முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீவாளி ஸ்டாப்பு - கும்மோணம் டு ராம்நாட் ரைட் ரைட்



ரயில் வெடியும் பாம்பு மாத்திரையும்!


ரயில் வெடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தீப்பெட்டியில் வெடி மருந்து திணித்து நுனியில் திரி சொருகப்பட்டிருக்கும். திரி இல்லாத மறுபக்கத்தில் குழல் போன்றதொரு அமைப்பு இருக்கும். அந்தக்குழலில் நூல் கோர்த்து இரு முனைகளையும் எதிலாவது கம்பத்திலோ ஜன்னல் கம்பியிலோ எதிரெதிராக இழுத்துக்கட்டி திரியில் பற்றவைத்தால் மருந்து தீரும் வரை நூல் கயிற்றில் புல்லட் ஒருபுறத்திலிருந்து ரயில் போல பறந்து மறுபுறம் போய் முட்டி திரும்பி என சாகசம் காட்டும்!


அனுபவித்திருக்கிறீர்களா?!


(இந்த ரயில் வெடி இப்போது எந்த வெடிக்கடைகளிலும் விற்கப்படுவதில்லை, தனி வீடுகளிலிருந்து பல்லடுக்கு குடியிருப்புகளுக்கு புலம் பெயர்ந்த நமக்கு அந்த நூல்கயிறைக்கட்டுவதற்கு இடமின்றிப்போனதால்...)


கும்மோணத்தில் தீபாவளி வரப்போகிற பரவசத்தில் துணிக்கடையில் பெற்றோரின் விரல் பிடித்து வண்ணமும் வாசனையுமாய் விரியும் சட்டை டவுசர் துணிகளின் அழகில் சொக்கி எதையோ கை காட்ட அது வெட்டப்பட்டு வீடு வரும். 


தையல்காரர்களுக்கு மதிப்பிருந்த காலம் அது. அளவெடுக்கும்போதே புத்தாடை தரித்த கற்பனையில் ஒரு இஞ்ச் உயரம் கூடும். (ஒரே ஒரு முறை தையல்காரர் இல்லம் தீப்பிடித்து அநேகர் புத்தாடையின்றி பண்டிகை கொண்டாடினர், நானும்தான். ஆயத்த ஆடைகள் வராத காலமது. மீண்டும் துணியெடுத்து, டெய்லர் பிடித்து...தைத்து...போங்கப்பா என்று விட்டுவிட்டோம். அது பற்றி இன்னொரு எபிசோடில் எழுதுகிறேன்).


தைத்து தீபாவளிக்குள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இன்று டாப் ஸ்டார்ஸ் படங்களின் புக்கிங் ஓப்பனிங்குக்கு காத்திருப்பதை விட பல மடங்கு இனிமையானது (படம் தரும் ஏமாற்றம் ஆடை தராது!).


இடைப்பட்ட காலத்தில் கோலி, கிட்டி, பம்பரம் விளையாடுதல், வீட்டில் அச்சேறும் முறுக்குகளை பதம் பார்த்தல், பிடித்து வைத்த இனிப்பு உருண்டைகளை குரங்குகளிடமிருந்து காப்பாற்றுதல்! (நாங்களும் குரங்குகள்தான் அந்த வயதில்!) என்று நாட்கள் நகரும். பெரும்பான்மையாக இயற்கையோடு இணைந்த வீடுகளில் நடுவில் 'திறந்த முற்றம்' இருக்கும், மழை, வெயில், பறவைகள், தும்பிகள், குரங்குகள் என பாகுபாடின்றி அனைத்தையும் வரவேற்கும் முற்றம் வழியே இறங்கிய குரங்கொன்று என் அம்மா ஆடுகல்லில் மாவாட்டுகையில் ஒரு முறை கூட அமர்ந்து மாவு தள்ளியதெல்லாம் எங்களுக்கு பழகிய நினைவுகள் :-)


வீடுகளில் கூட்டம் அதிகமாகும், இனிப்பு கார வகைகளும்தான். ஆனால் பட்டாசுகள் இருக்காது அல்லது குறைவாகவே...


வீதிக்கு ஒன்றிரண்டு பெரிய மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் வீடுகளின் முன் பாய்விரிப்பது போல 100 வாலா, மேலதிகமாய் 1000 வாலாக்கள் விரிக்கப்பட்டு, தெரு கூடி நின்று வேடிக்கை பார்க்க, நின்று வெடிக்கும் (வெடியில் மருந்து அதிகம், விலை குறைவு, இன்றுபோலில்லை!).


பொதுவாக அனைவரும் மகிழ்ச்சியோடு சுற்றிக்கொண்டிருப்போம். தெருவில் எந்த நட்பு வீட்டில் நுழைந்தாலும் வயிறு கெடுக்காத பலகாரங்கள், அவர்கள் வீட்டிலேயே செய்த பலகாரங்கள், கிடைக்கும். அந்த ஒரு வாரத்தில் பெரும்பான்மையான வீடுகளில் சமையல் இருக்காது.


தீபாவளி, வெடிப்புகையின்றி, குப்பையின்றி, சத்தம் அதிகமில்லாமல்... இருந்தது. ஊரிலும் தீபாவளி ரிலீஸ் ஆரவாரங்கள் இருந்ததில்லை. மகிழ்வான சந்திப்புகளும் இனிப்புப்பறிமாற்றங்களுமே வழக்கம்.


இன்று ஏராளமாய் செலவு செய்து, வெடி வெடித்து, புத்தாடைகள்(பன்மை!) அணிந்து புதுப்படங்கள் பார்த்து கொண்டாடி விட்டு புகையினால் வலிக்கும் தொண்டைக்கு ஸ்ட்ரெப்ஸில்லும், உணவினால் வலிக்கும் வயிற்றுக்கு ஜெலுசில்லும் உட்கொண்டு. கடையில் வாங்கிய இனிப்பு, காரத்தை ஊர்பறக்கும் அவசரத்தில் நட்புகளிடம் முன்னரே தந்து, நட்புகள் குறைந்த 'சொந்த' ஊர்களில் தீபாவளிக்கு நாம்...


ரயில் வெடியை உங்கள் குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துங்களேன்!


சரி, பாம்பு மாத்திரைக்கு வருவோம்.


Paracitamal 500 mg அளவில் கருப்பாய் நான்கைந்து வில்லைகள் ஒரு காகித சுருளில் பஞ்சு சுற்றி வரும்.


ஒரு வில்லையை எடுத்து சமதளமான தரை தேடி அதில் வைத்து தீக்குச்சி கொளுத்தி அல்லது எரியும் மத்தாப்பை அதன் மீது சுடர் படும்படி பிடித்தால் ஒன்றிரண்டு நிமிடங்களில் ஏராளமான புகையோடு பாம்பு போல சுருள் சுருளாய் வந்துகொண்டேயிருக்கும் சில விநாடிகள். அந்த புகை, அந்த கருமை, அந்த நெடி... ஒரு முறை அந்த immersive experience ஐ அனுபவி்த்தவர் எவருக்கும் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்!


வெங்காய வெடி என ஒன்று இருந்தது. தூக்கி எறிந்தால் மோதிய வேகத்தில் வெடிக்கும். ஆனால் யாரோ சிலர் அவற்றை காவலர்கள் மீது எறிந்து டெஸ்ட்டு செய்ததாகவும் அதனால் அந்த வெடியை தடை செய்துவிட்டார்கள் எனவும் நம்பத்தகுந்த அரை டவுசர் வட்டாரங்களில் இருந்து செய்தி வந்த்ததால் நாங்கள் அது கிடைக்குமா என்று கூட மெனக்கெடவில்லை :-) 


இதுபோக இருக்கவே இருக்கு எரிகல், ராக்கெட்டு, அணுகுண்டு, லக்‌ஷ்மி வெடி, குருவி வெடி எல்லாம். ராக்கெட்டுகளை ஏவுவோருக்கு அது எங்கு land ஆகுமென்று தெரியாது, சதாம் உசைனின் ஸ்கட் மிஸ்ஸைல் போல! அதனால் தெருவில் யாராவது ராக்கெட்டு திரி பற்றவைப்பதை பார்த்தால் உடனே வீட்டினுள் ஓடி, முற்றம் தவிர மற்ற இடங்களில் ஒளிவோம் (திறந்த முற்றம் வழியே ராக்கெட்டுகள் இறங்கியதை கண்ட அனுபவம் அப்படி!). 


ஆனால் அரை டவுசர்களான எங்களுக்கெல்லாம் பாத்தியப்பட்டதென்னவோ பொட்டு கேப், Roll Cap + தகர டுப்பாக்கி மட்டுமே. அதையும் நாங்க லயன் காமிக்சு குதிரை வீரன் ரேஞ்சுக்கு இடுப்பு டவுசர்ல சொருவிகிட்டு அப்பப்ப டுமீல் டுமீல்னு ஒரு ரோல் full ஆ நம்ம தென்னகத்து கௌ பாய் ஜெய்சங்கர் ஸ்டைலில் சுட்டு, அதில் வரும் புகையை ஸ்டைலாக ஊதி பின்பு சொருகிக்கொள்வோம், படாத இடத்தில சுட்டாலும்! வயசு அப்புடி :-) 


தொடரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...