முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

என் தேசத்தின் இறுதி விடுதலை

 

கதைப்போமா? 


Leftist... Rightist... Centrist... Catalyst!


வர்ண பேதங்களால் நாம் கட்டி ஆள்கிற நம் சமுதாயத்தில் உரிமை மறுக்கப்பட்டவரெல்லாம் இடது சாரி, உரிமையை தீர்மாணிப்பவரெல்லாம் வலது சாரி என குழுக்களாக வாதம் செய்து வாதம் செய்து நாடே 'பக்க' வாத நோயினால் வாடிக்கொண்டிருக்கிறது.


இவை இப்படியென்றால்... லெப்ட்ல கை காட்டி ரைட்ல சிக்னல் போட்டு ஸ்ட்ரெயிட்டா ஓட்டுவான் நம்ம ஆளு என ஒரு குழு மைய வாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறது.


நாமெல்லாம் டாக்டரில்லப்பா, அதனால நமக்கும் இந்த 'வாத' நோய்களுக்கும் சம்பந்தமே இல்லை எனக்கூறிக்கொண்டு இன்னுமொரு குழு நம் மண்ணிலேயே மேற்கத்திய வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கிறது. இவர்களது சூரிய உதயம் மேற்கே! இவர்களை Creme of The Society என்கிறார்கள். இவர்களது 'வாதம்'... பண வாதம்.


இத்தனை குழுக்கள் போதாதென இன்னும் சில குழுக்கள் மத 'வாதம்' தாக்கி, நோயில் வாழ்கின்றனர்.


இத்தனை குழுக்களுக்கும் வாதங்களுக்கும் இடையில் ஒரு குழு மட்டும் இவர்கள் அனைவருக்கும் சோறிட ராப்பகலாய் உழைத்துக்கொண்டிருக்கிறது. இவர்களை பிழைக்கத்தெரியாத குழு என்று சொல்லலாம் அல்லது Catalysts என்றும் சொல்லலாம் அதாவது, நம் நாடு வேதி வினைகளால் உரு மாற உறுதுணையாய் உணவு தர உழைக்கும்  வினையூக்கி இந்தக்குழு. இந்த வினையூக்கியின் (Catalyst) பொருளாதாரம்  மட்டும் இந்த வேதி வினைகளால் உருமாறாமல் தரித்ரம் பரம தரித்ரம் என்பதாதவே நிலைக்கும்.


இவர்கள் தரும் உணவை உண்ட மற்ற எந்த குழுவுக்கும் இவர்கள் மீது  செஞ்சோற்றுக்கடன் உணர்வு எதுவும் இல்லை, இல்லை, இல்லவே இல்லை.


இந்த வாத நோய்கள் அனைத்திலும் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்த ஒரு சிறு குழு மட்டும் சிக்கல்களின் தீவிரங்கள் கண்டு அசராமல் உழைத்தது, நம் அனைவரின் நிசமான சுதந்திரத்திற்காக.


அவர்களால் இயன்றதை செய்துவிட்டுதான் மறைந்தார்கள். அவர்களுள் காந்தியென்றும் அம்பேத்கர் என்றும் சில தலைவர்கள் மட்டுமே இன்றும் பேசப்படுகிறார்கள், ஏசப்படுகிறார்கள் ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை முன்னெடுத்து நடத்த இங்கு பெரும்பான்மைக்கு மனதில்லை, சிறுபான்மைக்கு ஆற்றலில்லை. இடையிலுள்ளோர்க்கு நேரமும் ஆர்வமும் இல்லை.


அம்பேத்கர் போராடிய விடுதலை, சாதித்தளைகளில் இருந்து மட்டுமே. வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற காந்தி தலைமையில் மக்கள் போராடியபோது கூட அவர் 'இது எங்களுக்கான விடுதலை அல்ல. நாங்கள் விரும்பும் விடுதலை வேறு' என அம்பேத்கர் தனித்து தம் மக்களுக்காக போராடினார்.


வெள்ளையர் வெளியேறுவது உறுதி என்றானபின்பு காந்தியும் அம்பேத்கரின் கனவை நனவாக்க அரிஜன வேற்றுமை ஒழிப்பை முன்னெடுத்து நடத்த, அதை எதிர்த்தவர்களின் ஏழாவது கொலை முயற்சியில் வீழ்ந்துபோனார். 


சாதிச்சங்கிலிகள் அதன் பின்பு இன்னும் உக்கிரமாய் அவற்றின் பணியை இன்றுவரை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன.


நாம் சாதித்தளைகளில் இருந்து விடுதலையானோம் என்ற நிலை வந்தால்கூட இன்னும் ஒரு குழு மட்டும் அடிமையாகவே உழைக்கும். நாம் இப்போது இந்த 'பிழைக்கத்தெரியாத', பிணைக்கப்பட்ட குழுவுக்கு வருவோம்.


காந்தி முன்வைத்த கிராம சுயசார்பு என்பதன் தலையாய அங்கம் விவசாயிகளின் தற்சார்பு. அது விவசாயத்தை முன்னெடுக்கும் இல்லங்களின் விடுதலைக்கான அங்கம்.  ஆனால் வர்க்க பேதமின்றி விவசாயிகள் அனைவரும் பசுமை புரட்சியாலும் ('நிலங்களில் நஞ்சிடு, வெளிநாட்டு விதைகளை பயிர் செய்'), வெண்மை புரட்சியாலும் ('நாட்டு மாடுகள் பணம் தராது, பால் வணிக மாடுகளை வளர், எருவுக்கும் உழவுக்கும் வணிகர்கள் உரங்களும் இயந்திரங்களும் தருவார்கள், கடன்பட்டு வாங்கு, கடன்பெருகி உன்னை நீயே மாய்த்துக்கொள்') தொடர்ந்து ஏய்க்கப்பட்டு நலிவடைந்து இருந்த நிலையில் நம்மாழ்வார் போன்றவர்கள் 'விதைகளே பேராயுதம்' என்று  சொன்னதன் தீவிரம்தான் இன்றைய இயற்கை வேளாண்மை முன்னெடுப்பு. 


சாதி ஒழிப்பு எவ்வளவு அவசியமோ வறுமை ஒழிப்பும் அவ்வளவு அவசியம். அதுவும் உணவு உற்பத்தியாளர்களே வறுமையில் வாடுவது கொடிதினும் கொடிது... 


இயற்கை வேளாண் விளைபொருட்கள் விலை அதிகம் என்று வருந்துவோர், வேதி விளைபொருட்கள் ஏன் விலை குறைவு என சிந்திக்கத்தொடங்கினால்தான் நம் புரிதல் மாறும் (மானிய விலை வேதி உரங்கள், வேதி உரங்களாலும் உயிர்க்கொல்லிகளாலும் நிகழும் உயிர்ச்சூழல் பாதிப்பு செலவு, வேதி சூழலினாலும் உணவுகளாலும் கூடும் மருத்துவ செலவை கணக்கில் எடுத்துக்கொள்ளாதது, இயற்கை விளைபொருட்களின் குறைவான உற்பத்தியை சந்தைப்படுத்த ஆகும் இடைத்தரகர் செலவு என்னவோ ஒரே மாதிரிதான் என்கிற நிசத்தை புறக்கணிப்பது etc...).


இப்படி மாற்றி யோசித்து இயற்கை வேளாண்மையை நாம் அனைவரும் ஆதரித்தால் மட்டுமே நம் தேசத்தின் இறுதி விடுதலை உறுதியாகும். இல்லையென்றால் நம் காலடி நிலமும் நஞ்சாகி, காற்று நஞ்சாகி, குடி நீரும் நஞ்சாகி நாம் எல்லோரும் நஞ்சினால் நம் தலை முதல் கால் வரை நீலம் பூத்து, நவீன பெருவணிக பேராசை வணிக, மருத்துவ சாத்தியங்களால் மட்டுமே உயிருடன் திரிவோம், இயந்திரங்கள் போல. 



பேரன்புடன்,

பாபுஜி


கருத்துகள்

  1. உண்மை ஐயா. மேற்கத்திய நாடுகளில் புற்றுநோய் என்பது இன்று வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிய பின் Finland போன்ற நாடுகள் இயற்கை வேளாண்மை மட்டுமே இனிமேல் என மாறியுள்ளது. இந்த நிலைமை விரைவில் உலகெங்கும் பரவும். பரவட்டும். 🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...