கூகிள் நிறுவனம் சென்ற வாரம் ஆரவாரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது; 'இந்தியாவில் டேட்டா சென்டர் அமைக்கிறோம். அடுத்த ஐந்தாண்டுகளில் இதற்காக 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கியிருக்கிறோம்'.
இந்த வாரம் ஆந்திராவின் முதல்வர், பெருமிதமாக 'பாரத் வென்றது! (அதாவது, I.N.D.I.A தோற்றதாம்! தமிழகம் இழந்த முதலீட்டை அவர்களது அரசியல் கூட்டணி சார்பைச்சாடி கேலி செய்கிறாராம்!!) என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர், 'ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனம்!' என பிரச்சாரம் செய்கிறார்.
ஆனார இந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கெல்லாம் இந்த டேட்டா சென்டரின் மூலம் திரு சுந்தர் பிச்சை பட்டை நாமம் அப்பியிருக்கிறார். குறிப்பாக மக்களாகிய நமது விசாலமான நெற்றியில் ஏராளமாய் தீட்டப்பட்டிருக்கும் நாமங்களுக்கு மேலே!
கூகிளுக்கு திடீரென ஏன் இந்தியா மீது கரிசனம்?
சுந்தர் பிச்சை இந்தியர், நம் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெற துடிப்பவர். எனவே... என்று கழுத்து நரம்பெல்லாம் புடைக்கவேண்டாம். சென்ற சில மாதங்களில் அமெரிக்காவில் நடந்த நிகழ்வு ஒன்றை விவரிக்கிறேன். பிறகு விளக்குகிறேன், கூகிள் டேட்டா சென்டருக்கும் இந்தியாவில் தயாராகும் அமெரிக்கரின் ஜட்டி பனியனுக்கும் என்ன தொடர்பு என்று!
முதலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், Make America Great Again என்றார். பின்னர் America First என்றார். இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்கி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் APPLE INC. முதலான அமெரிக்காவின் உலகப்பெரு நிறுவனங்களுக்கு கூடுதல் வரி என பயமுறுத்தினார். இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது தவறு என எகிறி இந்தியா மீது கூடுதல் வரி விதித்தார்.
இத்தனை அமளிகளுக்கு நடுவில் கூகிள் நிறுவனம் தனது புதிய டேட்டா சென்டர்களை நிறுவ முதலில் அனுகியது அவர்களது சொந்த நாடான அமெரிக்காவில் உள்ள இன்டியானாபொலிஸ் எனும் மாகாணத்தில், ஃப்ராங்க்ளின் என்கிற ஊரை.
சென்டர் துவக்க அரசு அனுமதி தந்தது. அவ்வாறு தரும் முன்னரே உள்ளூர் மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.
'டேட்டா சென்டர் இயந்திரங்களின் சூட்டை தணிக்க ஏராளமான மில்லியன் லிட்டர் தண்ணீர் தினசரி தேவைப்படுமே. எங்களது தண்ணீர் தேவையை பாதிக்காமல், தண்ணீர் பயன்பாட்டு கட்டணத்தை உயர்த்தாமல், புதிய வரிகளை எங்கள் மீது விதிக்காமல் இது எப்படி சாத்தியமாகும்?'
"சென்டரை இயக்குவதற்கு தேவைப்படும் மின்சாரம் எங்கிருந்து வரும்? நிலக்கரி சார் மின் உற்பத்தி நிறுவனங்கள்தானே இந்த கூடுதல் தேவையை உடனடியாக நிரப்ப முடியும்? ஏற்கனவே நம் ஆலைப்புகையினால் வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவின் அளவு கடந்த நான்கே ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இந்த புதிய சென்டர் இந்த வளிமண்டல மாசுபாட்டை இன்னும் துரிதப்படுத்துமே! இது நாளடைவில் எங்களது உடல் நலத்தை பாதித்து மருத்துவ செலவுகளையும், நலக்காப்பீட்டு ப்ரீமியம் தொகையையும் ஏகமாக உயர்த்திவிடுமே!"
'எனவே, எங்கள் ஊரில் நாங்கள் இந்த டேட்டா சென்டர் வருவதை அனுமதிக்கப்போவதில்லை என, அடுத்த கூட்டத்தில் தீர்மானம் இயற்றுவோம்'.
செப்டம்பர் இறுதியில் ஊர்ச்சபை கூடி இந்த தீர்மானம் இயற்றப்போவது கூகிளுக்கு முன்னரே தெரிந்தவுடன், அடுத்த ஏமாளி எங்கே என்று தேடக்கூட நேரமெடுக்காமல் நேரே இந்தியா வந்தாச்சி.
இதோ, ஆந்திராவில் கூகிளின் A.I. Globl Hub வரப்போகிறது. இந்த புதிய டேட்டா சென்டர்தான் இதற்கு பிள்ளையார் சுழி!
சற்று சிந்திப்போம்.
இன்று உலக கலகங்கள் அனைத்திலும் தானே அரசமரம் + சொம்பு சகிதம் ஆஜராகி ஆயுதங்கள் விற்று பின்னர் அமைதி ஒப்பந்தங்களை வாரத்திற்கு ஒன்று என அறிவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க பேரரசால் தரமுடியாத தண்ணீர் + மின்சாரத்தை, நம்ம நாடு தரமுடியுமா????
முடியும் என 1990 களில் அமெரிக்கர்களுக்கு ஜட்டி, பனியன் உற்பத்தி செய்து தர நாம் ஒப்புக்கொண்டு அதற்காக அடுத்த முப்பதே ஆண்டுகளில் எனது பெருநகரில் வளமாய் ஓடிக்கொண்டிருந்த நொய்யல் நதியை ஆலைக்கழிவு சுமக்கும் சாக்கடையாக மாற்றினோம். திருப்பூரின் நிலத்தடி நீரை சுத்தமாக உறிஞ்சித்துப்பினோம்...
ஏராளமான ஏழை இந்தியர்களது உழைப்பில் நம் நாட்டில் உருவாகி அமெரிக்காவுக்கு செல்லும் ஜட்டி பனியனுக்கும் இன்று இதே அமெரிக்க அரசு கூடுதல் வரி விதித்துள்ளது. ஆனால் நாம் அன்றும், இன்றும், என்றும் சிந்திக்கக்கூட மாட்டோம், 'அதி நவீன தொழில்நுட்பங்களை தினமும் உலகுக்கு அறிமுகப்படுத்தும் அமெரிக்கா, அத்தனை தொழில்நுட்பங்களையும் ட்ரில்ரியன் டாலர் வணிக நிறுவனங்களாக மாற்றி உலக வணிகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அமெரிக்கா, எதனால் தம் மக்களுக்கான ஜட்டி பனியனை கூட தானே தயாரிக்க முன்வரவில்லை?'
அதற்கு என்ன விடையோ அதே விடைதான் இன்று கூகிள் நிறுவனம் இந்தியாவை மையப்படுத்தி வணிக சாம்ராஜ்யத்தை விரிவாக்குவதும்;
'எங்களது இயற்கை வளங்கள் எங்களுக்கு தேவை. உங்களது இயற்கை வளங்களும் எங்களுக்கே தேவை! எனவே, ஏமாளிகளே, மறுபடியும் ஏமாற ஆயத்தமாகுங்கள்!' என்பதே அந்த விடை.
ஆந்திராவில் இந்த டேட்டா சென்டரை குளிர்விக்க, நீர் வசதி உள்ளதா? டேட்டா சென்டரை இயக்க தேவையான மின்சாரத்தை அவர்கள் உற்பத்தி செய்கிறார்களா?
இல்லையென்றால் இவற்றை உற்பத்தி செய்ய ஆகும் நிதிச்சுமையை யார் சுமக்கப்போகிறோம்? இதனால் மேலும் மாசு கூடப்போகும் நம் ஆகாயமும் சுவாசக்காற்றும் நமக்கு ஏற்படுத்தப்போகும் நலச்சீர்கேடே நம்மால் சமாளிக்க முடியுமா?
இதனால் காணாமல் போகப்போகும் இயற்கை வளங்களை யார் நமக்கு திருப்பி தருவார்கள்?
நமது குழந்தைகளின் எதிர்கால வசிப்பிடத்தை சில பில்லியன் அமெரிக்க டாலருக்கு தாரை வார்க்க நாம் எப்படி இவ்வளவு எளிதாக சம்மதித்துக்கொண்டே இருக்கிறோம்?
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் எப்படி இந்த மாதிரி துவக்கங்களுக்கு அனுமதி வழங்குகிறது? அனுமதி வழங்கியதா? அவர்களது அனுமதி தேவையில்லை என்றால் ஏன்???
அமெரிக்க மக்களுக்கு உள்ள தெளிவு நமக்கு ஏன் இல்லை???
பேரன்புடன்,
பாபுஜி
பின் குறிப்பு:
ஆந்திர - தமிழக முதல்வர்களின் டேட்டா சென்டர் தகராறுக்கும் இந்த பதிவில் நான் இணைத்திருக்கும் சாமி பட கோயில் யானைக்கு பட்டை vs நாமம் தகராறுக்கு விவேக் தீர்வு தரும் படத்துக்கும் தொடர்பு ஏதாவது இருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
நாம் அனைவருமே பொறுப்பு :-(

கருத்துகள்
கருத்துரையிடுக