முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எங்கே செல்லும் இந்தப்பாதை?

எங்கே செல்லும் இந்த பாதை, யாரோ யாரோ அறிவார்?


அவனை துரத்தும் கனவு எது என்பது அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.


அவனுக்கு அப்போது இருபத்தைந்து வயது.


அவனது நாட்டில் எதற்குமே மதிப்பில்லை (hyperinflation எனப்படும் அதீத பண மதிப்பு இழப்பு), இளைஞர்களுக்கு வேலையுமில்லை.


அவன் ஒரு நல்ல படகோட்டி. அவனது நாட்டின் ஆறுகளிலும் கடலிலும் படகு பழகியவன். ஒரு நாள் அவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கிறது; 'அப்டியே படக ஓட்டிகிட்டு மூவாயிரம் கி.மீ போனம்னா சைப்ரஸ் நாட்டுக்கு போயிடலாம். அங்க தாமிர சுரங்கங்கள்ல வேலை செய்ய  நிறைய ஆட்கள் தேவையாம்'.


ஆண்டு: 1932

நாடு: ஜெர்மனி


'யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க' என அந்த வயதுக்கே உரிய அசட்டு தைரியத்தோடு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்புகிறான்.


நீர்வழிப்பயணம் அவனுக்கு புதிதல்ல. ஆனால் நெடிய பயணம் அவன் பழகியதில்லை. ஆனாலும் துடுப்பு வலித்து பல பல நாட்கள், மாதங்கள் பயணிக்கிறான். முதலில் டான்யூப் நதி வழியே படகை செலுத்தி ருமானியா நாட்டை அடைந்து, அங்கிருந்து அதே நதி வழியே பயணித்து பல்கேரியா நாட்டை கடந்து டான்யூப் அவனை ஏஜியன் கடலில் சேர்க்க, அங்கிருந்து மத்திய தரைக்கடல் வழியே பயணித்து... இதோ, கண்ணெட்டும் தூரத்தில் சைப்ரஸ் நாட்டின் கடற்கரை...


பொங்கிச்சீறும் அலைகள், திடீரென மோத வரும் சரக்கு கப்பல்கள், புயல், இடி, மின்னல், மழை என பல முகங்கள் காட்டி அவனோடு அத்தனை நாட்கள் பழகிய கடலிடம் விடைபெறுவது அவனுக்கு மிக கடினமாக இருக்கிறது...


வரும் வழியில் தன் பயணத்தை துரிதமாக்க பாய்மரங்கள், படகு அலைகளால் புரட்டிப்போடப்பட்டு மூழ்காமல் இருக்க பாதுகாப்பு கருவிகள் எல்லாம் 'Learning by Doing' முறையில் கற்று செயல்படுத்தி பெற்ற அனுபவம் அவனை உந்த, அன்று இன்னொரு முடிவெடுக்கிறான்; 'இன்னும் பயணித்துத்தான் பார்ப்போமே!' 


- வயசு அப்படி!!


தொடர்ந்து துடுப்பு வலிக்க, மெல்ல சிரியா நாட்டை நெருங்குகிறான். அங்கு இயூஃப்ரடீஸ் நதி அவனை அழைக்க, அதில் நுழைந்து பயணம் தொடர்கிறான். பயண வழியில் அங்கங்கே உள்ளூர் மக்கள், அவனை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் காயமின்றி பயணிக்கிறான். கடும் வெப்பம், பசி, தாகம் என பல இடையூறுகள். ஒரு முறை புயலில் இருந்து தப்பிக்க ஏதோ ஒரு தீவில் ஒதுங்கி, ஒரு வாரம் தனியே (துணைக்கு ஒரு இறந்த மனிதனின் உடல்!) தங்கி மறுபடி பயணம் தொடர்ந்து பெர்ஷிய வளைகுடா வந்தடைகிறான். இராக்கிய நாடு கண்ணில் தென்படுகிறது. ஆனால் கடல் அவனை தொடர்ந்து வசியம் செய்துகொண்டே இருக்கிறது. நித்தம் வேலை, நேரத்திற்கு உணவு, தலைக்கு மேலே கூரை, பனிக்கு இதமாய் கம்பளி, கூடவே ஒரு பெண் துணை என்கிற சராசரிக்கனவுகள், அவன் வயதை ஒத்தவர்களின் கனவுகள், எல்லாவற்றையும் உப்பு நீர் கரைத்துப்போக, அவன் முன்னே எல்லையற்று விரியும் பச்சைக்கடலும் தலைக்கு மேலே விரியும் நீலவானமும் அவை இரண்டிற்குமிடையில் அவனது இருத்தலும் அவனை வேறெதையும் சிந்திக்கவிடாமல் தமக்குள்ளே இழுத்துக்கொள்ள அந்தி வானில் கடல் மீது ஒரு சிறு சுள்ளியாய் இரவு அவனை விழுங்கிக்கொள்கிறது.


பல இரவுகள், பல பகல்கள், இரவு பகலா என குழப்பமான பல நாட்கள், வாரங்கள், மாதங்கள். வருடங்கள் உருண்டோட, அவன் பயணித்துக்கொண்டே இருக்கிறான்.


இராக் தாண்டி இரான், தாண்டி அரபிக்கடல் என பயணம், பயணம், பயணம்.


கிழக்கிந்திய ஆட்சி நடக்கும் இன்றைய பாக்கிஸ்தானை தொடுகிறான். அங்கு பல துறைமுகங்களில் சில சில நாட்கள் தங்கி, தன் பிரமிக்க வைக்கும் பயணக்கதைகளை அங்குள்ளவர்களிடம் சொல்லி மகிழ்வித்து, பரிசாக தனக்கு வேண்டிய உணவு, குடிநீர், ஒரு புதிய படகு என தன் பயணம் தொடர்வதற்கான பொருட்களை ஈட்டுகிறான். இடையில் அவனது நாட்டில் அவனை விட பதினோரு வயதே மூத்த இன்னொரு இளைஞன், ஜெர்மனியின் அரசியலை புரட்டிப்போட்டு, வெகு வேகமாக நாசிசம் எனப்படும் 'அழிப்புவாத கொள்கைகளை' பரப்புகிறான்.


ஜெர்மனியிலிருந்து எவன் வந்தாலும் அவன் ஒற்றனாகத்தான் இருப்பான் என்கிற சந்தேகம் உலகெங்கும் பரவி, பாக்கிஸ்தானிய துறைமுகங்களையும் வந்தடைகிறது. அவன் சென்று சேர்ந்த அடுத்த துறைமுகத்தில் கைதாகிறான். ஆனால் இரு நாட்களில் விடுதலை பெற்று, பயணம் மீண்டும் தொடர்கிறது...


பாக்கிஸ்தானிலிருந்து இலங்கை. அங்கு பருவமழைக்கால கடல் சீற்றம் குறைய மூன்று மாதங்கள் காத்திருந்து, பின்னர் சென்னை கடற்கரையில் இறங்குகிறான். அங்கு தனது பழைய படகை தந்துவிட்டு புதிதாய் ஒரு படகு பெற்று, கல்கத்தா கடல் வழியே பர்மா, சிங்கப்பூர், இந்தோனேசியா கடல்களை சுற்றி, சில இடங்களில் நோய்வாய்ப்பட்டு, உள்ளூர் மக்களால் அடித்து துவைக்கப்பட்டு உயிர் தப்பி... ஆஸ்திரேலியா நாட்டின் கடலை அடைகிறான்.


'வாங்க ஹீரோ சார். உயிரோட இவ்வளவு தூரம் வந்ததற்கு வாழ்த்துகள் ஆனால் உங்கள் தலைவர் ஹிட்லர் இரண்டாம் உலக்போரை தொடக்கிவைத்து, விடாமல் தாக்கிக்கொண்டிருக்கிறார். நீங்கள் அவரது ஒரு ஒற்றராக இருக்கலாம் என்கிற சந்தேகத்தால் உங்களை கைது செய்கிறோம். நேரே ஜெயிலுக்கு போவோம்' என உள்ளே தள்ளுகின்றனர். அது 1939 ஆம் ஆண்டு.


இப்படியாக ஏழு ஆண்டுகள் + நான்கு மாதங்கள் நீண்ட அவனது கடல் பயணம் ஆஸ்திரேலியாவில் கரை தட்டுகிறது.


அடுத்த ஏழு ஆண்டுகள் சிறைவாசம். அவன் 1946 இல் விடுதலையாகிறான். அதற்கு முந்தைய வருடம்தான் ஹிட்லர், போரின் தோல்வியாலும், விடாது தேடும் உலக படைகளாலும் விரக்தியடைந்து தன்னைத்தானே மாய்த்துக்கொள்கிறார். ஆனால் ஹிட்லரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அவனுக்கு தெரியாது. ஒரு வேளை அவன் அந்த கடல் பயணம் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் கட்டாயத்தினால் ஹிட்லரது படைகளில் சேர்ந்து பல கொடுஞ்செயல்கள் செய்து ... எப்போதோ மரித்திருப்பான். வாழ்க்கையின் சித்து விளையாட்டு அவனை ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பாக ஒதுக்கியிருந்தது.


விடுதலை பெற்றதும் அவன் ஒரு கோமேதக சுரங்கத்தில் பணி புரியத்தொடங்குகிறான். கோமேதக கற்களை பூமியிலிருந்து தோண்டி எடுப்பதிலிருந்து மெருகேற்றி விற்பது வரையிலான அனைத்தையும் கற்று தேர்ந்து, வருடங்கள் உருண்டோட குடியுரிமை பெற்று, பிற்பாடு பிறிதொரு நன்னாளில் கோமேதக கல் வணிகம் தொடங்கி செழிக்கிறான்.


சிட்னியில் வசிக்கும் ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுடன் காதல் மலர்கிறது. அவளுக்கு சிட்னியில் பணி. அவனது தொழில் + இருப்பிடமோ தொலைதூர வேறிடத்தில்.  அவனது காதலி நான்சி ஸ்டீலெ, ஒவ்வொரு வார இறுதியிலும் தவறாது அவனது ஊருக்கு சென்று இரு நாட்கள் அவனுடன் தங்கி, திரும்பி, பின் மறு வாரக்கடைசி, அடுத்த வாரக்கடைசி என அடுத்த மு.ப்.ப.து. ஆண்டுகளுக்கு, Yes, you read it right! for the NEXT 30 YEARS! காதல் வளர்க்கிறார்கள். பிறகு அவன் முதுமை நோயில் விழும் முன்பு அவனுடைய வீட்டில் நான்சி நிரந்தரமாய் குடியேறுகிறாள். தனது காதலின் கவனிப்பில் நிம்மதியாய் ஆஸ்க்கர் மரிக்கிறான்.


நட்பே! கதையின் நாயகன் ஆஸ்க்கர் ஸ்பெக்கை இவ்விதமாக நான் உனக்கு அறிமுகம் செய்து மகிழ்கிறேன்! அவன் படகில் தனியே தன்னந்தனியே பயணம் செய்த தூரம் அதிகமில்லை, வெறும் ஐம்பதாயிரம் கிலோமீட்டர்கள் மட்டுமே!!!!


கனவு வாழ்க்கை என வாசிப்போரை வியக்கவைக்கும் இவனது வாழ்வு, கனவல்ல. சேருமிடம் இதுதான் என இலக்குகள் வைத்து ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களின் நடுவில், பயணிப்பதையே கனவாய் கொண்டிருந்த ஒரு மனிதனின் கதைதான் இது. No destination would have given such a joy for this man who had made the Journey as his Destination.


இவனது புகைப்படங்கள், பயணக்குறிப்புகள், மேலும் தகவல்கள் அறிய விரும்பினால் ஆஸ்திரேலியாவின் National Maritime Museum செல்!


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...