ட்ரம்ப்பின் அமெரிக்க சந்தையில் இந்த ஆண்டு 430 769 231 டன் சோளம்! அதாவது roughly நாற்பத்து நான்கு கோடி டன் சோளம்.
அமெரிக்க வேளாண் நிலங்களில் இந்த ஆண்டு ஏறக்குறைய 60 விழுக்காடு சோளமும் சோயாவும் (சோயா பீன்) மட்டுமே விளைவிக்கப்படுகின்றன.
அமெரிக்க மொத்த வேளாண் உற்பத்தியில் 87 விழுக்காடு சோளமும் சோயாவும் (சோயா பீன்) மட்டுமே.
இவை இரண்டும் பணப்பயிர்கள். இந்த பயிர்களுக்கு அமெரிக்கா ஒரு உலக சந்தையையே கட்டமைத்திருக்கிறது.
அமெரிக்க சோயா உற்பத்தியில் ஏறக்குறைய சரி பாதி, அதாவது 50 விழுக்காடுகள் ஏற்றுமதி சந்தைக்காக உற்பத்தி செய்யப்படுபவை.
கடந்த இரு ஆண்டுகளில் சைனா, அமெரிக்க சோயாவை வாங்க மறுத்ததால் (ட்ரம்ப்பு வணிக வரி தகராறு) அமெரிக்கா இந்த ஆண்டு சோயா விதைக்கும் பரப்பை சுருக்கி சோளம் விதைத்து பெருக்குகிறது. அதாவது சோயா விதைப்பை 10 விழுக்காடு சுருக்கி அந்த பரப்பில் சோளப்பயிர் வளர்க்கிறது.
இது வரை அமெரிக்க சோள ஏற்றுமதி, விளைச்சலி்ல் ஏறக்குறைய இருபது விழுக்காடாக இருந்துவருகிறது. இந்த ஆண்டு, சோள விதைப்பின் பரப்பு 10 விழுக்காடு கூடியதால் விளைச்சலும் 10 விழுக்காடு கூடவேண்டும். ஆனால் இயற்கையின் சிந்தனை வேறு மாதிரி ஆனது...
அபார விளைச்சல், ஐயகோ! நான் என் செய்வேன்?!!
சோளம் வளர மிக மிக சாதகமான சூழல் இந்த ஆண்டு அங்கு நிலவியதால் + உற்பத்தி திறன் மேம்பட்டதால் அமெரிக்க மொத்த சோள உற்பத்தி முந்தைய ஆண்டை விட 13 விழுக்காடு பெருகியிருக்கிறது. அதாவது, இந்த ஆண்டு அமெரிக்க சோள உற்பத்தி, அவர்களது 170 ஆண்டு வரலாறு காணாத Bumper Harvest!
அமெரிக்க விவசாயிகள் நியாயமாக மகிழ்ச்சியில் கொண்டாடிக்கொண்டிருக்கவேண்டும்தானே?
விளைச்சல் அபாரமென்பதால் சென்ற ஆண்டு அலகம் உண்ட தினசரி சோளத்தின் அளவை சடுதியில் 15 விழுக்காடு உயர்த்த முடியுமா? இதுவரை நீங்கள் தினம் காலையில் பத்து இட்லிகள் உண்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஒரு இரவில் யாரோ நெல்லை கூடுதலாக உற்பத்தி செய்ததால் நீங்கள் மறுநாள் காலையிலிருந்து தினம் பன்னிரண்டு இட்லிகள் உண்ண முடியுமா?
இதே சிக்கல்தான் இப்பொழுது அமெரிக்காவை போர்க்கால நடவடிக்கையில்(!) புதிதாக யாரையெல்லாம் இட்லி தின்னவைக்கலாம் என... மன்னிக்கவும், சோளம் தின்ன வைக்கலாம் என பல முயற்சிகளை மேற்கொள்ள வைத்திருக்கிறது.
இந்த முயற்சிகளில் ஒன்று, இந்தியா போன்ற நாடுகளுக்கு வணிக வரி ஒப்பந்தத்தின் கீழ், சோளமும் சோயாவும் ஏற்றுமதி செய்வது!
அமெரிக்க சோளமும் சோயாவும் மனிதர்க்காக வளர்க்கப்படும் உணவுப்பயிர்கள் அல்ல! அவை வணிகப்பயிர்கள், கால்நடைகளுக்கு உணவாகவும் (மாமிச சந்தை), மாற்று எரிபொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மூலப்பொருளாகவும் பயன்படும் பெருவணிகப்பயிர்கள்!!
ஆக, அமெரிக்காவின் ~ 60 விழுக்காடு வேளாண் உற்பத்தி, இந்த இரு பணப்பயிர்களுக்காக மட்டுமே!
இந்த ஆண்டு அங்கு வரலாறு காணாத விளைச்சலால் சோளத்தின் அமெரிக்க சந்தை மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாலும், உற்பத்தி செலவை விட விற்பனை வரவு 18 விழுக்காடு வரை குறைந்திருப்பதாலும், ஏற்கனவே நிரந்தர கடனில் மூழ்கி பயிர் வளர்க்கும் அமெரிக்க விவசாயிகள் பெரிதும் மனம் நொந்திருக்கிறார்கள், எந்த அளவு என்றால், 'இந்தப்பயிர்களுக்கு ஏதாவது நோய் நொடி வந்து விளைச்சல் தாறுமாறாக குறையாதா?' என ஏங்கி, வேண்டி, அதற்கான தடயங்களை தேடி பல சோள நிலங்களில் அனுமதியின்றி நுழைந்து பூச்சி தாக்குதல்கள் இருந்தால் மகிழ்ச்சி என்கிற மனநிலையில்.
இவர்களது சோகமும், நட்டத்தினால் விளையப்போகும் கோபமும் அமெரிக்க அரசியலில், தேர்தல்களில் எதிரொலிக்கப்போகிறது.
நமது இந்திய 'சந்தைப்பொருளாதார விவசாயிகளும்' அவர்களை போலத்தானே. தக்காளிக்கு மவுசு கூடினால் ஏகமாய் தக்காளி உற்பத்தி செய்து, அதனால் விலை குறைந்து வீழ்ச்சி அடைந்து, அதனால் உபரி விளைச்சலை / மொத்த விளைச்சலை சாலைகளில் கொட்டி போராட்டம் செய்துவிட்டு, மிளகாய் விலை ஏறுகிறதே என அடுத்த பட்டத்தில் மிளகாயை ஏகமாய் பயிர் செய்து, அதனால் மிளகாய் உற்பத்தி பெருகி விலை வீழ்ச்சி அடைந்து, சென்ற முறை தக்காளி கொட்டிய சாலைகளில் இந்த முறை மிளகாயை கொட்டி போராடி, பின்னர் ட்ராகன் ஃப்ரூட் வளர்க்க நகர்ந்தோம்.
'ஆனால் அவர்களுக்கு இருக்கும் வலுவான சமூக + பொருளாதார பாதுகாப்பு கட்டமைப்புகள் நமக்கு அவ்வளவு வலுவாக இல்லையே?' என கவலை கொள்கிறீர்களா? இனி கவலை வேண்டாம்!!
இந்திய விவசாய, நுகர்வோர் மக்களே, உங்களுக்கு ஒரு மாபெரும் நற்செய்தி! நம் கால்நடைகளின் உற்பத்தி பெருக்கத்திற்காகவும், நமது மாற்று எரிபொருள் உற்பத்தி திறனை பல மடங்கு உயர்த்தவும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பு பெரிய மனதுடன் இந்த ஆண்டு முதல் அவரது நாட்டில் உபரியாக அம்பாரமாக குவிந்திருக்கும் சோயாவையும், சோளத்தையும், வணிக வரி ஒப்பந்தம் என்கிற பெயரில் நமக்கு வாரி வழங்க இருக்கிறார். நாம் ஏக மனதாக இதை ஆதரிப்போம்!
அங்க என்ன சத்தம்?
ஓ! 'அமெரிக்க சோயாவும் சோளமும் மரபணு மாற்றப்பட் பயிராச்சே? நாம் எப்படி அனுமதிக்கலாம்?' என்கிறீர்களா, கவலை வேண்டாம், நமது மரபணுவே மரித்துப்போய், மன்னிக்கவும், மரத்துப்போய்... மறுபடி மன்னிச்சு!, மாறிப்போய் பல காலமாச்சி, அதனால் சோளத்தில், சோயாவில் மாறினால் நமக்கென்ன போச்சு? நம் கால்நடைகளின் பால் பொழிவு கூடும், நமக்கான மாமிசத்தின் அளவும் தரமும் உயரும், நமது வருமானம் பெருகும், நமது வாகன எரிபொருள் திறன் உயரும். இதனால் நமது எரிபொருள் செலவு குறையும். இவ்வளவு நன்மைகள் கிடைக்கையில், நமது உடல் சற்றே நலம் கெட்டால் என்ன? நமது மருத்துவ செலவுகள் + காப்பீடு செலவுகள் சற்றே கூடினால்தான் என்ன?... கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாகத்தான் வரும், லாபத்தில்தான் வரும்!
"நமது நிலம் பாழாகுமே மரபீணி பயிர்க்கழிவுகளால்..." என்கிறீர்களா? உங்களுக்கே இது அலட்டலாக தெரியவில்லையா? அப்படி என்ன நம் மண்ணின் மீதும் மண் நலத்தின் மீதும் திடீர் பாசம்?!!
'அதுவும் சரிதான்... ஆனா...இந்த வருசம் ஒரு குந்துமணி கூட அமெரிக்க சோயா வேணாம்ன சைனாக்காரன் என்ன முட்டாளா?!' என்கிறீர்களா?
அவன் கிடக்கிறான் ம**ண்டி!, அவன் நமது எதிரியல்லவா? எனவே அவன் அப்படித்தான் செய்வான். அவனுக்கும் ட்ரம்ப்புக்கும் என்ன வாய்க்கா வரப்பு தகராறோ? எனவே, கண்டுகொள்ளாதீர்கள்! நாமளும் உலக அரங்கில் வளர வேண்டுமல்லவா!
பேரன்புடன்,
பாபுஜி
PC: Wikimedia Creative Commons
Statistics: From AI searches.
Basic (trigger) news about the woes of corn farmers of America: Reuters website article dated 26.10.2025

கருத்துகள்
கருத்துரையிடுக