சாரே, ஆயாளு பாய்சன் அடிச்சிருக்கு சாரே!
வினு, அட்டப்பாடியில் எங்கள் தோட்டம் இருக்கும் சிற்றூரில் இருந்து ஒரு மழைபெய்துகொண்டிருந்த முன்னிரவில் அழைத்து சொன்னார்.
ஆயாளு - ராம்கி என்கிற மகேந்திரன்.
அந்த இளைஞனை எங்கள் தோட்டப்பொறுப்பாளராக அமர்த்திக்கொடுத்தவர், 'ரொம்ப கஷ்டப்படுகிற குடும்பம் சார். அப்பா அம்மா தகராறு. பையன் அம்மா, தங்கைனு தனியா மலைல வாழ்க்கை. அக்காவை கட்டி கொடுத்து, தங்கையை படிக்க வைத்து என நித்ய போராட்டம் சார். நல்லா தோட்ட வேலை செய்வான். நம்பி சேத்துக்கலாம், என் மனைவியோட தூரத்து உறவு' என சில மாதங்கள் முன்புதான் பரிந்துரைத்திருந்தார்.
"வரச்சொல்லுங்க. நேர்ல பாத்து பேசிடலாம்.என்ன வயசிருக்கும்?" என்றோம்.
இருவது இருக்கும் என்றார்.
மறு வாரமே ராம்கி, அம்மாவை அழைத்துக்கொண்டு வந்தான். தங்கை கோவையில் ஒரு அரசுக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிப்பதாக அறிந்தோம்.
நேரில் பார்க்க பதின்ம வயது தாண்டாத தோற்றம். ஆனால் வயது கேட்டபோது இருபது என்றான். களையான முகம், உடல் உழைப்பை அடிப்படையாக கொண்டோரின் உடலமைப்பு. அவனது அம்மா மிக பயந்நு பயந்து பேசினார்.
அறிமுகம் செய்த மனிதரிடம், 'சின்ன பையனா தெரியிறானே சார்...?' என்றோம்.
"இல்ல சார். +2 வோட நிறுத்திட்டாங்க.்ரெண்டு வருசமா தோட்ட வேலைக்கு போய்ட்ருக்கான்" என்றார்.
அவர்கள் தங்கள் சொற்ப உடைமைகளை ஏற்கனவே கட்டி கொண்டுவந்திருந்தனர்.
அடுத்த நாளே வேலையில் நியமித்தோம். தோட்டத்தில் இருக்கும் பழைய வீட்டை ஆயப்படுத்தி, அன்றாட பொருட்கள் (சோப்பு, சீப்பு, கண்ணாடி) முதல் சமையலுக்கு தேவையான அடிப்படை பாத்திரங்கள், இரும்பு கட்டில், தலையணை என வாங்கித்தந்தோம் (ஊதியத்தில் மெல்ல பிடித்துக்கொள்கிறோம் என).
அட, பாய்சன் அடித்திருந்த ராம்கியை அப்படியே விட்டுவிட்டு முன்னுரையே இவ்வளவு நேரம்!
'என்னாச்சிங்க வினு?'
வினு - அந்த கிராமத்தில் நாங்கள் நிலம் வாங்க உதவிய மனிதர்.
'தெரில சாரே. ஞான் காணும்போழ் ஆயாளு வாயெல்லாம் நொரை தள்ளி' என்றார்.
அவனது அம்மா அவரை அழைத்து உதவி கேட்கவும், உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து அவனை பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். என்ன நிகழ்ந்தது என அவனது அம்மாவுக்கு தெரியவில்லை என்றார்.
அன்று மாலை சில மணி நேரங்களுக்கு முன்புதான் ராம்கி அந்த மாத ஊதிய்யத்தொகை வாங்கி அவனது அம்மாவுக்கு பொழுது போவதற்காக 12000 ரூபாயில் ஒரு வண்ண தொலைக்காட்சி பெட்டியை தவணை முறையில் வாங்கியிருந்தான். அவனை நம்பி தரலாம் என எங்களை அழைத்த கடைக்காரரிடம் நாங்கள் சொல்லியிருந்தோம்.
ராம்கி அங்கு வந்து அன்றோடு மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. இந்த 90 நாட்களில் வீட்டுக்கூரைக்கு பாலிதீன் கவசம் (பருவ மழை அடைத்து பெய்யும் பருவம், சில இடங்களில் நீர் ஒழுகும்), அவன் கேட்டதால் இரு நாய் குட்டிகள், ஒரு புல் வெட்டும் இயந்திரம், சில கருவிகள் வாங்கி தந்திருந்தோம். ஆடுகள் வளர்க்கிறேன் என ஆர்வம் காட்டியதால் முன் தினம்தான் அவ்வூரிலிருந்து சற்று தொலைவில் ஒரு மலை முகட்டு பண்ணையொன்றில் பாதையே இல்லாத பாறை மேடுகளில் ஒரு பழைய வில்லிஸ் ஜீப்பில் அலுங்கி குலுங்கி பயணித்து ஆடுகளை விலை பேசி, அனுப்பச்சொல்லி வந்திருந்தோம்.
'பாவம். தங்கையை படிக்கவைக்க இவன் படிப்பை விட்டிருக்கிறான். நாமே இவனை படிக்கவைப்போம். வேளாண் கல்லூரியின் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவோம். இவனது அம்மா சமைத்து தந்தால் இங்குள்ள இன்னொரு சிறு வீட்டை ஒரு 'வேளாண் கற்றல் விடுதியாக' மாற்றி நிர்வகிக்க சொல்வோம். அவர்கள் முன்னேறட்டும்' என திட்டங்கள் பல தீட்டியிருந்தோம்.
ஆனால் அவசரமாய் ராமகி பாய்சன் அடிச்சி!
அந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அவனுக்கு வாய் வழியே குழாயில் கரைசல்கள் செலுத்தி வாந்தியெடுக்க வைத்து, ஊசி, மருந்துகள் தந்து, 'கோவைல G.H க்கு போய்டுங்க. நைட் தாண்டினா தப்பிடுவான்' என மலையாள மருத்துவர், வினுவிடம் சொன்னபோது இரவு 10 மணி. வினு எங்களிடம் சொன்னதும் மருத்துவமனையிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருந்த அவனது தூரத்து உறவினரை (அவர்தான் ராம்கியை எங்களிடம் அழைத்து வந்தவர்) அழைத்து தகவல் சொன்னோம். 'ஆம்புலன்சு இன்னும் அரை மணி நேரத்தில ஒங்க ஊரு செக்போஸ்ட தாண்டும். கூட போயி பாத்துக்கோங்க. நாங்க நூறு கிமீ தொலைவில் இருக்கோம்' என நிலைமையை சொன்னோம்.
'சரி சார். வீட்ல பேசிட்டு , அவன் அம்மாகிட்டயும் பேசிட்டு கூப்பிடுறேன்' என்றார்.
வினுவை வீட்டுக்கு போகச்சொல்லி நன்றி தெரிவித்து பின் அழைப்புக்காக காத்திருந்தோம்.
கலவரமான மனநிலையில் காத்திருந்தோம், " ஏன் இப்படி ராம்கி?!" என்கிற கேள்வியுடன், 'அவனுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது' என்கிற வேண்டுதலுடன்.
அவனது உறவினர் அரை மணியில் அழைத்தார். விரக்தியான குரலில் 'பேசினேன் சார். ஏன் இப்டி பண்றான்னு ரொம்ப சங்கடமா இருக்கு சார். ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆய்டிச்சின்னா போலீசு கேசு அது இதுன்னு ஆய்டும் வீட்ல பயப்படறாங்க. ராம்கியோட அம்மாவையே பாத்துக்க சொல்லீட்டோம் சார்' என்று சொல்லி இணைப்பை துண்டித்தார்.
ஆம்புலன்சில் உடன் பயணித்த ராம்கி அம்மாவை அழைத்து 'என்னம்மா நடந்தது? அவனுக்கு என்ன பிரச்னை?' என்று கேட்டோம்.
"தெரில சார். வேலைய முடிச்சிட்டு கை கால் களுவிட்டு வந்தவன், ஊர்லேந்து கூட்டாளி ஒருத்தன் வந்ததும் அவனோட வெளீல போய்ட்டு வந்தான். அப்றம்தான் இப்படி... கூட்டாளியும் ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லிட்டு பயந்துபோயி கெளம்பிட்டான். எனக்கு ஒண்ணுமே புரியல சார்' என்றார்.
தூக்கமிழந்த அந்த இரவில் கோவை G.H இல் அவனது தங்கையிடம் கைபேசி வழியே (தகவல் தெரிந்ததும் விடுதியிலிருந்து நேரே அங்கு வந்திருந்தாள்) நிலைமையை விசாரித்துக்கொண்டே நேரம் இரவில் கரைந்துகொண்டிருந்தது.
நள்ளிரவு தாண்டி, நேரம் தெரியவில்லை. ராம்கியின் அம்மா பேசினார்.
'கண்ணு முளிச்சிட்டான் சார். காலைல வீட்டுக்கு போலாமாம்' என்றார்.
'டேய்?! ஏண்டா??' என்ற கேள்வியுடன் உறங்கிப்போனோம்.
என்ன ஆனது அவனுக்கு? எதானால் இப்படி? கண்டுபிடிக்கத்தானே போகிறோம்!
தொடரும்.

ராம்கியின் நிலையும் உங்கள் மனநிலையும் கூடவே அந்த பரபரப்பும் இப்போது எங்களுக்கு தொற்றி விட்டது. விரைவில் விடை அளியுங்கள் 🥲
பதிலளிநீக்கு