முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விடிஞ்சா கல்யாணம்டா ராம்கி!

 

(ராம்கியின் கதை தொடர்கிறது)


மறு நாள் அதிகாலையில் மருத்துவமனையை அழைத்தோம். தூங்கிக்கொண்டிருக்கிறான், விரைவில் நலமடைவான் என அறிந்து கொண்டோம்.


அன்று முழுவதும் அவனது தூரத்து உறவுகளுடன் பேசியபோது மெல்ல மெல்ல காரணங்கள் புரியத்தொடங்கியது.


கோவையின் மலைக்கிராம பள்ளி ஒன்றில் ராம்கி ஒன்பது-பத்து வகுப்புகள் படித்துக்கொண்டிருந்த காலம். அவனது வகுப்பு ஆசிரியை, பள்ளிக்கூட அலுவல்களுக்கு இடையில் ராம்கியை அவ்வப்போது கடைக்கு அனுப்பி  (ஊர்க்கார பையன், இருவரது சொந்த ஊரும் ஒன்றே என்பதால்) மளிகைப்பொருட்கள், காய்கறிகள் என வாங்கச்சொல்லி, வாங்கியதை அவரது வீட்டில் சேர்க்கச்சொல்லி வேலை வாங்குவார். அவரது கணவரும் ஏதோ அலுவலகத்தில் வேலை. ராம்கி வயதை ஒத்த ஒரு மகள் அவருக்கு. பல நேரங்களில் ராம்கி அவரது வீட்டு கதவை தட்டும்போது அவள்தான் திறப்பாள்.


நட்பு மலர்ந்து, "அறியாத வயசு, புரியாத மனசு...ரெண்டும் சேர்ந்து காதல் செய்யுதே" என பழகத்தொடங்க, தாமதமாக தெரிந்துகொண்ட ஆசிரியை ராம்கியை கடுமையாக மிரட்டி பள்ளியிலிருந்து நீக்குகிறார். ஏனென்று கேட்க அப்பா என ஒருவரும் அவனது வீட்டில் இல்லை.


ஆனாலும் சிறுசுகளின் தொடர்பு தொடர்த்தபடியே இருக்கவும் தொடர் நிர்பந்தத்தால் ராம்கியின் குடும்பமே ஊரை காலி செய்து சொந்த ஊருக்கு திரும்ப நேரிடுகிறது.


அடுத்த இரண்டாண்டுகளில் சிறுசுகள் இரண்டும் பழைய கனவுகளை மறந்திருக்கும் என நினைத்து, ஆசிரியையும் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு (ராம்கியின் ஊருக்கு) திரும்ப, பஞ்சும் நெருப்பும் பக்கத்தில பக்கத்தில கதையாய் பற்றிக்கொள்கிறது மறுபடியும். ராம்கி இப்போது தோட்டங்களில் வேலை செய்து சம்பாதிக்கிறான். அவனது வயது கூட்டாளிகளும் சேர்ந்துகொள்ள, கூடா நட்பின் கெட்ட பழக்கங்களும் தொற்றிக்கொள்கிறது. அவனை வழி நடத்த ஆண்துணை எதுவும் வீட்டிலில்லை.


சிக்கல்கள் அதிகமாகவும், அவன் அங்கு இருந்தால் சரிவராது என இம்முறை ராம்கியை அவனது உறவினர் கோவைக்கு எங்களிடம் பணி புரிய அழைத்து வந்திருக்கிறார் ('இவங்ககிட்ட இருந்தா நல்லா பாத்துப்பாங்க, ஏதாவது நல்ல வழியில பொழச்சிடுவான்' என்கிற நம்பிக்கையுடன்).


அவன் வந்த சில நாட்களிலேயே தொடர்ந்து மொபைல் அழைப்புகள், அவனது காதலியிடமிருந்து ("ஆயாளு எப்போ நோக்கிலும் மொபைல்லயே சாரே" என வினு சில முறை எங்களிடம் சொன்னபோதும் எங்களுக்கு தீவிரம் தெரியாமலே கடந்திருந்தோம்...). 


ஊரிலே அவளுக்கு வேறு வரன் பார்ப்பதாகவும், அவளை காப்பாற்ற ராம்கி ஏதாவது செய்யவேண்டும் எனவும் அவனுக்கு அவளிடமிருந்து தொடர் அழுத்தங்கள்.



மனம் விட்டு பேசவோ, வழி காட்டவோ அந்த சிறுவனுக்கு யாருமில்லை (அவனது வயது பத்தொன்பதுதான் என பின்னர்தான் எங்களுக்கு தெரிந்தது). தனக்குள்ளே குமைந்துகொண்டிருந்தவனை தேடி ஒரு நாள் அவனது சொந்த ஊரிலிருந்து  நண்பன் ஒருவன் கிளம்பி வந்து சொன்ன தகவல் அவனுக்கு பேரிடி;


"அவளுக்கு அவுங்க வீட்ல கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணீட்டாங்கடா. நாளைக்கு கல்யாணம்..."


சித்தம் கலங்கியவனாய் ராம்கி.


அடுத்த ஒரு மணி நேரம் தொடர்ந்து அவளுடன் போனில் தொடர்புகொள்ள முயன்றிருக்கிறான், அவள் அழைப்பை எடுக்கவில்லை.


மது தடைசெய்யப்பட்ட தொல்குடி பூமி அது. ஆனாலும் ஒரு கடையில் ரகசியமாய் கிடைக்கும் மதுவை வாங்கி நண்பனுடன் சேர்ந்து அருந்திவிட்டு அவனுடனே வீடு திரும்பி, அம்மாவிடம் எதுவும் பேசாமல் தனியே நண்பனுடன் மறுபடி வெளியேறி, சாலையில் தோட்டம் ஒன்றின் அருகில் கிடந்த பழைய உயிர்க்கொல்லி பாட்டிலை கண்டு எடுத்து... கன நேர உந்துதலில் திறந்து வாயில் கவிழ்த்திருக்கிறான். பதறிப்போன நண்பன் அவனை வீட்டுக்கு மீண்டும் இழுத்து வந்து அவனது அம்மாவிடம் எதையும் சொல்ல பயந்து, உடனே கிளம்பி அவனது ஊருக்கு ஓடிவிட்டான்.


சிறிது நேரத்தில் ராம்கிக்கு வாயில்  நுரை தள்ள, உயிர் பயத்தி்ல் செய்வதறியாது ஒரு விலங்கு போல கை கால்களை முறுக்கிக்கொண்டு துவளவும் அவனது அம்மா உடனே வினுவை மொபைலில் அழைக்க... வினு வந்து பார்த்து நடந்ததை ஊகித்து அவனை இன்னொரு நபரின் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி உடனே அருகில் உள்ள ஆரம்ப நல மையத்தில் முதலுதவி தரச்செய்து அவர்களது ஆலோசனையின் பேரில் ஆம்புலன்சை அழைத்து, அதன் பின் எங்களை அழைத்து, 'சாரே, ஆயாளு பாய்சன் அடிச்சிருக்கு சாரே' என்றார்.


ஒரு வாரம் கழித்து ஒரு நாள் ராம்கி மொபைலில் அழைத்தான். 'என்னைய மன்னிச்சிடுங்க சார். என்ன செய்றதுன்னு தெரில. சொல்லித்தரவும் யாருமில்ல. ஏதோ வேகத்தில அப்படி பண்ணிட்டேன். அம்மா, அக்கா எல்லாம் ஏசினாங்க சார். பொறுப்ப உணர்ந்திட்டேன். சென்மத்துக்கும் மறுபடி அந்த தப்ப பண்ணமாட்டேன். என்னைய வேலய விட்டு அனுப்பிடாதீங்க சார். அம்மாவும் அக்காவும் என்ன நம்பிதான் இருக்காங்க சார். என்னைய விட்டா அவுங்களுக்கு யாருமில்ல. எங்களுக்கு வேற எடமும் இல்ல' என்றான் அழுகையின் இடையில்.


அனுப்புவதா வேண்டாமா என நாங்கள் யோசித்து யோசித்து குழப்பமே மிஞ்சியது (இவ்ளோ ரிஸ்க் வேணவே வேணாம் vs புரியாத வயசு, சொல்லித்தர ஆளில்ல. உணர்ச்சி வசத்தில பண்ணிட்டு வருத்தப்படறான், ஒரு வாய்ப்பு தருவமே).


கருணை வென்றது. ஆனாலும் அதனால் நாங்கள் தோற்றுப்போனோம் என்பதை பின்புதான் உணர்ந்தோம்.


காத்திருங்கள், கதைப்போம்...


தொடரும்.






கருத்துகள்

  1. கடவுளாய் மாறி நாம் சிலரை காக்க முயன்றாலும் அவர்கள் தன் மனிதம் கொன்று நமக்கு மானக்கேட்டினை கொடுக்கும் கொடுமை போல பெரும் தண்டனை வேறில்லை. நல்லாருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பாக அமைவதில்லை 🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...