பென்சிலா ஜெயிலா?!
எனக்கு பென்சில்கள் மிக விருப்பம். நீண்ட உருளை வடிவில், முப்பட்டை வடிவில், அறுகோண வடிவில், அழி ரப்பர் தலையோடு, தலையில்லாமல் என வித விதமான பென்சில்களும. அவற்றை sharpner இல் வைத்து சுழற்றி சுருள் சுருளாய் பட்டை உரித்து மெல்ல மரச்சுருளின் உள்ளிருந்து கூர்'மை' எட்டிப்பார்க்க, அதை Sharpner இன் இன்னொரு துறையில் சுழற்றி குத்தீட்டி முனை பதத்துக்கு தயார் செய்து மகிழ்வாய் தாளில் எழுதத்துவங்க, "மளுக்" கென முனை முறியும் பென்சில்களை மட்டும் பிடிப்பதில்லை.
அப்பா அலுவலக வேளையாய் வெளியூர்கள் சென்று வந்தால் கண்டிப்பாய் ஒன்றிரண்டு பெட்டிகளில் அடுக்கிய பென்சில்களும் (ஒரு பெட்டிக்கு 10 பென்சில் என நினைவு), செவ்வக வில்லை பால் வெண்மை அழி ரப்பர்களும் எங்களுக்காக வாங்கி வருவார். ரப்பரின் வாசனை தனி சுகம்!
இரண்டாம் வகுப்பில் படிக்கும் எனக்கு பென்சில், ரப்பர் போன்ற உன்னத சொத்துக்கள் வேறு எவையும் ஆகா!.
எங்கள் வகுப்பில் என்னைப்போலவே ஒருவனுக்கு பென்சில்கள்+ரப்பர்கள் மீது கொள்ளை பிரியம், அடுத்தவர்களின் பென்சில்கள் மேல் மட்டும்!
அந்தப்பொறுக்கி வீரமணியிடம் (பல பத்தாண்டுகள் கழித்தும் சிறு வயது கோபம் எங்கோ...hey not exactly, எழுதும்போது மானே தேனே எழுதுவது போல வந்திடுச்சி :-) மாட்டிக்கொண்டேன்.
"டேய், உன் பாக்ஸ்ல இருக்கிற எல்லா பென்சிலயும் அந்த ரெண்டு வாசனை ரப்பரையும் தந்திட்டு போ!"
(பாவிப்பய எத்தனை ரப்பர் இருக்குன்னு கூட நோட் பண்ணி வச்சிருக்கானே!)
கண்களை உருட்டி மினி நம்பியார் போல பேசுவான், பேசினான், மிரட்டினான்.
என்னிடம் இருந்த மொத்த தைரியத்தையும் திரட்டி, நான் பார்த்த மனோகரா சிவாஜியை channelise செய்து defiant pose இல் 'முடியாதுடா!' என்றேன்.
அணுகுண்டு ஒன்றை என் மீது வீசினான் அந்தப்பாவி; 'தர்லன்னா எங்கப்பாட்ட சொல்லி ஒங்க அப்பாவ ஜெயில்ல போட்டுடுவேன்! எங்கப்பா எவ்ளோ பெரிய ஆளுன்னு நீ பாத்திருக்கிறதானே! அவரு நா என்ன சொன்னாலும் செய்வாரு!!' - அவனுள்ளிருந்த நம்பியார் சிவந்த கண்களை இடுக்கி என்னை மிரட்டினார்.
எங்கப்பா ஆறடி, அவங்கப்பா ஆறரை அடியாச்சே! ஐயையோ, நான் என் செய்வேன்?!
பயத்தில் நா வறள, கண்கள் துவள, கால்கள் நடுங்க, ஒன்றுக்கு இரண்டுக்கை எல்லாம் தாண்டிய பீதி!
"அப்பாவ ஜெயில்ல போட்டாங்கன்னா நம்ம எல்லாம் யாரு காப்பாத்துவா?!"
நான் அந்த வயதில் பார்த்திருந்த சோக சினிமாக்கள் எல்லாம் கண் முன்பு வந்து போக, மௌனமாய் அவன் கேட்ட எல்லாவற்றையும் தந்துவிட்டு அவமானத்தை மனதில் சுமந்து வீடு சென்றேன்.
அடுத்த நாள் வீட்டில் அண்ணா அக்காவிடம். ஓசியில் வாங்கிய் பென்சில்+ரப்பருடன் பள்ளிக்கு சென்றால்...
சண்டாளன்! பள்ளி வாசலிலேயே காத்திருந்து, என்னை கேட்காமலே சுவாதீனமாய் என் பையை பிடுங்கி திறந்து நோட்டம் விட்டான்.
"ஆஹா! இந்த பென்சிலும் அழகா இருக்கே! நீ மட்டும் இத எனக்கு தரலேன்னா, பீட்டர், மொட்டை. இவங்க இப்பாவ தூக்கிட்டு வாங்கடா'...என மீண்டும் நம்பியாரானான்.
அழுகையாய் வந்தது. என்ன ஆனாலும் தரக கூடாது என்கிற நினைப்பும் கூடவே. உறுதியாய் 'முடியாது' என்றேன்.
இரண்டு நாட்கள் சமாளித்துப்பார்த்தேன், இரண்டு இரவுகளும் தூக்கத்தில் கனவில் அப்பா சிறை செல்வது போலவும், 'எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும்' என்கிற சிவாஜி பாடலும் ரிபீட் மோடில் ஓடி கதி கலக்கின.
இப்படியாக வளர்ந்த பயம் மூன்றாவது நாளில் என்னை முழுதாய் ஆட்கொள்ள, சிங்கத்தின் குகையில் வெள்ளாடு feelஓடு பென்சில்+ரப்பர் தாரை வார்த்து தந்தேன்.
வாலு போயி கத்தி வந்தது கதையாய் புதிய சிக்கல்; என் பென்சில் காணாமல் போய்க்கொண்டிருப்பதை அப்பா கண்டுபுடிச்சிட்டாரே!
அவரது குறுக்கு விசாரணை அலாதியாக இருக்கும்; மூன்றாவது கேள்வியை அவர் முடிக்கும் முன்பே உண்மைகளை கொட்டிவிடுவோம்!
கொட்டிவிட்டு ஓவென அழத்தொடங்கினேன் (முன்ன ஒரு காலத்தில முருங்க மர காட்டுக்குள்ள பாடலில் வரும் 'ஓலமிட்டு அழுதன' மாதிரி!).
அடி பட்டைய கிளப்பப்போகிறார் என பயந்து கண்ணீர் பற்றாக்குறைக்கு எச்சில் எல்லாம் தொட்டு வைத்து... ஆனால் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அப்பா அதிர்வாய் சிரிக்கத்தொடங்கினார்!
'நான் ஒரு தம்மாத்தூண்டு பொடியன் குலை நடுங்கி தினம் தினம் உம்மை சிறைவாசத்திலிருந்து காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கையில் இப்படி சிரிக்கிறீரே நியாயமா?!' என என்னுள் எழுந்த திருவிளையாடல் நக்கீரனை அடக்க நான் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கையில் அவர் மென்மையாய் அதே நேரத்தில் உறுதியாய் சொன்னது இதுதான், "போ, போய் உன் நண்பனிடம் சொல். என் அப்பாவும் மிகப்பெரியவர்தான். இனியொரு முறை என்னை நீ மிரட்டினாலும் அவர் உடனே உன் அப்பாவை அதே ஜெயிலில் அடச்சிடுவார்னு சொல்!'
- என கண்களை நோக்கி, இறுதியாக அதே நேரத்தில் இயல்பான குரலோடு சொன்னது பசுமரத்தாணி ரகம், இன்னும் பதிந்திருக்கிறது மனதில்.
அப்படி ஒரு குதூகலம் + relief அதற்கு முன் என் சிறிய வாழ்வில் அனுபவித்ததில்லை!
யானை பலம் பெற்ற குஷியில் இரவு உறக்கமே இல்லாமல் (excitement!) காலையில் முதல் மாணவனாய் ஓட்டமாய் நுழைந்தேன் வகுப்புக்குள், " வாடா மவனே வா!"
வீரமணியின் தலை, தூரத்தில் தெரிந்தது.
தலைதெறிக்க ஓடி அவனை வழி மறித்தேன். "இனிமே உனக்கு நான் பென்சில் ரப்பர் எல்லாம் குடுக்கமுடியாதுடா! எங்கப்பாவும் ரொம்ப பெரியவர். அவரே சொன்னாரு, 'இனி ஒரு முறை அந்தப்பையன் பென்சில் கேட்டாலும் அவங்க அப்பாக்கு ஜெயில் நிச்சயம்!'னு!
இப்போதுதான் நிகழ்ந்தது போல 4K clarity இல் இந்த image இன்னும் என்னுள் பதிந்திருக்கிறது! "காற்றுப்போன பலூன் போல வாடிய முகத்துடன், தோற்றுப்போனவனின் தோள்பட்டை போல drooping shoulders உடன் வீரமணி அதிர்ச்சி சுமந்து மெல்ல என்னை தாண்டிச்சென்று அவனது பெஞ்ச்சில் அமர்ந்தது!
Oh boy! Did I enjoy that!!.
குழந்தைகளின் உலகம், அவர்களது நம்பிக்கை, அந்த நம்பிக்கையை விதைக்கும் மனிதர்கள், அவை தரும் வாழ்வுப்பாதைகள், choice to respond with confidence, face adversaries calmly.... அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு இவற்றை கடத்தும் புள்ளியில் காலம் நம் அனைவரையும் பலமுறை நிறுத்தி வேடிக்கை பார்க்கும்.
நல்ல வழிகாட்டிகள் நல்மேய்ப்பர்களை விட மேலானவர்கள்!
பயணம் தொடரும்.
பேரன்புடன்,
பாபுஜி


கருத்துகள்
கருத்துரையிடுக