முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவர்

 


1980 இல் பாரதிராஜாவின் நிழல்களில் தொடங்கி 1987 இல் பாலச்சந்தரின் புன்னகை மன்னன் வரை தொடர்ந்த இளையராஜா-வைரமுத்து பீரியட், தமிழ் சினிமாவின் பொற்காலம்.


ஒருவர் திறமையின் மீது ஒருவர் கொண்ட மதிப்பும் மரியாதையும் இவர்களை நெருங்கிய நண்பர்களாக மாற்றி ஏராளமான ever green பாடல்களை நமக்கு கொடுத்தது. எந்த அளவு நட்பு என்றால் ராஜாவின் இசையில் வரும் படங்களின் பாடல்களில் சில வைரமுத்து எழுதுவதாக இருந்தால், படத்தின் எல்லா பாடல்களையும் வைரமுத்துவே எழுதவேண்டுமென ராஜா சொன்னதால் அவ்வாறே நிகழ்ந்தது.


எங்கோ சிறு உரசல் விரிசலாக முதல் காரணம், வைரமுத்துவின் பாடல்களில் ராஜா திருத்தங்கள் சொல்லத்தொடங்கியது. (இளையராஜாவும் பாடல்கள் எழுதுவார், திரைப்பாடல்களும்தான். அவை தந்த அனுபவமாகவும் இருந்திருக்கலாம். 1985 இல் ராஜா எழுதிய 'இதயம் ஒரு கோவில். அதில் உதயம் ஒரு கீதம்' - cult song.)


1986 இல் புன்னகை மன்னன் திரைப்படம்தான் இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றிய இறுதி படம். அது முடிந்தபோது இருவருக்கும் தீர்க்க முடியாத கருத்து முரண்பாடு; மெட்டுக்கு பாட்டா, பாட்டுக்கு மெட்டா?!


தகராறு செய்தி திரைத்துறையில் பரவுகிறது. அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வைரமுத்துவுக்கு திரைப்பாடல்கள் எழுத வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ராஜா கைய வச்சா படம் ஹிட்டு (ஹீரோ யாரென்றெல்லாம் கவலையே படவேண்டாம் என்பதற்கு சுதாகர், பாக்யராஜ் தொடங்கி பின்னாட்களில் பாண்டியன், ராமராஜன் என நீண்ட பட்டியல் சாட்சி!)  என உறுதியாக நம்பிய இயக்குனர்கள் 'எடுக்க வம்பு' என வைரமுத்துவிடம் பாடல்கள் கேட்பதை அறவே தவிர்க்கவும், ராஜாவுடன் கை கோர்த்து புகழின் உச்சியில் அதுவரை வலம் வந்த வைரமுத்து, இருண்ட நாட்களை, வருடங்களை எதிர்கொள்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல புதிய இசை அமைப்பாளர்களுக்கு பாடல்கள் எழுதியும் அவற்றில் ஒருவர் கூட நிலைக்கவில்லை, ஏ. ஆர். ரஹ்மான் வரும் வரை. (வைரமுத்துவே ஒரு பேட்டியில் சொன்னது, 'முப்பத்தேழு புதிய இசையப்பாளர்களுக்கு பாடல்கள் எழுதியும் என்னால் ஒருவரைக்கூட "அவர்" போல புகழடைய வைக்கவில்லை. அப்போது உணர்ந்தேன், ஒரு இசையமைப்பாளர் எவ்வளவு நல்ல பாடகர்களை வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால் ஒரு பாடலாசிரியர் எவ்வளவு முயன்றாலும் ஓரு நல்ல இசையமைப்பாளரை உருவாக்க இயலாது!).


ஏ. ஆர். ரஹ்மான் கூட பாலச்சந்தரின் கண்டுபிடிப்பும் உருவாக்கமே தவிர வைரமுத்துவின் முயற்சியினால. வந்தவரல்ல (பாலச்சந்தர் எடுத்த எடு்ப்பிலேயே தனது கவிதாலயா நிறுவனம் தயாரித்த மூன்று படங்களுக்கு ரஹ்மானை இசையமைக்கவைத்தது இயக்குனர் மணி ரத்னத்தின் முயற்சியால்தான்).


1992 - ரோஜா திரைப்படம் வெளியாகிறது. சின்ன சின்ன ஆசை கவிதைப்பாடலும் ரஹ்மானின் இசையும் நம் தேசத்தையே கிறுக்குப்பிடிக்க வைக்கிறது, வைரமுத்துவுக்கு அவர் இழந்த சிம்மாசனத்தை மீண்டும் தருகிறது.


அடுத்த ஆண்டு அநஇளையராஜாவுக்கு;  இசைக்கு, இயக்கத்திற்கு என மூன்று தேசிய விருதுகள், 1993 இல் கிடைக்கின்றன.


வைரமுத்துவுக்கு வாய்ப்புகள் மீண்டும் குவிகின்றன.


1993 இல் பாலச்சந்தர் "டூயட்" படம் தயாரித்து இயக்குகிறார். இசை ரஹ்மான், பாடல்கள் வைரமுத்து!


இழந்த புகழ் மீண்ட உற்சாகத்தில் வைரமுத்து ஒரு பாடல் எழுகிறார் டூயட் படத்திற்கு. ஆனால் அந்தப்பாடலை அவர் எழுதியது இளையராஜாவுக்கு; தான் வெற்றி பெற்றதை பறைசாற்றும் பாடல், பாட்டுக்குத்தான் மெட்டு என அறைகூவிய பாடல்:


"மெட்டுப்போடு மெட்டுப்போடு…

என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு…

மெட்டுப்போடு மெட்டுப்போடு…

அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு…"


!


என் தமிழுக்கு இல்லையடா தட்டுப்பாடு. என் பாடலுக்கு நீ மெட்டுப்போடவேண்டுமே ஒழிய உன் மெட்டுக்குள் என் பாட்டை நான் அடைக்க மாட்டேன். ஏனெனில் என் கற்பனை கடலினும் பெரிது!


இன்னொரு பத்தாண்டுகள் கடக்கின்றன. ஏ. ஆர் ரஸ்மான் அமெரிக்க படங்களில் மும்முரமாகி அவ்வப்போது இந்தியில், எப்போதாவது தமிழில் தலைகாட்டி இசை தருகிறார். 


வைரமுத்து இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழக முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதியின் நெருங்கிய நண்பராகி, அரசியல் செல்வாக்குடைய, அரச அவை கவிஞராகிறார். அவ்வப்போது திரை மேடைகளில் ரஹ்மானிடமும் இன்னும் சில இசையமைப்பாளர்களிடமும், 'என் பாடல் வரிகளை இசை அமுக்கி விடுவதை தவிர்க்கலாமே' என விண்ணப்பம் வைக்கிறார்! பின்னர் ME TOO குற்றச்சாட்டுகளின் பேசுபொருளாகிறார். ஆனாலும் பாதிப்படையாமல் கவிதை, நெடுங்கதை நூல்கள் எழுதுகிறார். தமிழக அரசு விழாக்களிலும், திரை விழாக்களிலும்  முக்கிய வி்ருந்தினராக கலந்துகொள்கிறார்.


ராஜா இந்த காலங்களில் என்ன செய்துகொண்டிருந்தார்?


தொடர்ந்து இசையமைத்தார், இசையமைத்துக்கொண்டிருக்கிறார், நமக்கு நாயகன் / நாயகியாக பார்க்க சகிக்காத பல முகங்களை வெற்றி நாயக, நாயகியாக்குகிறார்.  பணியில் தொய்வு விழுந்த காலங்களில்

How to Name it?, Nothing but Wind போன்ற ஆல்பங்கள் இசைக்கிறார். ஒரு சிம்பொனி எழுதுகிறார் (1993 இல்!), இன்று வரை துடிப்புடன் cult திரை இசை, ரமணர் பாடல்கள், திருவாசகம், சிம்பொனிகள் என இயங்கிக்கொண்டிருக்கிறார். பல சொக்கவைக்கும் பாடல்களை எழுதியிருக்கிறார் (ஒன்ன விட..., இசையில் தொடங்குதம்மா...)


அந்த ஏழு ஆண்டுகளில், 1980-1986, இவர்கள் இணைந்து படைத்த செவி விருந்து, இனியொரு முறை கிட்ட வாய்ப்பில்லை என இருவருமே உறுதியுடன் உள்ளனர் இன்று வரை. இவர்களின் பிணைப்பு சக்தியான பாரதிராஜாவும் எவ்வளவோ முயன்று தோற்றுவிட்டார். 


இவர்கள் இணையாவிட்டால் என்ன? ரசிகர்களாகிய நமக்கு, இருக்கவே இருக்கிறது இவர்களது பூங்காற்று திரும்புமா, வெட்டிவேரு வாசம், அந்திமழை பொழிகிறது, கொடியிலே மல்லியப்பூ, மடை திறந்து தாவும் நதியென, நாத விநோதங்கள், பூவில் வண்டு கூடும், ... எத்தனை எத்தனை அற்புத பாடல்கள் இருக்கின்றன கொண்டாட!


ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?


என்னதான் ஒருவொருக்கொருவர் தீராப்பிணக்கோடு இருந்தாலும் என்றாவது ஒரு மழை இரவில் தனிமையில் நினைவுகளின் நதியோட்டத்தில் இவர்கள் இருவருமே கூட இந்தப்பாடல்களுள் சிலவற்றை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கேட்டுக்கொண்டு ஈரம் கசிந்த விழிகளுடன் உறங்கப்போயிருக்கலாம், இசைப்பேழைகளின் உதவி கூட இல்லாமல்!


பேரன்புடன்,

பாபுஜி


PC: From the Internet. Maybe subject to Copyright

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...