(ராம்கியின் கதை மேலும் தொடர்கிறது).
அடுத்த இரண்டு மாதங்கள் ராம்கி தோட்ட வேலைகளில் மும்முரமாய் இருந்தான். எங்களை சந்திக்கும்போதெல்லாம் நன்றியுணர்வு மின்னும் கண்களுடன் மெல்லிய குரலில் பேசுவான். அவனுக்காக ஆறு ஆடுகளும் வாங்கித்தந்திருந்தோம்.
டி.வி, மொபைல் தவணை கடன்களை அந்த இரு மாதங்களில் பாதி அடைத்துவிட்டான். அவ்வப்போது அருகில் உள்ள பேரூரின் மருத்துவமனையில் அம்மாவுக்கு வேண்டிய மருந்துகள் வாங்கி வருவான்.
ரிஸ்க் எடுத்து இவனை தொடரச்சொன்ன எங்கள் முடிவு சரிதான் என்கிற உணர்வுடன் அவனை 'திறந்த வெளி பல்கலைக்கழகத்தில்' சேர்ந்து படிக்கிறாயா என கேட்டிருந்தோம். சரி என்று சொல்லியிருந்தான்.
தென் மேற்கு பருவமழை பெய்துகொண்டிருந்த இன்னொரு மழை நாள் இரவில் வினு மறுபடி மொபைலில் அழைத்தார்...
'சாரே, ஆயாளு வீட்டில் ஒரு பெண்குட்டி வந்நு!' என்றார்.
அவனது சகோதரியாக இருக்கலாம் என்றோம். "இல்ல சாரே, இது வேற!' என்றார்.
இதென்ன சோதனை என உடனே அவனை மொபைலில் அழைத்தோம். எடுக்கவில்லை. பல முறை முயன்றபின் அவனது அம்மா எடுத்து பேசினார்...
ராம்கி உயிர்க்கொல்லி அருந்திய இரவில் அவசரமாய் ஊரை விட்டு ஓடிப்போன அவனது கூட்டாளி, அடுத்த நாள் காலையில் பூர்வீக கிராமம் சேர்ந்து, அந்த பெண்ணிடம் எப்படியோ தகவலை சேர்த்திருக்கிறான். அதி்ர்ந்துபோன அந்தப்பெண் ஏகமாய் ஆர்ப்பாட்டம் செய்து தனது திருமணத்தை நிறுத்திவிட்டாள். அதன் பிறகு வீட்டாரின் பலமான கண்காணிப்பினால் ராம்கியை தொடர்புகொள்ள முடியாமல் தவித்திருக்கிறாள். பின் ஒரு நாள் உறவுகள் அசந்திருந்த நேரத்தில் வெளியேறி, ராம்கியை மொபைலில் அழைத்திருக்கிறாள்; 'நான் வரேன்டா!'.
அந்த பதினேழு வயது சிறுமி, அவளது கிராமத்திலிருந்து உறவுகளுக்கு தெரியாமல் பஸ் பிடித்து பஸ் மாறி பல மணி நேர பயணத்திற்கு பின் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்க, அவளுக்காக காத்திருந்த ராம்கி, அவளை அழைத்துக்கொண்டு, அந்த இரவில் அருகில் இருந்த ஒரு கோவிலில் தாலிக்கயிறு ஒன்றை கட்டி, எங்கள் தோட்ட வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்!
'எனக்கு என்ன செய்றதுன்னே தெரில சார். ரொம்ப பயமா இருக்கு' என அழுதார் ராம்கியின் அம்மா.
வினு மறுபடி அழைத்து 'சாரே, போலீசு வந்நால் ப்ரச்ன ஆவும்' என்றார்.
நாங்கள் மறுபடியும் அவனை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தவரை அழைத்தோம். அவருக்கு ஏகப்பட்ட சங்கடம். 'நாங்க போய் பாத்துட்டு சொல்றோம் சார்' என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.
மறுநாள் ராம்கி அழைத்தான்.
'சார்...மன்னிச்சக்குங்க சார். கெளம்பி வந்திட்டா. வராதன்னு சொன்னேன், செத்திடுவேன்னா. என்ன பண்றதுன்னு தெரில சார்... அதான்... மன்னிச்சிக்குங்க சார்' என்றான்.
இடையில் ராம்கியின் உறவினர் அவனை சந்தித்து, 'டேய், அவ மைனர்டா! அவங்க வீட்ல போலீஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணா தூக்கி உள்ள வச்சிருவானுங்க!' என்றெல்லாம் பலவாறு சொல்லிப்பார்த்தார். சிறுசுகள் கேட்பதாய் இல்லை. அவர்களுக்கு மாற்று வழி எதுவும் புலப்படாததால், 'ஆனது ஆகட்டும், பாத்துக்கலாம்' என்கிற அசட்டு தைரியம் +. ரெண்டுங்கெட்டான் வயதின் முதிர்ச்சியில்லாத சிந்தனை...
இரண்டு நாட்கள் தகவலின்றி நகர்ந்தது. மூன்றாம் நாள் வினு அழைத்தார்; 'சாரே, ஆ பெண்குட்டி வீட்டு ஆட்கள் இவிடே வந்நு. பெரிய ப்ரச்ன சாரே!' என்றார்.
தொடரும்.
சரியான வழிகாட்டிகள் வாழ்வில் அமையாமல் போனதால் தானும் இழந்து பிறரையும் கசந்து பின்னர் பிடிப்பின்றி ஜடமாய் ஆன சிலரின் கதை ஞாபகம் வருகிறது 🙏
பதிலளிநீக்கு