ஐயங்காரத்தெருவில் வீட்டுக்கு எதிர்புறம் மழை நீர் கால்வாய். சிமெண்ட்டில் கட்டியது. அதை ஒட்டிய மதில் சுவர்கள் எல்லாம் பெயிண்ட் இல்லாமல் காரைப்பூச்சோடு பழுப்பாய் நின்றிருக்கும். அவ்வப்போது மதில் சுவரில் stencil வைத்து அதன் மீது கருப்பு நீலம் அல்லது கரும்பச்சை பெயிண்டில் முக்கிய ப்ரஷ்ஷால் இழுத்து விளம்பரங்கள் எழுதுவார்கள். இந்த process எங்களுக்கு எப்போதுமே ஆச்சரியம்தான்.
ஒரு சில காரைவீட்டு திண்ணைகளில் மடியாய் வெள்ளைப்புடவையில் அல்லது வெள்ளை பஞ்சகச்சத்தில் முதியவர்கள் சிலர் கையில் மணிமாலையின் மணிகளை உருட்டி வேண்டுதல்கள் செய்துகொண்டு அல்லது பஞ்சு நூல் திரிக்கும் குண்டு ஒன்று (தக்ளி) வைத்துக்கொண்டு (ஒரு வெண்கல குண்டு, அதன் தலையில் விளக்குத்திரி நுழையும் அளவில் ஒரு ஓட்டை. அதில் பஞ்சை திணித்து திரித்து மேலும் பஞ்சு சேர்த்து திரித்து... மெல்ல மெல்ல ஒரு நூல் உருவாகும்) கர்ம யோகியாய் காலையில் இருந்து பொழுது சாயும் வரை இறையோடு பேசிக்கொண்டிருப்பார்கள்.
அவர்கள் கவனம் கலைப்பது போல நேரெதிர் திசையில் நாங்கள் அரை டவுசர்கள் பாவாடை சட்டைகள் எல்லாம் கல்லா-மண்ணா, லாக்கு பம்பரம் முதல் ஐஸ் பாய் வரை களேபரமாய் விளையாடுவோம் (அது I Spy யாமே! ஒரு வடிவேலு மீம் வழியாக நான் இதை தெரிந்துகொள்வதற்கு 25 ஆண்டுகள் ஆயிற்று!).
லாக்கு எங்களின் ப்ரியமான விளையாட்டு. வீட்டு சுவருக்கு வெளியே ப வடிவில் கோடு வரைந்து அதன் எதிரில் மூன்றடி தூரத்தில் standing line கோடு இட்டு நிமிர்ந்தால் களம் தயார்.
இரண்டிலிருந்து நான்கு டவுசர்கள் சேருவோம். சில சிறு பளிங்கிகளை கை விரல்களுக்குள் அடக்கிக்கொண்டு standing line க்கு வெளியில் இருந்து உள்ளே விழுமாறு தூக்கிப்போடுவோம். லாக்கின் உள்ளே அத்தனை பளிங்கிகளும் விழவேண்டும். பிறகு வரிசையின. அடுத்த போட்டியாளர் சுட்டிக்காட்டும் பளிங்கியை மட்டும் மற்ற பளிங்கிகள் எதிலும் படாமல் குறி பார்த்து போந்தா பளிங்கியினால் (அளவில் சற்று பெரியது, carrom board இன் striker வில்லை போல) அடிக்க வேண்டும்.
அடித்துவிட்டால்?
வானம் வசப்படும், இரட்டைக்கிளி தீப்பெட்டி அட்டை, பாயும் புலி தீப்பெட்டி அட்டை, Wills சிகரெட்டு அட்டை, Gold Flakes சிகரெட்டு அட்டை என பந்தயம் வைத்தது எதுவானாலும் கிட்டும் :-)
Wills அட்டை வெண்மை background இன் நடுவில் சிவப்பு பட்டை, குறுக்கில் ஓடும். Gold Flakes அட்டை தங்க நிற background இல் brown வட்டம் அட்டையின் மையத்தில். Panama என்கிற ப்ரீமியம் அட்டை, வெண்மை background இல் அலாதியான அடர்பச்சையில் ஏதோ எழுதியிருக்கும். இந்த அட்டைகள் எல்லாம் எங்கள் கரங்களுக்கு வருமர முன் ஏதோ ஒரு மேஜிக்கினால் தம் ஒரிஜினல் காகித வாசத்தை மீட்டுக்கொண்டிருக்கும். சிகரெட் நாற்றம் துளியும் இரா!
பள்ளி முடிந்து வீடு திரும்பி புத்தக பையை கடாசிவிட்டு, வீட்டின் முன் கட்டு ஓட்டுக்கூரையில் ரகசியமாய் சொருகி வைத்திருந்த அட்டைகளை எடுத்து கரங்களில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அழகு பார்த்து, மூணு வில்சு, நாலு கோல்டு ஃப்ளேக்கு, எட்டு பனாமா என நாங்கள் அரை டவுசர்கள், எங்களது அட்டை எண்ணிக்கையை பகிர்ந்துகொள்வதை தெரு பெரியவர்கள் யாராவது கேட்டிருந்தால் தப்புத்தப்பாய. கற்பனை செய்து எங்கள் முதுகுத்தோலை உரித்திருப்பார்கள். பளிங்கி சாமி புண்ணியத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை :-)
உலக நாடுகளின் கரன்சிகளுக்கு exchange rates இருப்பது போல இந்த அட்டைகளுக்கும் உண்டு; ஐந்து Wills அட்டை தந்தால் ஒரு பனாமா அட்டை வாங்கலாம் என்பதாக :-)
இப்படியான ஒரு மாபெரும் விளையாட்டு களத்தில்தான் எனக்கு ராம்குமார் அறிமுகமானான்.
வீட்டு எதிர் வரிசையில் ஒரு செட்டியார் வீட்டு பையன். வீடு என்பதை விட மாளிகை என்றே சொல்லலாம். வசதியான குடும்பம். ஆனால் பழகுவதில் எளிமை. எங்களுக்கு அவர்கள் வீ்ட்டின் எந்த மூலைக்குள் நுழையவும் அனுமதி இருந்தது.
அவன் வீட்டின் எதிரில் ஒரு ப்ராமண வீடு. வீட்டு குழந்தைகள் அவர்கள் வீட்டு திண்ணையிலேயே எங்களோடு விளையாடுவார்கள். அவர்களது பெற்றோர்களும் கதை கேட்பார்கள். ஆனால் அந்த குழந்தைகளின் விதவைப்பாட்டி ஒருவர் மட்டும் ஒவ்வொரு முறையும் நாங்கள் விளையாடி முடித்தவுடனே திண்ணை முழுவதையும் தண்ணீர் ஊற்றி அலம்பி தீட்டு கழிப்பார். அவரது பிள்ளைகள் தடுத்தாலும் செய்வார். அந்த வயதில் எங்களுக்கு அது ஒரு வேடிக்கையான நிகழ்வாகவே தோன்றும். ஏனெனில் இந்த வேறுபாடுகள் எவையும் தொட முடியாத குழந்தைகள் உலகத்தில் நாங்கள் கனவுகள் வளர்த்தோம். வளர்ந்தோம்.
ராம்குமாரும் நானும் வெகு விரைவில் அட்டைகளை எல்லாம் இலவசமாய் பரிமாறிக்கொள்ளும் அளவு டிகிரி தோஸ்த்தாகி...அதன் பின் எங்கள் நட்புக்கு வந்த சோதனையாக
லாக்கு விளையாட்டில் நடந்த ஒரு தரமான சம்பவத்தை... பகிர்கிறேன் :-)
தொடரும்.
படம்: தக்ளி எனும் நூற்புக்கருவி. PC: Internet

கருத்துகள்
கருத்துரையிடுக