தமிழ் என்பது மொழி மட்டுமா?
நம் ஊரில் ஒரு உணவகம்.
காலை டிஃபனுக்கு கூடிய கூட்டத்தின் நடுவில் சுறுசுறுப்பாய் ஆவி பறக்கும் இட்லிகளை தட்டில் ஏந்திக்கொண்டு, பூக்களில் தேன் குடிக்க தத்தித்தாவும் சிறு குருவி போல அந்த பெண் வெகுவேகமாய் பரிமாறிக்கொண்டே வந்தார்.
என் எதிரில் உணவருந்திக்கொண்டிருந்த ஒருவர் அந்தப்பெண்ணை நோக்கி ஏதோ வேண்டுமென்று குரல் கொடுக்க, அவரைத்தாண்டி சென்றுகொண்டிருந்த பெண் நின்று திரும்பி, 'ஓவ்' என்றார்.
அந்த மனிதரும் அந்தச்சொல் மிகவும் பழக்கமான ஒன்றாக பாவித்து தான் கேட்டதை மறுமுறை கூறினார்.
தலையசைத்து நகர்ந்த பெண் சற்று நேரம் கழித்து உணவு ஒன்றை அவரிடம் தந்து சென்றார்.
அவர் என் இருக்கையை கடக்கும் முன் நட்பு புன்னகையுடன் அவரை நிறுத்தினேன். ஏனெனில் ஓவ் என்ற அந்த ஒற்றைச்சொல் அவருடன் எனக்கு நொடியில் ஒரு நட்பு உணர்வை தந்திருந்தது.
'தஞ்சாவூரா?' என்றேன்.
நூறு சூரியப்பிரகாசத்துடன், "ஆமாங்கண்ணே!" என்றார். மேலே நான் எதுவும் கேட்பதற்கு முன் அவராகவே, 'இதோ, இங்கணதான், வல்லத்தில வீடு. வல்லம் தெரியுமா? வந்திருக்கீங்களா?' என வாஞ்சையுடன் கேட்டார்.
'வந்திருக்கேன்மா' என்றேன்.
'எங்க வீடு அங்க ரோட்டு மேலதான். அரசாங்கம் கட்டிக்குடுத்துருக்கு. வாங்கண்ணே! எங்க வீட்டுக்கெல்லாம் வருவீங்களா?!' என்றார்.
என்னுள் இவை பல அதிர்வுகளை ஏற்படுத்தின...
முன் பின் தெரியாத மனிதர்களிடம் எப்படி இவ்வளவு இலகுவாய் பழகிய உணர்வோடு வாஞ்சையோடு உறவினர் போல பாவித்து வீட்டுக்கு அழைக்க முடிகிறது? அதிலும் அந்த 'எங்க வீட்டுக்கெல்லாம் வருவீங்களா...' - வலித்தது. வலிக்கிறது.
நம்மில் அநேகம் பேர் பொருளாதார வளர்ச்சியை, அது தரும் வாழ்வின் "ஆசை நிவர்த்தி" கவர்ச்சிகளை துரத்திக்கொண்டு எங்கெங்கோ அலைந்து திரிகையில் இந்தப்பெண், தன் சொந்த ஊரிலிருந்து கூப்பிடு தூரத்தில் நிறைந்த மகிழ்வோடு தான் வேலை செய்யும் உணவகத்தில் உணவருந்த வருபவர்கள் இவரோடு வணிகம் தாண்டி உரையாடினாலே மனம் மகிழ்ந்து உறவு பாராட்டி வீட்டுக்கு வாருங்கள் என உரிமை கொண்டாட முடிகிறது? அதிலும், 'எங்க வீட்டுக்கெல்லாம்...' என்ற கேள்வியில்கூட பொறாமையோ, வருத்தமோ, வேதனையோ, வலியோ கூட இல்லாது matter of fact தொனியில் கேட்க முடிகிறது?
I am not trying to romanticise her life and her life philosophy here... I don't think she would really care even if I did!
சட்டென நட்பாகி, உறவு பாராட்டி, தன் வீட்டு சுப நிகழ்வில் பந்தியில் அமர்ந்திருப்பவாரக பாவித்து அத்தனை கூட்டத்திலும் தேடித்தேடி உணவுகள் கொண்டுவந்து உபசரித்து (அண்ணே, பூரிக்கிழங்கு கொஞ்சம் இட்லிக்கு தொட்டுக்கிறீங்களா? டேஸ்ட்டா இருக்கும்! புதினா சட்னி கெட்டியா இருக்கு. வைக்கட்டுமா?) என அத்தனை பேருக்கு பறிமாறும்போதும் அவர் காட்டிய கருணை, இன்று நம் அநேகரின் இல்லங்களில் கூட இருக்காது என தோன்றியது.
இந்த உணர்வுகள் அத்தனைக்கும் காரணமான அந்த ஒற்றைச்சொல், ஓவ், என் தஞ்சை மண்ணின் சொல். இங்குள்ள மனிதர்களின் வாழ்வியலோடும் உறவுகளோடும் பிணைந்த சொல். பொதுவாக நாம் ஓருவருடன் உரையாடுகையில் நாம் சொன்னதை அவர் ஒழுங்காக கேட்க இயலாமல் அல்லது புரிந்துகொள்ள இயலாமல் இருந்தால் அவர்கள் பயன்படுத்தும் சொல் இது. 'என்ன சொன்னீங்க? திருப்பி சொல்லுங்க' போன்ற நீளமான சொற்களை தன்னுள்ளே அடக்கிய ஒற்றைச்சொல் இது. 'கூப்டீங்களா?' அல்லது 'எதுக்கு கூப்டீங்க?' என வினவும் பொருளிலும் இந்தச்சொல் பன்படுத்தப்படுகிறது.
ஊரை விட்டு வெகுதூரம் சென்று, வாய்ப்பு கிடைக்கையில் ஊர் திரும்பி, இங்க எல்லாமே மாறிப்போச்சு என்கிற அலுப்பு தரும் உணர்வில் மிதக்கையில் இதுபோல ஒற்றைச்சொற்கள் சட்டென நம் வறண்ட வானிலையை மாற்றி நம்மை புன்னகைக்க வைத்து, மகிழ்வோடு நம் நிலத்தில் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் நம் வேர்களை நினைவுபடுத்தி நம்முள் ஏற்படுத்தும் அதிர்வுக்குளங்கள் எத்தனை எத்தனை!
நீங்கள் அடுத்த முறை தஞ்சையில் சுப்பையா டிஃபன் சென்டரில் உணவருந்திக்கொண்டிருக்கையில் ஓவ் என்கிற சொல் உங்கள் காதில் விழுந்தால் இந்தப்பதிவு அதை புரிந்து கொள்ள உங்களுக்கு உதவலாம் :-)
பேரன்புடன்,
பாபுஜி
PC: Sasikumar Ramanathan's fb page. Maybe subject to copyright.
அருமை அருமை. தமிழ் உணர்வு மட்டுமல்ல தமிழ் உணவும் சேர்த்தே நீங்கள் ஊட்டுகிறீர்கள் 😎👏🙏🏼
பதிலளிநீக்கு