ராசாத்தீ என்னுசுரு என்னுதில்ல...
ஒரு கார் நிறைய தினுசு தினுசாய் ஆட்களுடன் வந்து இறங்கிய பெண்ணின் பெற்றோர் (ஊர்ல மாட்டிகிட்ட ராம்கியோட கூட்டாளி மேப்பு போட்டு அனுப்பிருக்காப்ல!) வீட்டின் வெளியே நின்றுகொண்டே பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள், இரவெல்லாம் கண் விழித்து நெடுந்தூரம் பயணம் செய்து வந்து சேர்ந்த களைப்பு + நிகழ்வின் மீதான ஆத்திரம் என கலவையான உணர்வுகளுடன்.
சாம, பேத, தண்டம் என்கிற மூன்று வழிகளில் பேச்சுவார்த்தை:
'அம்மா, எங்களோட வந்திடும்மா. கல்யாண வயசு வந்ததும் நாங்களே கட்டி வைக்கிறோம்...'. என சாம வழியில் தொடங்கி, 'இப்ப மட்டும் அவசரமா கல்யாணம் ஊர்ல அரேஞ்சு பண்ணியிருந்தீங்களே? அப்ப நாங்களே பண்ணீட்டா மட்டும் ஏன் வெயிட் பண்ணனும்' என பெண் எகிறவும் வேறு பல சமாதானங்கள் பேசப்பட்டு பெண்ணின் பிடிவாதத்தை அசைக்க முடியாததால் அடுத்து பேத வழி: 'ஒனக்கு என்ன தகுதி இருக்குன்னு எங்க பொண்ண கட்ன?' என ராம்கியிடம் எகிறி, ராம்கியின் மௌனம் + பெண்ணின் பிடிவாதம் ஆத்திரத்தை அதிகமாக்க, அடுத்த வழி, தண்டம்: பேசிக்கொண்டே சூடான பெண்ணின் சிற்றப்பா பளாரென அவளை அறைந்துஅவளது கைகளைப்பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு காரில் ஏற்றி கதவை அடித்து மூடி... வண்டி கிளம்பியாச்சி. போயே போச்சி.
இதுதான் நடந்தது என ராம்கியின் அம்மா எங்களுக்கு மொபைல் வழியே Flash Back சொல்லி நிரப்ப, 'இப்ப என்ன செய்யப்போறீங்க?' என்றோம்.
'இவன ஒடனே ஒரு பத்து இருவது நாளைக்கு எங்கணா அனுப்பிடனும் சார். ஏதாவது பண்ணாலும் பண்ணிடுவானுங்க... இவனும் ஏதாவது பண்ணிகிட்டா...' என்றார் அவன் அம்மா.
'அப்போ நீங்க?' என்றோம்.
'நானும் பொண்ணும் இங்கயே இருக்கோம் சார். தோட்டத்த, ஆடுகள, நாய்கள பாத்துக்கணும் சார்' என்றார்.
இல்லம்மா, சரி வராது என்று சொல்லி கிளப்பினால், போக்கிடமில்லாத இவர்கள் என்ன செய்வார்கள்? என்கிற எண்ணம் மேலோங்க, 'சரிம்மா' எனச்சொல்லி பின்பு ராம்கிக்கு எங்களுக்கு தெரிந்த பூமர்த்தனமான அறிவுரைகளை எல்லாம் செல்லி, 'கவலப்படாத. காலம் வரும். நீ ஜெயிப்படா' என்றெல்லாம் தேற்றி, 'தொடர்பிலிரு' என அழுத்தமாக சொல்லி உரையாடலை முடித்தோம்.
(அடுத்த நாள் அவன் கிளம்பி, திருச்சி தாண்டி ஏதோ ஒரு சிற்றூருக்கு சென்று சேர்ந்தவன், அதன் பின்பு 40 நாட்கள் சுத்தமாக தொடர்பிலேயே இல்லாமல் காணாமல் போனான்.)
இரு நாட்கள் சென்றபின் மறுபடி வினு அழைத்திருந்தார்; 'சாரே, ராம்கியுட அம்மேயும் சேச்சியும் நேத்து வீட்ட பூட்டிட்டு போயி சாரே. நிங்கள விளிச்சோ?' என வினவினார்.
எங்களை அவர்கள் விளிச்சி முன்பே பறஞ்ஞிருந்நால் நாங்கள் எந்தானு முழிக்கப்போறோம் ஙே! னு?!
முழித்தோம். பின்னர் திகைத்தோம்; 'ஐயோ! அப்ப ஆடுகளுக்கும் நாய்க்குட்டிகளுக்கும் சாப்பாடு?! பாதுகாப்பு??? எண்டே குருவாயூரப்பா!!!!'
தொடரும். (அடுத்த பகுதியில் நிறைவுறும்).
அட கடவுளே. கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாக இருக்கிறது
பதிலளிநீக்கு