முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இதயமே இதயமே, உன் மௌனம் என்னை...



கோவை நகரின் இதயத்துடிப்பை உணர எளிதான வழி, டவுன்ஹாலின் ஒப்பணக்கார வீதியில் ஏதாவது ஒரு சனிக்கிழமை மாலையில் நடந்து சுற்றுவது. 


ரயில்வே ஜங்ஷனின் பின்புறம் தொடங்கி பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகள் துவங்கும் இடம் வரை பரவியிருக்கும் ஒரு பெரிய இதயம் இப்பகுதி.

விலை உயர்ந்த நகைக்கடைகள், மலிவு விலை அலங்கார நகைக்கடைகள், சோப்பு, சீப்பு, செருப்பு, பெல்ட்டு, நாட்டு மருந்து, லாலா இனிப்பு, திரஜ்லால் மிட்டாய்வாலாக்கள், கடிகார கடைகள், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகள், இன்னும் ளராளமான கடைகளை உள்ளடக்கிய ஒரு மகா நெரிசலான பகுதி. ஏராளமான உணவகங்கள், இடையிடையே கோவில்கள் / மசூதி / தேவாலயம் + அங்கங்கே வட இந்திய சகோதரர்களின் வறுகடலை, அவித்த கடலை விற்கும் தள்ளு வண்டிகள் + நம்ம ஊர் பெண்களின் தட்டுக்கூடை பூக்கடைகள் என முடிவற்று நீளும் இப்பகுதி, இரவு நேரங்களில் நியான் வெளிச்சத்தில் நனையும்போது வேறொரு பரிமாணம் காட்டும்.


இந்தபகுதியின் தனித்தன்மை என்னவென்றால் இங்கு ஐந்து ரூபாய்க்கும் மகிழ்வு தரும் பொருட்கள் கிடைக்கும், ஐந்து லட்சத்துக்கும் கிடைக்கும். One of the few remaining Democratic spaces in which rich and poor jostle for space alike. ஒரு விதத்தில் நம் சமூக அடையாளங்களை சற்று நேரத்துக்காவது ஒதுக்கி வைத்து நாம் நாமாக இருக்கக்கூடிய வாய்ப்பை தரும் பகுதி இது.


இங்குதான் ஒரு மழைக்கால முன்மாலைப்பொழுதில் அந்தப்பெண்ணை பார்த்தேன்.

ஒரு நெரிசலான சாலையில் குறுகலான இரண்டு 'மொத்த வணிக' கடைகள். அவற்றிற்கு முன்னால், இரண்டு கடை சுவர்களும் சந்திக்குமிடத்தில் ஒரு பிளாஸ்டிக் பெட்டியை (Crate) கவிழ்த்து வைத்து அதன் மேல் ஒரு பெரிய மூங்கில் தட்டுக்கூடை. கூடையில் இரண்டு மலர்ந்த மல்லிகைப்பந்துகள், ஒரு முல்லைப்பந்து, ஒரு கதம்பப்பந்து, ஒரு அரளிப்பந்து, உதிரியாய் சில சந்தன நிற செண்பகப்பூக்கள். 

மூங்கில் தட்டின் எதிரில் இன்னொரு கவிழ்த்த பெட்டியின் மீது அமர்ந்திருந்த அந்தப்பெண்ணுக்கு பின்னைம்பதுகளில் வயது இருக்கலாம். காலருகில் ஒரு பிளாஸ்டிக் சாக்கு, கையருகில் ஒரு கட்டைப்பிடி வைத்த துணிப்பை. மொத்த கடையும் நாலடிக்கு இரண்டடியில் அடக்கம்.


இந்தக்கடையின் அருகில் அரைமணி நேரம், சனத்திரளில் காணாமல்போன நண்பருக்காய் காத்திருந்தேன். 


பேரமெதுவும் பேசாமல் சிலர் மல்லிகை வாங்கி நகர்ந்ததும் வேகமாக எழுந்த அந்தப்பெண், ஒரு கையில் துணிப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு (விற்பனைப்பணம் பையில்.) அதே சாலையின் மறுமுனை  நோக்கி வேகமாக நகர்ந்தார்.

ஆச்சு, பத்து நிமிடமாயிற்று, இருபது நிமிடமாயிற்று, காணவில்லை. இதற்குள் பல பெண்கள் என்னிடம் 'பூக்காரம்மா இல்லையா?' எனக்கேட்க, ஏதோ எனக்கு பொறுப்பு கூடிப்போன உணர்வில், 'இல்லைங்க. பக்கத்துல எங்கேயோ போயிருக்காங்க' என சொல்லத்தொடங்கினேன். சொல்லிக்கொண்டேயிருந்தேன் (ஆடி மாத டிமாண்ட்!).

மெல்ல ஒரு கவலை எட்டிப்பார்க்கத்தொடங்கியது. அந்தப்பகுதியின் இதயத்துடிப்பு என் கவனத்தலிருந்து நழுவத்தொடங்கியது.


இயற்கை அழைப்பை ஈடு கட்ட சென்றிருக்கலாம், ஆனால் இவ்வளவு நேரமாகாதே. இங்கு எங்கும் கழிப்பிடங்கள் கண்ணுக்கு தெரியவில்லையே. மறைவாக ஒதுங்கவும் இங்கு இடங்கள் இல்லையே... ஒருவேளை சென்ற இடத்தில் ஏதாவது இன்னல்கள்... என பலப்பல சிந்தனைகள்.

அரை மணி நேரம் கழித்து அதே வேக நடையில் அந்தப்பெண் எதிர் திசையில் இருந்து வருவதை கண்டதும் மனதில் நிம்மதி.


நட்புடன் புன்னகைத்து பூ வாங்கினேன். 'திடீர்னு காணாப்போய்ட்டீங்க? ஏழெட்டு பேர் பூ வாங்க வந்து போய்ட்டாங்க' என்றேன். மீதப்பணத்தை தந்துகொண்டே மெல்லிய குரலில், 'இருக்கும்போது யாரும் வரமாட்டாங்க சார்!' என்றார்.

அவர் சொன்னது பூ வாங்க வந்தவர்களை மட்டுமல்ல என்பதை அவரது குரலின் சோகம் உணர்த்தியது.


'எங்கே போனீங்கம்மா?' என்றேன்.


"பிளாஸ்டிக் கவரு தீந்திடுச்சி சார். வாங்கி வரப்போனேன்" என்றார்.


'கடை திறக்கிற முன்னாடியே வாங்கிருந்தா  இந்தப்பூ மொத்தமும் இன்னேரம் வித்திருக்கலாமே?' என்றேன்.


"அந்த அளவு யோசிக்க வாய்ப்பிருந்தா நா ஏன் சார் இப்படி ரோட்டில உக்காந்துட்டு பூ விக்கப்போறேன்?" என்றார். அடுத்த சில நிமிடங்களில் ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல தன் கதைச்சுருக்கத்தை பகிர்ந்தார்.


எனக்கு பொட்டில் அடி வாங்கியதுபோல ஒரு உணர்வு.


நாம் பிறரிடம் பார்க்கும் சிக்கல்களும் அதற்காக நாம் முன்வைக்கும் தீர்வுகளும் நம் வாழ்வின் அனுபவங்களை சார்ந்துமட்டுமே இருக்கும் வரையில் நம்மால் இங்கு எவருக்கும் உண்மையாய் உதவ முடியாது என்கிற உண்மை உரைத்தது.


ஒரு மீனவருக்கான திட்டம் தீட்டுபவர் மீனவராய் இருந்தால் மட்டுமே, ஒரு வறுமை பீடித்த மனிதரை பொருளாதர தளத்தில் முன்னேற்ற முயல்பவர்கள் வறுமையை அனுபவித்திருந்தால் மட்டுமே, ஒரு மாற்றுப்பாலின மனிதரின் இன்னல்களை நீக்க, ஒரு சுமைதூக்கியின் சுமைகளை குறைக்க அல்லது நீக்க... முடிவற்ற இந்தப்பட்டியலின் அடித்தளம், அனைவர்க்கும் கல்வியும் சமுதாய வாய்ப்புகளும், உரிமைக்குரல் எழுப்ப தளங்களும் வழங்குதல்தான் என்கிற அறம் புரியும். காமராசர் என்கிற மனிதரின் கல்வி முயற்சிகளின் பின்னால் இருந்த அறம் புரியும். ஏன் இன்று வரை நாம் காமராசர் ஆட்சி போல ஒன்றை தேடிக்கொண்டே இருக்கிறோம் என்பதும் புரியும். இன்று NVIDIA என்கிற செயற்கை நுண்ணறிவு ஜாம்பவான் நிறுவனத்தின் தலைவர் 'எனது நிறுவனத்தில் சேர உங்களது மேதைத்தனம் தேவையில்லை. வலிகள் நிறைந்த வாழ்க்கை பின்புலத்திலிருந்து வருபவர்க்கே முன்னுரிமை' என ஏன் சொன்னார் என்பதும் புரியும்.


Inclusive solutions can work only when they include the sufferers in decision making positions. Access to equal Education is the key to build this awareness. A platform to voice out their angst and a willing team to pull them out of their misery are the needs of the hour. None of our cults (personality based, religions based, castes based, purchase power based etc...) will help us to enable All in the truest sense of our Constitution.


பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...