக்குமேன்னு ஜொள்ளு ஒழுக போனா, மொத்த கும்மோணமும் அங்க நிக்கிது! ஒரு வழியா என்னை இன்னொரு கூட்டமில்லாத கடைக்கு அழைத்துச்சென்று அதில் பனையோலை காற்றாடி ரெண்டு ரூபாய்க்கு வாங்கித்தந்தார். அதை கையில் உயர்த்திப்பிடித்தபடி காறறைக்கிழித்து நான் ஓடுகையில் அது சுற்றிய வேகம்!!!!!! விமானத்தையே ஓட்டுவது போன்ற அந்த மகிழ்ச்சி இன்றுவரை அடி மனதில் ரசக்கப்பி போல!
இந்த நிகழ்வில் ஏராளமான உளவியல் முறைகளும் ஒரு வாழ்வியல் நெறியும் பொதிந்து இருப்பதை உணர்ந்தவர்களுக்கு இன்று சிறார்கள் மொபைல் / ஐபேட் வழியே அமேசானிலிருந்து பெற்றோர் அனுமதியின்றி ஆர்டர் செய்வதும், அவர்களின் பெற்றோர்கள் ஸ்விக்கியில் உணவு வாங்கி சாப்பிடுவதும் இன்னும் சில நாட்களுக்கு வருத்தம் தரும். அதன் பின்... பழகிவிடும்!
(சீனிவாசன் தாத்தா உளவியில் படித்ததில்லை ஆனால் வாழ்வை படித்திருக்கிறார் என்பதை பலவருடங்களுக்கு பின்னர்தான் நான் உணரத்தொடங்கினேன்)
இப்படியாப்பட்ட மகாமகம் நடந்த மகத்தான ஆண்டில்தான் நாங்கள் கும்மோணத்திலிருந்து மன்னார்குடி என்கிற மன்னைக்கு இடம் பெயர்ந்தோம்.
முதலில் மாகாமகம் (கலோக்கியலாக மாமாங்கம்) கதைக்கு வருவோம்.
முன்ன ஒரு காலத்தில, கடவுள்கள் எல்லாம் அவதார விந்தைகள்லாம் செய்யிறதுக்கு முன்னாடி, ஒரு பிரளயம் வரப்போவுதுன்னு பிரம்மனுக்கு ஞானப்பார்வையில் தெரிஞ்சதாம். 'ஐயோ, இது பேரழிவை நிகழ்த்துமே!'ன்னு பதறியடிச்சி அழிக்கும் கடவுளான சிவன்கிட்ட ஓடிப்போயி முறையிட்டாராம். சிவன்தான் God of Creative Destruction ஆச்சே, அவருக்கு தெரியாம ஊழி (பிரளயம்) வருமா என்ன?! அதனால அவரு பிரம்மன்கிட்ட ஒரு குடத்தில தாவர விதைகள போட்டு குடத்துக்குள்ள அமுதத்தையும் ஊத்தி (Nectar of Immortality from பாற்கடல்) 'இதை ஒரு ஒசரமான இடத்தில வச்சிட்டு வேடிக்கை பார்'னு அனுப்பிச்சாராம்.
பிரம்மாவும் அந்த குடத்த கொண்டுபோயி ஒலகத்திலயே ஒசரமான மேரு மல உச்சில வச்சாராம்.
பிற்பாடு ஊழியும் வந்துச்சாம், நாடு காடெல்லாம் அழிச்சிச்சாம். ஊழித்தண்ணி மெல்ல மெல்ல ஒசந்து மேரு மல உச்சிய தொட்டுச்சாம்.குடத்தையும் இழுத்துச்சாம். அமுத குடம் தொபக்குன்னு தண்ணீல விழுந்து உருண்டு உருண்டு எங்கெங்கயோ போயி... தண்ணி ஒசரம் கொறஞ்சி ஆறா கீழே பாய்ஞ்சி அதுல கொடம் மெதந்து மெதந்து உருண்டு மெதந்து ஒரு இடத்தில ஊழி தண்ணி சுத்தமா வடிஞ்சப்போ தரைல மோதி ஒடஞ்சதாம். குடத்துக்குள்ள அமுதத்தில ஊறிப்போயிருந்த வெதைங்கள்லாம் அந்த இடத்தில சிதறி...பயிரெல்லாம் வளந்து உலகம் முழுசா பரவிச்சாம். குடம் ஒடைஞ்ச எடம்தான் நம்ம கும்மோணத்து மாமாங்க குளமாம். குடத்த அங்க உருட்டிகிட்டே வந்த ஆத்துக்கு குடமுருட்டி ஆறுன்னு பேராம்!
கங்கா, சரஸ்வதி, யமுனா, சரயு, மகாநதி, தபதி, நர்மதை, காவேரி, கோதாவரி என ஒன்பது நதிகளின் நீர் இந்த குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊறி நிரம்புவதாக ஐதீகம். பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மிக கோலாகலமாக இந்த 'விழாக்களுக்கெல்லாம் தல' விழா (Maha Maham literally means The Biggest Festival of All!) நான் மூணாம்ப்பு படிக்கையில கும்மோணத்தில நிகழ்ந்தது.
ஊரக வளர்ச்சி அதிகாரியான அப்பா ராப்பகலாய் அந்த ஒன்பது நதிகளும் மாமாங்க குளத்தில் வந்த தங்க தூர்வாரும் பணி மேற்பார்வையில் மும்முரமாகி... நாங்கள் எல்லாம் சில மாதங்களுக்கு அவரை எப்போதாவதுதான் வீட்டில் பார்க்க முடியும் என்கிற அளவுக்கு பரபரப்பாய் பணி செய்துகொண்டிருந்தார். மெல்ல மெல்ல ஊரில் கூட்ட நெரிசல் அதிகமாகி, எங்கள் வீட்டிலும் உறவினர்கள் கூடத்தொடங்கி, இரவு நேரங்களில் தரை முழுதும் சமுக்காளங்கள் விரித்து பரவிக்கிடக்கும் உறவுகள் பகல் முழுதும் கும்மோண சாலைகளில் கால்கள் தேயத்தேய நடக்கும். வீட்டில் வகை வகையான உணவுகளை எல்லோரும் சேர்ந்து சமைத்து உண்போம்.
இப்படியான ஒரு நெரிசலில்தான் உளவியல் நிபுணரான சீனிவாசன் தாத்தா என்னை மாமாங்கத்துக்கு ஷாப்பிங் அழைத்துச்சென்றார் :-)
அங்கங்கே மைக்குகளில் 'கரு நீல அரைக்க சட்டை, கத்தரிப்பூ பாவாடை அணிந்த மூன்று வயது சிறுமியை தொலைத்தவர்கள் உடனே இந்த மேடையை அணுகவும்' என திகிலான அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கும். அது காதில் கேட்கையிலெல்லாம் நான் சீனிவாசன் தாத்தாவின் விரலை இன்னும் இறுக்கமாக பிடித்துக்கொள்வேன்! (அவர் பின்னாட்களில் மஞ்சள் காமாலை முற்றியது தெரியாமலே ஒரு நாள் மருத்துவமனையில் படுத்து, காணச்சென்ற இரவு அப்பாவுடன் சரளமாக உரையாடிக்கொண்டிருந்துவிட்டு மறு நாள் கண் விழிக்காமலே இருந்துவிட்டார். செய்தி கேட்டு காண விரைந்த அப்பா வீடு திரும்பியபோது அவரது முகம் அவ்வளவு கறுத்திருந்தது அதிர்வினால்... அது போல கருமையை அதற்கு முன்னர் நான் கண்டதில்லை.) அவர் வாங்கித்தந்த பனையோலை காத்தாடி வழியே அவரை நான் இன்றும் காண்கிறேன்...
இந்த மகா விழாவில் எனது உறவினரது குழந்தை ஒன்றும் காணமல் போய் ஏகப்பட்ட அமளி துமளிக்கிடையே கண்டுபிடிக்கப்பட்டு வீடு திரும்பிய கதை இன்றளவும் எங்கள் குடும்பங்களில் ஒரு பேசு பொருள்!
தி. ஜானகிராமனின் மோகமுள் வாசித்திருக்கிறீர்களா? அந்த பெருங்கதை இப்படி தொடங்குகிறது...
கதையின் நாயகன் பாபு, அப்போதுதான் மண்சாலையி்ல் தன்னை கடந்துபோன பேருந்து கிளப்பிய புழுதி அடங்க சில நிமிடங்கள் ஒதுங்கி நிற்க, அங்கே ஒதுங்கிய மேலக்காவேரி சாஸ்திரிகள்
'அன்ய தேச க்ருதம் பாபம் வாரணாஸ்யம் விநச்யதி
வாரணாஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி
கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே விநச்யதி' என்கிறார்.
அதன் பொருள் என சாஸ்திரிகள் சொல்வதாக தி.ஜா எழுதுகிறார்:
"லோகத்திலே எந்தக் கண்டத்திலே, எந்த தேசத்தலே, எந்த ஜில்லாவிலே பாவம் பண்ணினாலும் காசிக்குப்போனா தொலைஞ்சிபோயிடும். அந்தக்காசியிலே பாவம் பண்ணினால், இந்த நம்ம கும்பகோணத்துலெ வந்து மாமாங்கக்குளத்திலெ ஒரு முழுக்குப் போட்டா தொலைஞ்சி போயிடும்".
'இந்தக் கும்பியிலியா?' என்கிறார் ஒருவர்.
" இன்னொரு தடவ அப்படிச் சொல்லாதீர். முன்சிபாலிடியில மணு மணுவா மருந்தைக்கொண்டு கொட்றாளாக்கும்."
'அப்பதான் அசல் சாக்கடை நாத்தம் வருது.'
"நாத்தமாவது வாசனையாவது? முதல்லே நாத்தமாத்தான் இருக்கும். பழகிப்போயிட்டா சரியாப்போயிடறது"
'இந்தக் கும்பிக்கு மாத்து இந்தக்கும்பிதான்னு சொல்லுங்க!'
இப்படிப்பட்ட, அனைத்து தேச மகாபாவங்களையும் போக்க மாமாங்க குளத்தில் பதினொரு ஆண்டுகள் நிரம்பிய கும்பியை அகற்றி சீரமைத்து தூர் வாரி மண்ணடித்து என குறுகிய நாட்களில் ஏராளமான பணிகளை செய்யவேண்டிய பொறுப்பில் இருந்தால் அரசியல் இடைஞ்சல்களும் அழுத்தங்களும் (காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் தரம் குறைத்து கட்டுமாணம் செய்து காசு பார்ப்பது...) வரும்தானே. அப்பாவுக்கு வந்தது!
கும்பகோணப்பாவத்த கும்பகோணக்குளத்திலயே கழிச்சிடலாம் என ஐதீகம் சொல்லும் அதே மாமாங்க குளத்திலே கட்டுமாணப்பணிகளில் ஊழல் செய்த அரசியல்வாதிகளும் உடந்தையான அதிகாரிகளும் மாமாங்க முழுக்கு நாளில் முதல் வரிசையில் உள்ளே சென்று முழுகி எழுந்து தெம்பாக அடுத்த ஊழலுக்கு தயாரானார்கள். ஆனால் அப்பா மட்டும் வீட்டில் இருந்த சாமான்களையெல்லாம் பேக் செய்து லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தார்.
..
நேர்மையான கொம்பனாக அரசு பணியில் தொடர்வது கடினம் என தெரிந்தே அப்பா அந்த பணியை தேர்வு செய்து, கையூட்டு வாங்கும் அரசு அதிகாரிகளுடனும் அவர்களை இயக்கும் வியாதிகளுடனும் போராடிக்கொண்டே, நாட்டுக்கு நல்லது செய்ய காந்தி தாத்தா கட்டளையிட்டிருக்கிறார் என நடந்துகொண்டிருந்தார் (பணி ஓய்வு பெறும் வரையிலும்!). அதனால்தானோ என்னவோ மாமாங்கம் முடிந்த கையோடு அவருக்கு பணி மாறுதல் ஆணையும் வந்தது.
அடுத்த நிறுத்தம்: மன்னை என்கிற மன்னார்குடி.
Yes, Mannargudi Calling :-)
தொடரும்.
பேரன்புடன்,
பாபுஜி
PC 1: The Hindu online edition - an archive news article on Mahamaham festival
PC2: From the Internet.
Both images maybe subject to copyright


கருத்துகள்
கருத்துரையிடுக