ஒரு தனியார் வங்கி. இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்தானத்துக்கு போட்டி போடும் வங்கி.
காசாளரிடம் ஒரு சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தேன். சலிப்புடன் விடை தந்துகொண்டே வேறு ஏதோ வேலையில் கவனமாயிருந்தார்.
திடீரென அவரது மேலாளர், வங்கிக்கிளையின் மேனேஜர், நேராக அவரது கேபினுக்கு வந்தார். வந்தவர், பள்ளிக்கூட குழந்தை ஒன்றிடம் பேசும் தோரணையில் குரலை உயர்த்தி, ஒற்றை ஆட்காட்டி விரலை நீட்டி, 'எத்தன முறை சொல்லிருக்கேன்? எல்லாத்தையும் செக் பண்ணதுக்கு அப்றமாதான் செக்குக்கு காசு தரணும்னு? இன்னொரு வாட்டி நடந்தா அப்றம் இமெயில் போட்றுவன், சரியா?' என சீறிவிட்டு, வாடிக்கையாளர்கள் எதிரே சக ஊழியரை அவமானப்படுத்தும் அவலம் பற்றிய துளி கவலையும் இல்லாமல் தனது கேபினுக்கு திரும்பினார்.
அந்த ஊழியருக்கு முப்பது வயது இருக்கலாம். வேதனையால் சினந்த முகத்தோடு மௌனமாக அமர்ந்திருந்தார். அவரது வீட்டில் கான்வென்ட் பள்ளியில் படிக்கும் குழந்தை இருக்கலாம். அன்று மாலை அவர் வீடு திரும்பியதும் அவரது குழந்தை, 'அப்பா, இன்னக்கி மிஸ் என்ன எல்லார் முன்னாடியும் திட்டிட்டாங்கப்பா' எனலாம், 'என்னையும்தான் என் மிஸ் இன்னக்கி அதே மாதிரி திட்டிட்டாங்க' என அவரும் துக்கம் பகிரலாம்.
அந்த வங்கியில் அவரது இருக்கையின் மறு முனையில் இரண்டு காலியான மீட்டிங் அறைகள் இருந்தன...
சில மணி நேரம் கழித்து வேறொரு பெரிய அரசு வங்கியில் நுழைந்தேன்.
எனது அலுவலை செய்து தர வேண்டிய ஊழியர், குறிப்பாக என்னை அன்று வரச்சொல்லி நேரம் தந்திருந்தவர், விடுமுறை எடுத்து சென்றுவிட்டாராம். பலியாடு மாதிரி தோன்றிய இன்னொரு ஊழியரை கை காட்டினர்கள்.
அந்த ஊழியரோ என் கண் முன்னே மல்டி டாஸ்க்கிங் செய்ய போராடிக்கொண்டிருந்தார். 'ஒரு பத்து நிமிஷம் உக்காருங்க, அழைக்கிறேன்' என்றார். அவரது மேலாளர் எனக்கு அறிமுகமானவர். 'சார், வாங்க, சீனியர் மேனேஜரை அறிமுகம் செய்கிறேன்' என அழைத்துச்சென்றார்.
சீ. மேனேஜர், மேற்கு மாநிலம் ஒன்றிலிருந்து வந்திருக்கிறார். அறிமுகமானதும் இலகுவாக உரையாடத்தொடங்கினார். சில நிமிடங்களில் தன் வாழ்க்கை வரலாறை பகிர்ந்தவர், எனது பின்புலம் அறிந்ததும் (ஐ.டி துறையில் முன்னாள் ஊழியன், வங்கி மற்றும் பங்குச்சந்தைத்துறைகளின் மென்பொருள்களை வடிவமைத்தவன், கடந்த பல ஆண்டுகளாக இயற்கை வேளாண்மை செய்து கற்பவன்) உற்சாகம் மிகுந்து சில நிமிடங்கள் உணவுப்பற்றாக்குறை, வேளாண்மையின் முக்கியத்துவம், வங்கிகளில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் என சிலவற்றை அளவளாவிவிட்டு பின் தன் துறையின் நடைமுறை சங்கடங்களை விவரித்து (Basel III வரையறை எல்லாம் நம்ம ஊரில் சரிப்பட்டு வராது சார். அதெல்லாம் செயல்படுத்தினா பிசினெஸே இங்கே பண்ணமுடியாது சார். டாப் மேனேஜ்மென்ட்ட நேரே உடனே கான்ட்டாக்ட் பண்ணி சால்வ் பண்ணா ஏகமா பிசினச பெருக்கலாம். இங்க வாய்ப்பே இல்ல சார். என்னோட பர்சனல் நம்பர் இந்தாங்க சார். பப்ளிக்குக்கு வேற ஒரு நம்பர நம்ம பேங்க்கு எல்லாருக்கும் தந்ததால ஓயாம கூப்ட்டு ரயில்வேல 139 நம்பர் மாதிரி பொழுதன்னைக்கும் தமிழ்லயே பேசறாங்க. ஒண்ணும் புரியமாட்டேங்கிது. அதனால் அந்த நம்பர்ல கால் வந்தா எடுக்கிறதே இல்ல, etc...) சடக்கென கியர் மாறினார்.
'லாஸ்ட் டென் இயர்ஸ்ல பிரதமர் ஏகப்பட்ட நல்லது பண்ணிருக்கார். நம்ம நாட்டோட பெரிய பிரச்னயே முஸ்லீமுங்கதான். நம்ம கடவுள கும்பிடாதவன் யாரும் நம்ம நாட்லயே இருக்கக்கூடாது சார். நமக்கு இன்றைய தேவை ஹிட்லரைசேஷன்தான்... அப்புறம் பெண்கள் எல்லாம் அடுப்படிலேர்ந்து வெளில வந்தது பெரிய தப்பு சார். எனக்கு அதில் உடன்பாடே இல்ல...' என தொடர்ந்தார்.
நம் நாட்டின் மெத்தப்படித்த பலரும் இன்று மூளைச்சலவையாகி பேசிக்கொண்டிருப்பதை ஒரு பெரிய வங்கியின் பொறுப்பான ஆசனத்திலிருந்தபடியே முப்பது ஆண்டுகளுக்கு மேலாய் அனுபவம் வாய்ந்த அவரும் பேசிக்கொண்டிருந்தார், சில நிமிடங்கள் முன்னர்தான் அறிமுகமான என்னிடம்.
அதற்கு மேலும் கேட்க பொறுக்காது மென்மையாக எனது மறுப்புகளை தெரிவித்துவிட்டு 'எனது வேலை தாமதாகும் போல தெரிகிறதே...' என்றேன். உடனே அந்த பலியாடு ஊழியரை அழைத்து ஏதோ சொல்ல, அந்த ஊழியர், 'நீங்க கிளம்புங்க சார். நான் இன்னைக்கு ஈவ்னிங் செஞ்சிர்றேன்' என்றார்.
சீ. மேனேஜரது அறைக்கு வெளியே அவரது வங்கியே பெரும்பான்மை பெண் சக்தியில்தான் இயக்கிக்கொண்டிருந்தது... 'இவர்கள் அனைவரையும் காக்க எந்த இறையிடம் வேண்டுவது?' என சிந்தித்துக்கொண்டே வெளியேறினேன்.
சேவைகளை வழங்குவதில் இரண்டு வங்கிகளும் இரு வேறு துருவங்கள். ஆனால் அவற்றை இணைப்பது, 'அறமற்ற மேலாண்மை' மட்டுமே.
இந்தியாவின் எதிர்கால வாய்ப்புகளை இவை போன்ற வங்கிகளும் மேலாண்மைகளும்தான் முடிவு செய்கின்றன என நினைக்கையில் கவலைதான் மிஞ்சுகிறது.
பேரன்புடன்,
பாபுஜி
PC: From a Business Standard web article

கருத்துகள்
கருத்துரையிடுக