முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியாண்டர்தால் இடியாப்பம்!


நம் தமிழ் உணவுகளிலேயே சிக்கலான உணவு இடியாப்பமாகத்தான் இருக்கும்.

ஊறவைத்த அரிசியோடு தேங்காய் கலந்து அளவாய் உப்பு இட்டு மாவாக அரைத்து, இட்டிலித்தட்டுகளில் கரண்டி கரண்டியாக ஊற்றி ஆவியில் வேகவைத்து, வெந்த பின்பு இட்டிலிகளை ஒன்றுக்கு இரண்டாய் இடியாப்பம் பிழியும் அச்சில் திணித்து பிழியப்பிழிய கீழ் தட்டில் மிருதுவாக நூல் நூலாய் இறங்கும் இடியாப்பத்தை தட்டு சுற்றிச்சுற்றி சேர்த்து, பின் தேங்காய் சர்க்கரை சேர்த்து கொஞ்சம், மிளகுத்தூள் சேர்த்து கொஞ்சம், கடுகு வரமிளகாய் தாளித்த எலுமிச்சைச்சாறு கொஞ்சம், புளியோதரை குழம்பு கொஞ்சம், சின்ன வெங்காய சாம்பார் கொஞ்சம், தயிர் கொஞ்சம் என தனித்தனியே சேர்த்து கிளறி, குடும்பத்தோடு அமர்ந்து உண்ணும் சுகம், விக்ரம் வேதா திரைப்பட பரோட்டா நல்லிக்கறி அனுபவத்தை விட மேன்மையானது என்பதை உண்டவர் உணர்வர்!


நியாண்டர்தால் காலத்தில் இடியாப்பம் அறிந்திருக்கவில்லை. தீ பற்றியும் அறிந்திருக்கவில்லை. 

பிற்பாடு பரிணாம வளர்ச்சியில் நவீன மனிதர்கள் வளர்ந்து நாகரிகம் வளர்த்து இடியாப்பம் உண்டு இன்று செவ்வாயில் ரியல் எஸ்டேட் கனவுகளில் மிதந்தாலும் நம் பரிணாம தொன்மத்தின் எச்சமாய் நம் உடலில் இன்னும் வால் எலும்பு, Appendicitis எனப்படும் குடல்வால் என பயன்ற்ற சில தங்கிப்போயின.

இவை நம் உடலில் தங்கிய எச்சங்கள் என்றால் நம் சிந்தனைகளில் இதைவிட பல மடங்கு எச்சங்கள் தங்கிப்போய் ஒட்டடை படிந்து வௌவால்கள் தங்கி நாற்றமெடுத்துக்கொண்டிருக்கின்றன.

மதங்களின் பெயரால் பெரு வௌவால்கள் (Bats) என்றால் சாதிகள் பெயரால் சிறு வௌவால்கள்...


மதங்களும் சாதிகளும் இருப்பது தவறில்லை, நமது நிலப்பரப்புகளும் எல்லைகளும் இருப்பது போல.

ஆதி மனிதர்கள் சிறு குழுக்களாக வேட்டையாடத்தொடங்கிய காலத்தில் உருவான குழுக்கள், அவர்கள் கடைப்படித்த வாழ்வியல் ஒற்றுமைகள் அவர்களை இணைத்ததுபோலவே வாழ்வியல் வேற்றுமைகள் ஒரு குழுவை மற்றொரு குழுவிலிருந்து வேறுபடுத்தி இனம்காண உதவின. குழுக்கள் இனங்களாகி இனங்கள் சாதிகளாகி சாநிகள் மதங்களில் இணைந்தது வரையில் சிக்கல் எதுவும் இல்லை. நம் பெயர் நமக்கு எப்படி அடையாளமோ அது போலவே இன, மத, சாதிகளும் அடையாளங்களாக மட்டுமே இருந்த காலங்களில் நம் உலகு நலமுடனே இருந்தது. 

குழு மனிதர்கள் நாடோடி வாழ்வின் இன்னல்களில் சிக்கி அலுத்துப்போய், 'போதுமப்பா. அலைவதை நிறுத்தி ஓரிடத்தில் நிலைபெறுவோ'மென முடிவெடுத்து காடு திருத்தி கழனியாக்கி உழைத்து, உட்கார்ந்து உண்டு ஓரிடத்தில் உறங்கத்தொடங்கியது ஐயாயி்ரம் ஆண்டுகளுக்கு முன்பு.


அந்த வாழ்வில் 'சுழன்றும் ஏர் பின்னது உலகு' என பிற்காலத்தில் வள்ளுவனை எழுதவைத்த சமுதாய அமைப்பு இருந்தது. நாம்தான் மறந்துபோனோம் அல்லது மறக்கவைக்கப்பட்டோம்.

உழவை, உழுபவரை மையமாக கொண்ட இந்த வாழ்வியல் காலத்திலும் தொழில் சார்ந்த சாதிகள் இருந்தன. 

உருக்கு கருவிகள், வேளாண்மைக்காக தேவைப்படும்போது கொல்லர் தனக்கு கிடைக்கப்போகும் விளைபொருளை உருக்குக்கு ஈடாக தருவதாக சொல்லி உருக்கு வாங்கி தளவாடம் செய்வார். 

தளவாடத்தை வேளாளரிடம் தந்து பின்னாளில் விளைபொருளாய் பெறுவார்.

விளைபொருள் என்பது அறுவடைக்கப்புறம்தானே; 'அதனாலென்ன, வட்டியோடு தா' என்று சொல்லமாட்டார். பொறுமையோடு காத்திருப்பார்.


செருப்பு தைப்பவராக இருக்கட்டும், ஆடை நெய்பவராக இருக்கட்டும், வெளுப்பவராக இருக்கட்டும், நாவிதராக இருக்கட்டும், நகை செய்பவராக இருக்கட்டும், அவர்கள் செய்த உதவிக்கு விவசாயியிடமிருந்து ஈடு பெற்று வாழ்ந்தனர். விளைவிப்பவர்கள், இவர்கள் எல்லோருடைய உதவியும் பெற்று, விளைவித்து, உதவிக்கு ஏற்ப உதவியவர்க்கு பகிர, அவர்கள் எல்லோருக்கும் உதவுவர்! ஒரு விவசாயி வீட்டு நல்லது கெட்டது அனைத்திலும் இவர்கள் அனைவரும் உழைப்பார்கள். இவர்கள் அனைவரது உணவுத்தட்டுகளிலும் விவசாயி தந்த விளைபொருள் உணவாக விளைந்து நிற்கும்.

இதில் நான் குறிப்பிட்ட அனைத்து தொழில் செய்பவருக்கும் சாதிகள் இருந்தது. இங்கு அதிகாரக்குவிதல் இல்லை, பகிர்தல் மட்டுமே இருந்தது. இடியாப்ப மாவு பலவகை சுவை கொண்ட உணவாக ஆனதுபோல்.


வேளாண் நிலங்களை சுற்றி ஊர்கள் உருவாகி, நிர்வாக கட்டமைப்பு வளர்ந்து, வணிகம் நிழைந்து, அரசர்கள் உருவாகி, பொருள்குவிப்பு மையப்படுத்தப்பட்டு, இதை நிர்வாகிக்க அதிகாரங்கள் உருவாக்கப்பட்டு, தடையில்லாத பொருட்குவியல் நோக்கி திட்டங்கள் தீட்டப்பட்டு, விருப்பமில்லாவிட்டாலும் குலத்தொழிலே தலையெழுத்து (வேறு ஆளில்லை செய்ய. நீயே தொடரவேண்டும்) என கட்டாயப்படுத்தப்பட்டு, மையப்பொருளாதாரம் உருவாகி, பொருளாதாரம் தொய்வடைந்தால் ஈடு கட்ட வரிகள் உருவாகி, வரி நிர்வாகம் உருவாகி, வரி நிர்வாகிப்போர் சிற்றரசர்கள் போல செழிக்க, நாட்டின் செழிப்பு அந்நிய படைகளை ஈர்க்க,  எங்கோ தேவைக்கான அடிப்படையில் உருவான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாய கட்டமைப்பு, வணிக அதிகாரத்தால் ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கப்பட்டு, அனைத்து சாதிகளும் இவற்றுள் அடைக்கப்பட்டு அவற்றின் மீது மத சின்னங்கள் பூசப்பட்டு மக்கள் கூண்டு மனிதர்களாய் தம் மத சாதிக்கூண்டுகளுக்குள் பூட்டப்பட்டு... நாகரிக மனிதர்கள் இந்த அடுக்குகள் வழியே தங்கள் வாழ்க்கையை வாழ பழகிக்கொண்டனர். திறந்த வானம் அறியா கூண்டுப்பறவை குஞ்சுகளாய் அவர்களது வம்சாவளியினர் குறுகிப்போக, அதிகாரம் கூண்டு மீறுபவர்களை சமுதாயத்திலிருந்து ஒதுக்கி கடுமையாக தண்டித்தது. அவர்களோடு யாரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாதென தடைகள் விதித்தது. இது இன்றுவரை தொடர்கிறது, எனது சுதந்திர இந்தியாவிலும் மனதளவில் தடைகளில் இருந்து வெளிவர மறுக்கும் மனிதர்களின் வாழ்வில்.

வடக்கே, தெற்கே, மேற்கே, கிழக்கே என மதங்களின் பெயராலும் சாதிகளின் பெயராலும்  சுதந்திர இந்தியாவில் கொலைகள் சுதந்திரமாய் நடந்துகொண்டிருக்கின்றன இன்றுவரையில். 


காலஞ்சென்ற S. S. பாண்டியன் என்கிற சென்னை கல்லூரிப்பேராசிரியர் நமது வர்ணாசிரமங்களை அலசுகையில், Lower castes Brahminise while Brahmins westernise என்றார்.

கீழ் சாதிகளின் மக்கள் மேல்சாதியினர் போல தம் வழ்வியலை மேம்படுத்த முனைகையில், மேல்சாதிகளின் மக்கள் மேலைநாட்டினர் போல தம் வாழ்வியலை மேம்படுத்த முனைகின்றனர் என்பதே இதன் பொருள்.

இன்றைய இந்தியாவில் வரையறைகளை எளிதாக மீறுவது மேல் சாதியினருக்கே சாத்தியமாகிறது. அதிகார மையங்களும் துணை நிற்கின்றன. கீழ் சாதிகள் என அடையாளமிடப்பட்ட மக்கள் தங்களது குடும்பங்களில் யாராவது அவர்களை விட கீழான சாதியினர் என்கிற அடையாளம் கொண்டோருடன் உறவாடினால் தம் கௌரவத்துக்கு, மேல்சாதி வாழ்வியல் நோக்கி ஓடும் தம் முயற்சிக்கு இது தடை என்கிற காரணங்களால் உறவாடுபவரை கொன்று சிறை செல்வதை சரியென நம்புகின்றனர். நம்பிக்கையை செயலாக்குகிறார்கள். இவற்றில் அறுதிப்பெரும்பான்மை வன்முறை கீழ் சாதிகளின் மீதுதான் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. சாதி, மத ஓட்டு வங்கிகள் உருவாக்கிய அரசுகளும், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் காவல், நீதி துறைகளும் பாதிக்கப்பட்டவர்களை காக்க அதிகம் முயல்வதில்லை.


காந்தியும் பெரியாரும் கனவு கண்ட பெண் விடுதலை, அம்பேத்கர் கனவு கண்ட சாதித்தளைகளிலிருந்து விடுதலை - அவை எல்லாம் இன்றும் கனவாகவே இருக்கின்றன. கடந்த சில வாரங்களில் எத்தனை எத்தனை வெறுப்புக்கொலைகள்? மேல் சாதி சிறுவனை 'Beta'' என அழைத்த குற்றத்திற்காக கீழ் சாதி மனிதர் ஒருவர் ஒருவர் கொல்லப்படுகிறார். மேல்சாதி பெண்ணை காதலித்ததால் வசதியிருந்தும் கீழ்சாதி இளைஞர் ஒருவர் கொல்லப்படுகிறார். இரு கீழ்சாதி சிறுமிகள் ஊரெல்லையில் மரத்தில் கயிற்றில் தொங்கவிடப்படுகின்றனர், இன்னும் சில பெண்கள் சிதைக்கப்படுகின்றனர், கீழ்சாதி மாணவர்கள் தம் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர், கீழ் சாதி ஆசிரியர் மேல் சாதி மாணவதரகளால் தாக்கப்படுகின்றார்...


குற்றம் இழைப்பவர்கள் யாரும் இவற்றை குற்றமாகவே கருதாத அளவு புரையோடிப்போயிருக்கிறது நம்மிடையே வர்க்க பேதம்.

இவை யாவும் மாற, காந்தி பெரியார் பாரதி அம்பேத்கர்கள் கண்ட கனவு, உழைத்த கனவு நனவாக இங்கு இரண்டு அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும்.

1. அனைவர்க்குமான சமக்கல்வி, அது நிகழ்த்தும் பொருளாத வளர்ச்சி

2. தனி மனித சிந்தனையில் மாற்றம் - கூண்டுகளை உடைத்தெரிந்து நீல வான சுதந்திரம் நாடும் முனைப்பு.


அரசுகளையும் அரசு இயந்திரங்களையும் மட்டுமே நம்பியிருந்தால் இது மாறப்போவதேயில்லை.

அமைப்பு சரியில்லை எனத்தெரிந்தும் அந்த அமைப்பு வழியே தீர்வு தேடுதல் என்பது இடியாப்ப சிக்கலை பிரிக்க இடியாப்பத்திடமே உதவி கேட்பது போல. பிழிந்த இடியாப்பத்தை நீரில் சாயம் போக(!) கழுவி, மீண்டும் இட்டிலிப்பந்தாக்கி வேறொரு அச்சில் இட்டுப்பிழியவேண்டிய நேரமிது.

இது தவிர நம் நியாண்டர்தால் மனங்களை முன்னேற்ற வேறு சிறந்த வழி எதுவும் தெரியவில்லை...



பேரன்புடன்,

பாபுஜி





கருத்துகள்

  1. இடியாப்ப உணவு சுவை மனதில் இனிக்கும் அதே தருணத்தில் சமூகத்தின் இடியாப்ப சிக்கல்கள் மிகவும் கசக்கிறது. எலான் மாஸ்கிடம் மனதினை வெள்ளாவி வைக்க ஒரு கருவியை வேண்டுகோளை வைப்போம் 🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...